பசுமை நடை’ பற்றிச் சொல்ல வேண்டும் என்றால் ‘பசுமை நடை’ மதுரையுடைய சின்னமான யானைமலையைச் சிற்ப தலைநகரமாக மாற்ற வேண்டும் என்பதே. ஆனால் அரசு அந்த மலையை கிரானைட் மாஃபியாவுக்கு கைமாற்றிவிடப் போகும்போது அந்த ஊர் மக்கள் போராடியதன் விளைவாக தற்போது அந்த யானைமலை பாதுகாக்கப்படுகிறது. அதைப் பற்றி முத்துகிருஷ்ணன் வந்து ‘உயிர்மெய்யில், “யானைமலையைச் சூழ்ந்த தீவினை” என்ற கட்டுரை எழுதினார். அந்தச் சமயத்தில் நடந்த புத்தக திருவிழாவில் அந்தக் கட்டுரை புழங்குகிறது. அந்தக் கட்டுரையின் பலனாக நண்பர்கள் 15, 30 பேர் சேர்ந்து அந்த மலையை நம்ம போய் பார்க்கலாமா என்ற எண்ணத்தில் எழுந்ததுதான். அன்று சின்ன பயணமாகப் போனதுதான் அந்த முதல் நடைப்பயணம். 18.9.2010ல் அப்படியொரு நடை எந்தவொரு எதிர்பார்ப்பும் எந்தவொரு தொலைநோக்கு திட்டமிடலும் இல்லாமல் ஒரு நடை போய்வந்தோம்.
அந்த நடை முடிவில், திரு. சுந்தரகாளி அவர்களின் உரை, அந்த மலைப் பிரசங்கத்தின் விளைவு, அடுத்தடுத்த நடையை நோக்கி நகர்த்தியது என்பதுதான் உண்மை. அப்படியான ஒரு நடை தான் பசுமை நடை.
பசுமை நடை இன்றைக்கு 100ஐ கடந்திருக்கிறது. அதுதவிர மதுரை மக்களின் வருகையால்தான், ஒரு நிகழ்வு நடக்கிறதென்றால், அந்த நிகழ்வு 10 பேரோ 5 பேரோ தொடர்ச்சியாக வந்தால் மட்டுமே தொடர்ந்து நடக்கும். இன்றைக்கு நீங்களும் நானும் ஒரு கூட்டம் போட்டால் நீங்களும் நானும் மட்டுமே உட்கார்ந்து ஒரு விஷயத்தை பேச முடியாது. நீங்களும் நானும் மட்டுமே ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து பேச முடியாது. அதற்கான புதுமுகம் அடுத்தடுத்த கட்டத்தில் வரும்போது மட்டுமே, போகும் தூரம் நமக்குத் தெரியும். மதுரை மக்கள் வந்து ஒரு தீவிர ஆர்வத்தோடு பங்கேற்று கொண்டது மறக்க முடியாத விஷயம். அவர்களால்தான் இந்த ‘பசுமை நடை’ 100ஐ கடந்துவிட்டது.
மக்களுடைய வருகை இல்லையென்றால் எந்த ஒரு நிகழ்வும் அது நிகழாது. மக்கள் அதிகமாகப் பங்கேற்றதன் பலனாக, நமது நடையை தொடர்ந்து கொண்டுபோக வேண்டும் இன்னும் போகவேண்டும் என்ற உத்வேகத்தை கொண்டுவந்தது. ‘பசுமை நடை’ மட்டுமல்லாமல் மதுரையில் நடந்த கீழடியில் தொல்லியல் அகழாய்வுகள் நடந்ததன் பலனாக எத்தனையோ நடைகள் போயிருக்கிறோம். ஆனால் கீழடி அகழாய்வுக்கு வந்தவர்களின் எண்ணிக்கை அதிகம்.
