வேண்டும் கங்கை – இராஜேந்திரச் சோழன் சிறுகதை போட்டி #7

அபிஷேகமில்லை. ஆராதனையில்லை. தீபங்களுமில்லை. சிவாச்சாரியார்களும் இல்லை. மந்திரங்கள் ஓதுவாருமில்லை. அஷ்டாதச வாத்தியங்கள் இசைப்பாருமில்லை.

ஏறத்தாழ மக்களால் கைவிடப்பட்டுவிட்டது போன்று காட்சியளித்தது அந்தச் சிவாலயம்.

சருக்கென்று எழுந்தமர்ந்தார் அவர். கனவில் கண்ட அந்தக் காட்சி அவரது நித்திரையைத் தடைசெய்திருந்தது. எப்போதும் மலர்ச்சியுடன் திகழும் அவரது கம்பீரம் கமழும் வதனத்தில் கவலை எனும் திரை படர்ந்திருந்தது.

“என்ன இது துர்சொப்பனம்?” தனக்குத்தானே கேட்டுக்கொண்டார்.

சிவசரணசேகரனான அவர் “கைவிடப்பட்ட ஆலயம்” ஒன்று கனவில் காட்சியளித்ததால் கவலைக்குள்ளாகியிருந்தார்.

இப்படியும் நடக்குமா என்ன? ஆலயத்தை மக்கள் கைவிடுவரோ? அத்தனை மமதையுடைய மக்கள் மிகுந்துவிட்டனரா இப்பாரதவர்ஷத்தில்? இருக்காது… அப்படியெல்லாம் நடக்காது… நிச்சயம் எந்தவொரு ஆலயமும் வழிபாடின்றிப் போய்விடாது.

அவர் மனம் கேள்விகளையும் சமாதானங்களையும் சொல்ல, மீண்டும் துயிலும் உத்தேசத்தில் பஞ்சணையில் சாய்ந்தார். அறைக்கதவு சப்திக்கப்பட்டது.

“பொன்னா” என்றழைத்தார் எழுந்தவாறே. அவரது மெய்க்காவல் படைத்தலைவன் சத்தமின்றிக் கதவைத் திறந்து வந்து பஞ்சணை முன் பணிந்தான்.

“நண்பரிடமிருந்து ஓலை வந்துள்ளது” என்றான் பொன்னன்.

கரம் நீட்டினார். ஓலைக்குழல் வைக்கப்பட்டது. ஓலைக்குழலின் மீதிருந்த பொன்னாலான கருட இலச்சினை கண்டு ஆவல் மின்னும் விழிகளுடன் குழலைத் திறந்தார்.

ஓலையை எடுத்துப் பார்த்துவிட்டு, வாய்விட்டுச் சிரித்தார். அதனால் குழப்பமுற்ற பொன்னன் அவரருகே வந்து நின்றான்.

அவன் குழப்பம் அவருக்குப் புரிந்திருக்க வேண்டும். ஓலையை அவனிடம் நீட்டினார்.

அதைப்பெற்றுப் பார்வையை ஓட்டியவன் முகம் அதீதக் குழப்பத்தில் ஆழ்ந்தது. ஓலையைத் திருப்பிப் பார்த்தான். பெருங்குழப்பத்தில் ஆழ்ந்தான். அவரைப் பார்த்தான். அவர் சிரிப்பை நிறுத்தவில்லை.

“ஒன்றும் எழுதாத இந்த ஓலையைத் தூக்கிக்கொண்டு மாளவ தேசத்திலிருந்து எதற்காக வந்தான் போஜராஜரின் தூதுக்குழுவின் தலைவன்?” என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டான் பொன்னன்.

சிரித்துக்கொண்டிருந்தவரின் முகம் சீரிய நிலையை அடைந்திருந்தது.

“மாமடிகளையும் பிரம்மராயரையும் அழைத்து வா பொன்னா” என்ற ஆணை இறுகிய குரலில் பிறக்க, பொன்னன் ஓடோடிப் போனான்.

அகால வேளையில் அரசரின் அழைப்பைக் கேட்டு ஓடோடி வந்தார் இராமன் அருமொழியாரான உத்தம சோழ பிரம்மராயர். அரசரின் சயன அறை வாயிலை அவர் எட்டிய சமயத்தில், அரசரின் மாமடிகள் வல்லவரையர் வந்தியத்தேவரும் வந்து சேர, இருவரும் இணைந்து அரசரைக் காணச் சென்றனர்.

