சேலத்தில் 400 ஆண்டுகளாக ஒலிக்கும் பாரீஸ் நாட்டு ஆலய மணி

சேலம் செவ்வைப் பேட்டையில் ஜெயராக்கினி தேவாலயத்தின் மணி கோபுரத்தின் உச்சி மாடத்தில் மாட்டப்பட்டிருக்கும், பாரீஸ் மாநகரத்து வெண்கலமணி.

இத்தேவாலயம் இன்றைக்கு சரியாக 388 ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்று பாரம்பரியத்தைக் கொண்டதாகும். இந்தத் தேவாலயத்தின் வரலாறு தமிழ் உரைநடையின் தந்தை என்றும், தமிழ் உரைநடை வளர்ச்சிக்கு வித்திட்ட வித்தகர் என்றும் அழைக்கப்படும் தத்துவப் போதகர் சங்கை ராபர்ட் டீ நொபிலி அடிகளாரின் (Rev Fr. Rober De Nobili 1577 – 1656) சேலம் வருகையிலிருந்து துவங்குகிறது.

அவர் கி.பி 1623 ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளியிலிருந்து தொட்டியம், காரைப்போட்டனாறு வழியாகச் சேந்தமங்கலம் வந்து அங்கிருந்து சேலத்திருக்கு நடந்தே வந்துச் சேர்ந்தார். இப்படி வந்துச்சேர்ந்த சங்கை இராபர்ட் டீ நொபிலி சுவாமியாரை ஏற்று யாரும் உபசரிக்கவில்லை. அவருடைய கிறிஸ்தவச் சமயப் பிரசங்கத்தையும் யாரும் கேட்கவில்லை.

ஒரு பாழடைந்த சத்திரத்தில் தஞ்சமடைந்த அவர், அங்கு நோய்வாய்ப்பட்டார். அவர்மேல் இரக்கம் கொண்டச் செவ்வாப்பேட்டை வணிகர் ஒருவர் சுவாமியாரை தனது இல்லத்தில் ஏற்றுக்கொண்டு உபசரித்தார். தந்து வீட்டின் முன்புறம் திண்ணையினை சுவாமியாருக்கு அளித்தார். அந்த இடம் தற்போது சேலம் செவ்வாப்பேட்டை ஜெயராக்கினித் கத்தோலிக்கத் தேவாலயம் இருக்கும் இடமாகும்.

பின்னர், கிறஸ்தவ குருமார்கள் தங்கும் குருமனை ஒன்றும், பயணப்பட்டு வரும் கிறித்தவ யாத்திரீகர்களுக்கு தங்கும் சத்திரமும் ஒன்றும் அந்த இடத்தில் கி.பி 1840 ஆண்டுவாக்கில் கட்டப்பட்டது. கி.பி 1851 ஆம் ஆண்டு சேலம் செவ்வாப்பெட்டை ஜெயராக்கினி ஆலயம் சங்கை மகிமைநாதரால் கட்டப்பட்டது. பின்னர் 1860 ஆம் ஆண்டு அங்கு முப்பது அடி உயர மணிக்கோபுரம் சங்கை மகிமைநாதரால் கட்டப்பட்டு விமர்சையாக விழா எடுக்கப்பட்டது.

இப்படி திருநிலைப்படுத்தப்பட்டத் தேவாலயத்தில், பிரான்சு நாட்டின் தலைநகரானப் பாரீஸ் மாநகர் கிறிஸ்தவர்கள், வெண்கல மணியைக் காணிக்கையாக அனுப்பினார்கள். அந்த மணியில் ஆங்கிலத்தில் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது.

“VICARIATE APOSTOLIC OF PONDICHERRY
DISTRICT OF SALEM
I AM CALLED MARY YVES
PARIS 1869
..To the Roman Catholic..

அதன் தமிழாக்கம்:

“பாண்டிச்சேரி கத்தோலிக்க குருத்துவ மையத்திலிருந்து சேலம் மறைமாவட்டத்திற்கு.. என் பெயர் மேரி ய்வேஸ். பாரீஸ் 1869.. ..கத்தோலிக்க தேவாலயதிருக்கு…”

இனிமையான ஓசையுடன் ஒலிக்கும் இந்தத் தேவாலய மணியோசை சந்தடி நிறைந்த செவ்வாப்பேட்டை பகுதியில் உள்ள கிறித்தவ மக்களுக்கு இறைவன் தரும் அழைப்பாக இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கின்றது.

கடந்த ஆண்டு ஜெர்மனி நாட்டின் ஹல்லே நகரிலிருந்து திரு. டேனியல் சாட் என்பவர் சேலம் மற்றும் தெற்கு பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் பயன்பாட்டில் உள்ள ஆங்கிலேயர் காலத்து ஆலயமணிகளை ஆய்வு செய்ய வந்தார். அவருக்கு இந்த மணிகளைச் சேலம் வரலாற்று சங்கம் சார்பாக ஆய்வு செய்ய உதவினோம். அவர் அம்மணியில் எழுதப் பட்டுள்ள வாசகங்களையும், மணி அடிக்கபடும்பொழுது அதன் இயக்கங்களையும் ஒளிப்பதிவு செய்தார். இம்மாதாக் கோயிலில் உள்ள இந்த மணி, தென்னிந்தியாவில் உள்ளன கிறிஸ்தவ தேவாலய மணிகளில் சிறப்பு வாய்ந்தது என்றுக் கூறினார்.

ஜெர்மனியின் ஹெல்லே (Hele) நகரில் உள்ள ஆர்கெஸ்டராவில் இசை ஆர்வலராகப் பணிசெய்து வரும் திரு. டேனியல் சாட் (Daniel Schad) (63) இந்தியா முழுவதிலும் பல ஆண்டுகளாகப் பயணம் மேற்கொண்டு தேவாலய மணிகளையும், ஆங்கிலயேர் காலத்து புராதன மணிகளையும் ஆய்வுசெய்து வருகின்றார்.

– ஜெ. பர்னபாஸ், சேலம்.

Leave a Reply