கீழடியில் 3 கட்டமாக அகழாய்வு பணிகள் நடைபெற்றது. அகழாய்வு பணி நடைபெறும் போது 3 நடைகள் போயிருந்தோம். 3 நடையிலும் வழக்கமாக நடையைவிட அதிகமாக எண்ணிக்கையில் மக்கள் கலந்துகொண்டார்கள். ஏனென்றால் கீழடி குறித்தும், அங்கு நடக்கும் தொல்லியல் குறித்தும் மக்களுக்கு ஒரு ஆர்வமும் ஈடுபாடும் ஏற்பட்டதே. மதுரை மக்களுக்கு மட்டுமல்லாமல் மதுரையைக் கவனித்து கொண்டிருக்கும் வெளியூரில் வாழும் மக்களுக்கும், வெளிநாட்டில் வாழும் மக்களுக்கும் ஒரு பெரிய ஈடுபாடு இருந்து கொண்டிருக்கிறது.
மதுரை மக்களுக்கும், மதுரையைச் சுற்றியுள்ள மக்களுக்கும், மதுரையைச் சாராத வேறு மாநிலங்களில், வேறு மாவட்டங்களில் வசிக்கக் கூடிய மக்களுக்கும் மதுரை வரலாற்றையும் தொல்லியலையும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தினால் அதனைப் பெருமையாக கவனித்து வருகிறார்கள் என்பதை அறிந்தே 100வது நடையை தொல்லியலை மையப்படுத்தி “தொல்லியல் திருவிழா”வாக அறிவித்தோம்.
அதற்கு முன்னால் மதுரையில் 25வது ‘பசுமை நடை’யை விருட்சத்து விழாவாக நடத்தினோம். மரம் சார்ந்து நடந்தது 40வது ‘பசுமை நடை’ பாறை திருவிழா. பாறை ஓவியங்கள், பாறையில் இருக்கக்கூடிய கல்வெட்டுகள், பாறையில் இருக்கக்கூடிய சமய சின்னங்கள், சின்ன சின்ன வரலாற்றுத் தொல்லியல் சின்னங்கள் வரை அவற்றை முதன்மைப்படுத்த வேண்டும் என்ற நோக்கமே பாறை திருவிழாவாகக் கொண்டாடினோம்.
50வது ‘பசுமை நடை’ நீர்நிலையைச் சார்ந்து பழங்காலத்தில் இருக்கக்கூடிய கண்மாய்கள், ஊரணிகள், மடைகள் அதுபோக ஏந்தல்கள், ஏரிகள் இப்படியாக விஷயங்கள் எப்படி வரலாற்றில் எப்படி இருந்தது? அதை நம் எப்படி அழித்துக் கொண்டிருக்கிறோம். அதை மையப்படுத்தி நீர்மன்றல் என்ற நடை 50வது நடையை ஒரு விழாவாகக் கொண்டாடினோம். அதற்குப் பிறகு தொல்லியல் திருவிழாவாக நடத்தினோம்.
தொல்லியல் திருவிழா 10.2.2019 அன்று ஞாயிற்றுக்கிழமை நடந்தது. பல சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். தேதி மாற்றம் வேறு இருந்தது. ஜனவரி 27ம் தேதி நடைபெற வேண்டிய திருவிழா பிரதமர் மதுரைக்கு 10 கி.மீ. தூரத்தில் உள்ள தோப்பூரில் நடக்கும் அடிக்கல் நாட்டு விழாவிற்கு வருவதால் அனுமதி கிடைக்காததால் பிப்ரவர் 10 தேதிக்கு மாற்றினோம். அது நல்ல முகூர்த்த நாள். அன்றைய தேதியில் சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் வருவார்களா என்ற கேள்விக்குறி. ஆட்கள் வருவார்களா வரமாட்டார்களா என்ற ஐயப்பாடு. ஆனால் அனைத்துச் சிறப்பு விருந்திகர்களும் கலந்துகொண்டார்கள். அதே போல அந்த நடை வழக்கமான நடைபோல இல்லாமல் ‘100வது நடை” நடத்தினோம். கூட்டம் நிரம்பி வழிந்தது. சாதாரணமாக முகூர்த்த நாளில் ‘பசுமை நடை’ வைப்பதில்லை. அப்படி வைத்தால் கணிசமான மக்கள் வரமாட்டார்கள். ஆனால் 100வது நடைக்கு அவ்வளவு மக்கள் வந்ததால் திக்குமுக்காடி போனோம்.
