தமிழரின் இயல்பான தற்சார்பான வாழ்வியலில் ஒரு குறு விவசாயி தனது வாழ்வியல் தேவைகளுடன் வடிவமைத்து வாழ்ந்த சிறிய வீடு பழையூர், தெம்மாவூர் பஞ்சாயத்து, குன்றாண்டார் கோயில் ஒன்றியம், புதுக்கோட்டை மாவட்டம்.
இதில் நாம் அறிந்து கொள்வது இந்த வீடு கட்ட பயன்படுத்திய பொருட்கள் யாவும் அந்தப் பகுதியில் கிடைப்பவை. செம்பாரங்கல், நாட்டு செங்கல், மண் காரைக் கொண்டு பூசி உள்ளனர், இத்துடன் கல் தூண்கள், பனை மர உத்திரம் (wooden beam) பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதில் வீட்டின் தேவைக்கான தானியங்களை இவ்விரு ‘சால்களில்’ வைத்து உணவுத் தேவையை பூர்த்தி செய்து உள்ளனர். இந்தச் சால்களில் இட்ட தானியங்கள் பல ஆண்டுகளுக்கு வைத்துப் பயன்படுத்தலாம். மேலும் தருமபுரி பகுதியில் இதை இருவாசல் என்கின்றனர். ஆகத் தமிழர்கள் இவ்வாறு தற்சார்பான வாழ்வியலுக்கு வாழும் வீட்டைத் தற்சார்பாக மாற்றி வாழ்ந்து உள்ளனர் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
இது ஒரு மிகச்சிறந்த அமைப்பு, பொறியியல் நுட்பத்துடன் மேலும் சிறந்த வடிவமைப்புடன் அமைந்த வீடு. இந்தச் சிறிய வீட்டின் உட்புற இடத்தை அடைக்காமல் இரு பெரிய சால்களை சுவற்றில் வைத்து மண் காரையில் பூசி உள்ளனர். இவற்றை எங்கள் கள ஆய்வின்போது சற்றும் அசைக்க முடியவில்லை.
நாம் காணும் இந்தச் சால்கள் இரண்டிலும் சுமார் 16 மூட்டை நெல் சேமிக்கலாம், இன்று புழக்கத்தில் இருப்பது போன்று 75 கிலோ மூட்டை என்று வைத்துக்கொண்டால் 1200 கிலோ எடையை இந்தச் சுவர் தாங்கும் வலிமையுள்ளதாக இருந்துள்ளது.
இங்கே செம்பாரங்கல், நாட்டுச் செங்கல், மண் காரைப் போன்றவற்றின் வலிமையையும், காலத்தையும் உணர வேண்டும். இன்று துவரம் பருப்பின் விலை ரூ.200/-க்கு மேல், தாரமங்கலம் பள்ளிபட்டி பகுதி விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட விலை ரூ.30-40/- மேலும் அதிகமாக விளையும் பகுதிகளில் எவ்வளவு விலைக்குக் கொள்முதல் செய்திருப்பார்கள் என்று புரிந்துகொள்ள வேண்டும்.
நாம் எவ்வாறு ஏமாற்றம் அடைகிறோம் என்பதற்கு இது ஓர் உதாரணம். நம் மரபுசார் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தற்சார்பான வீடுகளை அமைத்துக்கொண்டால் இவ்விலை ஏற்றம் மேலும் மெருகு ஏற்றாத தானியங்களை நேரடியாகக் கொள்முதல் செய்து சேமித்து பயன்படுத்துவதன் மூலம் நம்மை நோய்கள், மருத்துவமனைகள், நுகர்வு பழக்கத்தைத்திலிருந்து படிப்படியாகக் குறைத்து கொள்ளலாம்.
எங்கள் களஆய்வில் இன்றும் மரபுரீதியாக இந்தச் சால் செய்ய ஆட்கள் உள்ளனர் என்று தெரிந்துகொண்டோம், ஆக இன்று தேவைக்கு ஏற்ப 10-15 கிலோ கொள்ளவு உள்ள சால்களை செய்து தற்சார்பான வீடுகள் அமைத்துக் கொள்வதின்முலம் தன்னிறைவான வாழ்வை அடையலாம்.
– இளஞ்சேரன் மரபுசார் கட்டுமான மையம்