பழங்கால சின்னங்களைப் பாதுகாக்கும், Conservation மற்றும் Renovation எனப்படும் பாதுகாப்பு பணிக்கு முன்னோடியாக, சோழர்கள் பண்டையக் கோயில் கட்டுமானங்களைப் போற்றி பாதுகாத்ததற்கான சான்று கிடைத்துள்ளது.
தமிழ்நாட்டில் தொன்மைச் சிறப்பு மிக்க பலத் திருக்கோயில்கள் உள்ளன. காலப்போக்கில் கோயில்களின் ஒரு பகுதியில் பழுதுபட்டால் அதனை திருப்பணி செய்ய வழிவகை செய்யப்பட்டிருந்தது. கோயில் திருப்பணிகளை மேற்கொள்ள நிலங்கள் தானமாக அளிக்கப்பட்டன. இவ்வாறு அளிக்கப்பட்ட நிலம் “திருப்பணிப்புறம்”, “புதுக்குப்புறம்” என்று அழைக்கப்பட்டதை இக்கல்வெட்டுகளின் மூலம் அறிகிறோம். திருப்பணிகளை மேற்கொள்வதற்கு சிறந்த சிற்பிகள் இருந்தனர். ஒரு சில கோயில்களுக்கு என்று ஸ்தபதிகள், அதாவது சிற்பிகள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
சிற்பிகளுக்கு நிலங்கள் தானமாக அளிக்கப்பட்டன. இவ்வாறு அளிக்கப்பட்ட நிலங்கள் “சிற்ப விருத்தி”’, சில்பின் காணி, தச்சாசாரியக்காணி , ஆசாரிய தட்சணை என்றெல்லாம் அழைக்கப்பட்டன. சிற்பிகள் தாங்கள் கோயில் கட்ட பயன்படுத்திய அளவுகோல்களையும் பொறித்து வைத்துள்ளனர். அதற்கு “தச்சு முழம் ” என்று பெயர். திருவண்ணாமலை, சிதம்பரம், காஞ்சி வரதராஜர் கோயில் போன்ற கோயில்களில் சிற்பிகள் பயன்படுத்திய தச்சு முழ அளவுகோல்களை காணலாம்.
திருக்கோயில்களுக்கு அளிக்கப்பட்ட தானங்கள், மன்னர்கள் பற்றிய குறிப்புகள் கல்வெட்டுகளில் பொறிக்கபட்டிருக்கும். அவை அளிக்கும் செய்திகள் வரலாற்றிக்கு முக்கிய சான்றுகளாகும். கோயில்களில் திருப்பணி மேற்கொள்ளும் போது முன் இருந்த கல்வெட்டுகளை அழித்துவிடாமல் , குறிப்பு எடுத்துக் கொண்டு மீண்டும் அதனை பொறித்து வைத்தனர். இவ்வாறு செய்யும் பொழுது கல்வெட்டில் “இதுவும் ஓர் பழங்கற்படி” என்று குறித்துள்ளனர். இதனை திருகோடிக்கா , திருமழபாடி கோயில் கல்வெட்டுகளில் காணலாம்.
பழைய கோயிலைத் திருப்பணி செய்யும் பொழுது கற்களின் வரிசை மாறிவிடாமல் இருக்க, கற்களில் தமிழ் எண்கள் பொறிக்கப்பட்டிருப்பதை பல கோயில்களில் காணலாம். பழைய கட்டுமானங்களைப் பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகளை அரிய சான்றுகளுடன் மேலப்பாதி கோயிலில் காணலாம்.
நாகை மாவட்டத்தில் தரங்கம்பாடி வட்டத்தில் மயிலாடுதுறை- பூம்புகார் நெடுஞ்சாலையில் 20 கி.மி தொலைவில் மேலப்பாதி என்ற ஊரில் சுந்தர நாயகி சமேத ஜூரகரேசுவரர் கோயில் அமைந்துள்ளது. திருக்கோயில் கருவறை, அர்த்தமண்டபம், மகா மண்டபம், முகமண்டபம், நந்திமண்டபம், பரிவார சன்னதிகள், திருசுற்று மாளிகை என்ற அமைப்புடன் விளங்குகிறது.
இக்கோயில் முற்கால சோழர் காலத்தில் கட்டப்பட்டு பிற்காலத்தில் பல மாற்றங்களைப் பெற்றதை அறிய முடிகிறது/ இக்கோயிலில் முதலாம் ராஜாதிராஜன் மற்றும் மூன்றாம் குலோத்துங்க சோழன் காலக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவ்வூர் வீதிவிடங்க சதுர்வேதி மங்கலம் எனவும், இறைவன் வீமேசுரதேவர் எனவும் கல்வெட்டுகளில் குறிப்பிடுவதை அறியமுடிகிறது.
இக்கோயிலின் மகாமண்டபத்தின் ஜகதி பகுதியில் ஒரு கல்லில், “கல் அழிவு” என்று பொறிக்கபட்டடுள்ளது. தொன்மையான இக்கோயிலைப் புதுப்பிக்கும் பொழுது வெய்யில்-மழையால் அழிந்துவிட்ட கற்களை அகற்றிவிட்டு, புதிய கற்களை செருகி (வைத்து) திருப்பணி செய்துள்ளனர்.
இவ்வாறு கற்களில் மாற்றங்கள் செய்ததைத் தெரிவிக்க “கல்லு அழிவு” என்று புதிய கல்லில் பொறித்து வைத்துள்ளனர். மேலும் திருப்பணியின் போது கற்கள் மாறிவிடாமல் இருக்க கற்களுக்கு 6,7,8,9,10 என்று தமிழில் எண்கள் இட்டு ஒவ்வொரு எண்ணின் அருகிலும் கல்லின் வடிவத்தையும் சதுர சதுரமாகப் பொறித்து வைத்துள்ளனர். பண்டைய கோயில் கட்டுமானத்தைப் போற்றி பாதுகாப்பதில் இருந்த ஈடுபாட்டினை இக்கல்வெட்டால் அறிகிறோம்.
மேலும் இக்கோயிலில் ஒரு சிறப்பு, இக்கோயிலில் முன்மண்டபத் தூண் ஒன்றில் “மேல்புறம்” மற்றும் “தெக்குதூண்” எனப் பொறித்து வைத்துள்ளதைக் காணமுடிகிறது. சிற்பிகள் தூண்களை வடிவமைத்த பிறகு மண்டபத்தில் எந்தப் பகுதியில் அவற்றை நிறுத்தி வைக்க வேண்டும் என்பதற்காக , இவ்வாறு பொறித்து வைத்திருக்க வேண்டும். எழுத்தின் வடிவமைப்பை காணும் பொழுது பதினெட்டாம் நூற்றாண்டாக கொள்ளலாம்.
பண்டைய கோயில் கட்டுமானங்கள் பாதுகாப்பதற்கும், பின்னர் வரும் சந்ததியினர் அறிந்து கொள்ளும் வண்ணம், கல்வெட்டாகப் பொறித்து வைத்த சிறப்பானக் கோயிலாக மேலப்பாதி ஜூரஹரேசுவரர் கோயில் திகழ்கிறது.