காலை இராமலிங்கம் அய்யாவுடைய கருத்துரை. ‘பசுமை நடை’ மதுரை நடையோட 6வது பதிப்பை வெளியிட்டோம். மதுரை சார்ந்த தொடர்ச்சியாக வரக்கூடிய முக்கியமான ஒருவர் சித்தரைவீதிக்கரன் என்று சொல்லக்கூடிய சுந்தரர் மதுரையைப் பற்றிய புத்தகம் “திருவிழாக்களின் தலைநகரம் மதுரை” என்ற அவருடைய நூல் வெளியிடப்பட்டது.
மதுரைக்குள் நடக்கும் இந்துமத, கிருத்துவ மத, இஸ்லாமிய மத, சமண மத அனைத்து மதச்சார்பற்ற நூலாக, திருவிழாக்கள் சார்ந்த நூலாக, திருவிழாவில் சுற்றி திரிந்த, திருவிழா கூட்டத்திலிருந்து பெறப்பட்ட அரியத் தகவல்களுடன் வெளிவந்திருக்கிறது. காலை 9 மணிக்குக் காலை உணவுடன் நிறைவடைந்தது.
மாலை 4 மணிக்கு மதுரை உலக தமிழ சங்கம் அருகிலுள்ள வாளகத்தில் தொல்லியல் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
முதல் நிகழ்ச்சி சிலம்பாட்டம். சிலம்பாட்டம் முடிந்ததும் திரு. ஆர். பாலகிருஷ்ணன், இந்திய ஆட்சிப் பணி, சிந்துவெளி பண்பாட்டு ஆய்வாளர் எங்களுடைய கீழடியில் எடுக்கப்பட்ட பொருட்களின் புகைப்பட கண்காட்சி சர்வதேச அளவில் பிரிண்ட் செய்து காட்சிப்படுத்தினோம். அதை அவர் திறந்துவைத்தார்.
வாழ்த்துரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்கள் திரு. டேவிட்சன் தேவாசீர்வதாம், மாநகர காவல் ஆணையர், டாக்டர் என். வெங்கடேச போஜன், கண் மருத்துவமனை நிர்வாக இயக்குநர், திரு. ந. நடராஜன், இணை ஆணையர், அருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கோயில். காலையில் வராதவர்களுக்காக மீண்டும் இரண்டு நூல்கள் வெளியிடப்பட்டது.
1000 முதல் 1500 பேர் கலந்துகொண்டு இன்ப அதிர்ச்சி அளித்தார்கள். இரவு 9.00 மணி வரை தொடாச்சியாக புகைப்பட கண்காட்சி கண்டுகளித்து உரையையும் கேட்டார்கள்.
நிகழ்ச்சியின் வெற்றியால் மனநிறைவு ஏற்பட்டது. தொல்லியல் சார்ந்த செயல்பாடுகளையும் தொல்லியல் சார்ந்த தேடல்களை பசுமை நடை வளப்படுத்த பெருமைப்படுகிறோம்.
பசுமை நடையைப் பற்றி “ஹெரிட்டேஜர் இதழில்” பதிவு செய்வது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. பசுமை நடை அன்பையும், மகிழ்ச்சியையும் தெரிவித்து கொள்கிறது. பசுமை நடையோட வெற்றி இந்தமாதிரியான நபர்களால்தான் ஆனது. மதுரை மற்றும் மதுரை சார்ந்த பகுதியில், தமிழகம் முழுக்க இருக்கக்கூடிய உங்களைப் போன்ற வரலாற்று ஆர்வலர்களால் தான் ‘பசுமை நடை’ இவ்வளவு பெரிய வெற்றி தக்கவைத்தது என்கிறேன்.