மெய்க்காவலர்கள் சோதித்து அனுமதிக்க, அறையினுள் சென்று, கலங்கிய கண்களுடன் அமர்ந்திருந்த அவரைக் கண்ட இருவரும் துணுக்குற்றனர்.

“அடேய்.. மதுரா என்ன இது?” உரிமையுடன் கேட்டார் வல்லவரையர்.

“நண்பா… நீயா கலங்குகிறாய்? நீ கலங்கும் அளவிற்கு நிலைமை இருக்குமாயின் பேரமைச்சனாய் நானிருந்து என்ன பயன்?” கேட்டுக்கொண்டே இடையைத் துழாவினார்.

மெய்க்காவலர்கள் பெற்றுக்கொண்ட உடைவாளும் குறுவாளும் நினைவுக்கு வர, ‘உச்’ கொட்டி சலிப்பைக் காட்டினார்.

“அடேய் அருமொழி.. நீ அமைதியாய் இரடா.. இவன் வேறு அவசரப்பட்டுக்கொண்டிருக்கிறான். நீயாய் சொல்லிவிடு மதுரா” அலறினார் வந்தியத்தேவர்.

“வேண்டும் கங்கை” மெல்லச் சொன்னார் அரசர்.

இருவரும் திடுக்கிட்டுப் போயினர். ‘அகால வேளையில் அழைத்து கங்கை வேண்டும் என்று கலக்கத்தில் சொல்கிறானே இவன்’
என்ற வியப்பும் திகைப்பும் ஒரு சேர அவர்களை ஆட்கொண்டது.

வந்தியத்தேவர் அரசரை உற்றுப்பார்த்தார். ஏதோ கனவில் இருப்பவர் போல அவர் காட்சியளிக்க, மெல்லத் தோளைத்தொட்டு உலுக்கினார்.

அந்த உலுக்கலால், பிரமையிலிருந்து விடுபட்டவர் போன்று தலையை உதறிக்கொண்டு திரும்பிய அரசர், “வாருங்கள் மாமடிகளே” என்றவாறே பதறிக்கொண்டு எழுந்து நின்றார்.

வந்தியத்தேவர் யோசனையுடன் பிரம்மராயரைப் பார்த்தார். பிரம்மராயரின் விழிகளும் அவர் விழிகளைச் சந்தித்து மீண்டன.

“அழைத்தாயாம். பொன்னன் சொன்னான்” அரசரைப் பார்த்துச் சொன்னார் வந்தியத்தேவர்.

“ஆம் மாமடிகளே. போஜராஜனிடமிருந்து ஓலை வந்திருக்கிறது” ஓலையைக் கொடுத்தவாறே சொன்னார் அரசர்.

வந்தியத்தேவர் ஓலையை வாங்கிப் பார்த்துவிட்டு முகம் சுளித்தார். பின்னர் பிரம்மராயரிடம் கொடுத்தார். அதைப்பார்த்தவரின் புருவங்கள் முத்தமிட்டுக்கொண்டன.

மெல்ல மெல்ல விஷயம் புலனாக, அரசரின் கலக்கத்திற்கான காரணமும் விளங்கத் துவங்க, அவர் முகமும் கலக்கக்குளத்தில் நீந்தத் துவங்கியது.

“அருமொழி. வெற்றோலையை வைத்துக்கொண்டு எதற்கடா கலக்கம்?”

“இவ்வோலையில் ஒரு எழுத்தாவது இருந்திருந்தால் கலக்கமில்லை தேவரே” என்றவாறே, தளர்ந்த நடையில் சென்று அங்கிருந்ததொரு ஆசனத்தில் தொப்பென்று அமர்ந்தார் பிரம்மராயர். ஒன்றும் சொல்லாது நின்றிருந்த அரசரின் தோள் பற்றி பஞ்சணையில் இருத்திய வல்லவரையர், பெருங்கவலை காட்டிய அருமொழியாருக்கருகில் சென்று அமர்ந்தார்.

“என்ன நடந்துவிட்டது இப்போது?”

வல்லவரையரின் கேள்விக்கு “நான் ஒரு கனவு கண்டேன்” என்றார் அரசர்.

பிரம்மாராயரும் சுயவுணர்வுற்றவராய் அரசரின் வார்த்தைகளைக் கேட்கத் துவங்கினார்.

