பணப்பட்டி – பெருங்கற்கால ஈமக்காடு

கோவை திரு. விஜயகுமார் அவர்களால் பெருங்கற்கால ஈமக்காடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பணப்பட்டி கிராமமானது கோயமுத்தூரிலிருந்து உடுமலை செல்லும் பிரதான சாலையில் 26 கிமி தொலைவில் உள்ளது. இரண்டாயிரம் வருடங்களுக்கு முற்பட்ட இடுகாடானது கற்குவியல்காக ஊரின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இதனைப்பற்றி அவர் கூறுகையில், “இங்கு சில சிறுபாறைகள் வட்ட வடிவில் அடுக்கப்பட்டு ஓடகற்களால் நிரப்ப பட்டது போல காணப்படுகிறது. இப்பகுதியை சுற்றியுள்ள பகுதிகளில் இதுபோல பல புதைவிடங்கள் இருந்தது தெரிகிறது.

https://youtu.be/97ey_RP5QAE

மக்களின்,விழிப்பிண்மையாலும், விவாசாயத்திற்காகவும் அவை அகழப்பட்டு அழிக்கப்பட்டு விட்டன.அவற்றில் பெரிய மண்தாழியும் அவற்றுள் உபபொருட்களுடன் எலும்பு மிச்சங்களும் கிடைக்கப்பட்டுள்ளன. இங்கு வாழ்பவர்கள் இது குள்ள பாண்டியர் வாழ்ந்த இடம் என கூறுகின்றனர்.மேலும் இவ்வூரின் கிழக்கு பகுதியில் பறையன்மடைபள்ளம் எனும் ஆறு உள்ள இடம் உள்ளது.

இதன் இருபுறமும் தெற்கே சில கி.மி வரை முற்காலத்தில் ஒரு நாகரீகம் வாழ்ந்தத் தடயங்கள் கிடைக்கின்றன. மேலும் கடந்த பல வருடங்களுக்கு முன் விவசாயத்திற்காக மண் எடுக்கும் போது பொத்தான் அளவிலான தங்காசுகள், குழந்தைகளுக்கு பாலூற்றும் மண் சங்கடைகள் கிடைத்துள்ளன. முக்கிய குடியிருப்பு இருந்த பகுதிகளில் மண் வேறுபட்டு காணப்படுவதால் இப்பகுதி சாமகாடு (அ) சாம்பல் காடு என அழைக்க படுகிறது” என விஜயகுமார் கூறினார். நானும் எனது மனைவி வித்யா லக்ஷ்மியும் கடந்த வாரம் கோவை சென்றிருந்தோம். பணப்பட்டி விஜயகுமார் அவர்களின் அழைப்பிற்கு இணங்க அவரின் ஊருக்கு சென்றோம். வழிநெடுங்கிலும் ஓங்கி வளர்ந்த தென்னை மரத் தோப்புகளும், பச்சைக் கம்பள காய்கறித் தோட்டங்களுமாக கண்ணில் பட்டன. சாலை மிக அருமையாக போடப்பட்டிருந்த பணப்பட்டி போகும் வழியில், ஆண் பெண் உருவங்கள் இருந்த நடுகற்களின் ஒரு வகையான சதி கல்லையும், சாலை ஓரங்களில் இன்றும் வழிபாட்டில் இருந்த menhir என்று சொல்லகூடிய பல நெடுங்கற்களையும் நாங்கள் கண்டோம். பணப்பட்டியை அடைந்தவுடன் விஜயகுமாரின் சொந்தக்காரர் வீட்டிற்க்கு அருகின் உள்ள அந்த இடத்திற்கு எங்களை அழைத்துச் சென்றார். முதலில் நாங்கள் பார்த்தது Stone Cirlce என்று சொல்லக்கூடிய கல்வட்டம் வட்டம் ஆகும். இறந்தவரை புதைத்த இடத்தில் சுற்றிலும் வட்ட வடிவில் பெரும் பாறைகளை அமைத்தல் பெருங்கற்கால மக்களின் வழக்கம் ஆகும்.

நாங்கள் பார்த்த அந்த கல்வட்டத்தில் நடுவில் சிறு சிறு கற்களாலான கற்குவியல் இருந்தது. இச்சிறு கற்களின் வடிவம் சற்று வேறுபட்டு இருந்தது. இன்னும் சற்று தூரத்தில் இதே போன்று கல்வட்டங்கள் இருக்கும் இடத்திற்கு திரு விஜயகுமார் அவர்கள் அழைத்துச் சென்றார். அங்கு ஏறக்குறைய 6 முழு அமைப்பிலான கல்வட்டங்களும். பெயர்க்கப்பட்டதால் சிதறி இருந்த கல்வட்ட பாறைகள் பலவும் இருந்தன. விவசாயப் பணிகளுக்காக அப்பாறைகள் அங்கிருந்து பெயர்ப்பட்டு, எல்லைக் கற்கள் போன்று வரிசையாக நிலங்களின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கல்வட்டத்தில் சில கற்கள் மார்பில் போன்று இருந்தது. அவ்வாறான பாறைகள் அப்பகுதியில் இல்லை, இது எவ்வாறு வந்தது என்பது ஒரு ஆச்சர்யம் என்று விஜயகுமார் கூறினார். அங்கிருக்கும் மக்களிடம் விசாரித்ததில் அப்பகுதி முழுவதும் இதே போன்று பல கல்வட்டங்கள் இருந்ததாகவும், விவசாயதிற்காக அப்பாறைகள் அகற்றப்பட்டு, நிலம் சீர்ப்படுத்திய போது தாழிகள்த் தட்டுப்பட்டதாகவும், அதில் எலும்பு கூடுகளும், பல மட்பாண்டகளும், கல் விளக்குகளும் இருததாகவும் கூறினார். இவ்வாறு வரலாற்று புதையல்கள் இருக்கும் அவ்விடங்களைச் சமூக விரோதிகள், பொன் புதையல்கள் கிடைக்கும் என்று கருதி அதனை தோண்டி அழித்து வருகின்றனர்.

இதனை உடனே மத்திய மாநில தொல்லியல்துறையினர் தலையிட்டு, கொங்கு பகுதியில் பண்டையக்கால மக்கள் வாழ்ந்த அடையாளங்கள் அழியாமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அவ்வூர் மக்களின் கருத்து. தற்போது இந்த தொல்லியல் களத்தை தன்னால் இயன்ற முறையில் புகைப்பட மற்றும் வீடியோ ஆவணப்படுத்தி வருவதாகவும், இவ்விடத்தின் வரலாற்று முக்கியதுவத்தை பற்றிய விழிப்புணர்வை திரு. ராஜகோபால் மற்றும் முனைவர். ராஜன் போன்ற அறிஞர்களில் அறிவுரைப்படி மக்களுக்கும், மாணவர்களுக்கும் எடுத்துக்கூறி வருவதாகவும் திரு . விஜயகுமார் கூறினார்.

Leave a Reply