கனவுக் காட்சி விவரிக்கப்பட, ‘வேண்டும் கங்கை’ என்ற வார்த்தைகளின் பொருளும், அந்த ஆலயம் எதுவென்பதும், பாரதவர்ஷத்தின் அன்றைய அரசியல் நிலையும் புரிபடத் துவங்க, வந்தியத்தேவரின் முகம் வெளிறிப்போனது.

பிரம்மராயரும் செயலிழந்து போனவராய் காட்சியளித்தார்.

வந்தியத்தேவரும் அருமொழியாரும் வந்த பின்னர் சத்தமின்றிப் பின்னே வந்து கதவருகே நின்றிருந்த பொன்னனுக்கும் அந்தச் சூழ்நிலையின் அழுத்தம் புரிய, மெல்லக் கதவைத் திறந்துகொண்டு வெளியேறினான். நடந்தான். ஓடினான்.

இராஜராஜேஸ்வராலயத்திற்கருகில் இருந்த ஒரு குடிலை அணுகினான். வாயிலில் வெள்ளுடை தரித்த துறவிகள் இருவர் உறக்கத்திலிருக்க, அவர்களை எழுப்பப்போனவனை “வேண்டாம். வா போகலாம்” என்று குடில் வாயிலில் எழுந்த குரல் தடுத்தது.

திடுக்கிட்டுத் திரும்பியவன் இரு கரம் கூப்பி மண்டியிட்டான். “அரசனை வணங்குபவன் இவ்வாண்டியை வணங்குவானேன் பொன்னா” சிரிப்புடன் கேட்டுக்கொண்டே, தனது நீண்ட வெண் தாடியை நீவிக்கொண்டார் அவர்.

“வா போகலாம் என்றீர்களே” இழுத்தான் பொன்னன். நான் வருவேனென்பது தெரியுமா? என்ற கேள்வி அதில் இருந்தது.

“ஈசன் உன் அரசனின் கனவில் மட்டும்தான் வரவேண்டும் என்று நியதியேதும் இருக்கிறதா என்ன?” கேட்டுவிட்டு, உரத்துச் சிரித்தார் அவர்.

அவர் உரத்து நகைத்தாலும் துயில் கலையாதிருந்த அவரது சீடர்களை விநோதமாய் பார்த்தான் பொன்னன்.

“யார் யாருக்கு என்ன தெரியவேண்டுமோ, அது மட்டுமே அவர்களுக்குக் காட்டப்படும். வா செல்வோம்” என்றவாறே அவர் முன்னே நடக்க, பொன்னன் தொடர்ந்தான்.

“மதுரா” கனிவான குரலில் அழைத்தார் கருவூர்த்தேவர்.

“தேவரீர்… தாங்களா!!!” கேட்டுக் கொண்டே எழுந்து வந்து அவர் பாதம் பணிந்தார் அரசர்.

“சிரஞ்சீவி பவ” சிரத்தின் மீது கைவைத்து ஆசியுரைத்தார்.

வந்தியத்தேவரும் அருமொழியாரும் கரம் கூப்பிச் சிரம் தாழ்த்த, “நல்லாசிகள்” என்று ஆசியுரைத்தார்.

“காட்சி கண்டாயோ!! கண்டு மருண்டாயோ!!

ஈசனின் நிலை கண்டாயோ!! கண்டு வெதும்பினாயோ!!

களம் கண்டாயோ!! கண்டு துவண்டாயோ!!

மங்கலம் போனமை கண்டாயோ!! கண்டு மனம் குமைந்தாயோ!! ”

கருவூர்த்தேவரின் மொழிகள், அரசரின் விழிகளை மட்டுமல்ல, வந்தியத்தேவர், அருமொழியார், பொன்னன் என மூவரின் விழிகளையும் அருவியாக்கின.

“மதுரா” கருணையில் தோய்க்கப்பட்ட குரலில் அழைத்தார் கருவூர்த்தேவர்.

” போஜன் அழைத்திருக்கிறான். அரும் பெரும் களம் ஒன்று காத்திருக்கிறது, சோழப்படையினருக்கு. அதில் உனக்குப் புகழ் கிட்டும். ஆனால்…”

அரசர் அவரை ஏறிட்டு நோக்கினார். நீர் சொரியும் விழிகள் கருவூர்த்தேவரின் குரலைத் தழுதழுக்கச் செய்தன.

“உன் நாட்டு மக்கள் பலரும் மங்கலமிழப்பர் என்றா நீ கலங்குகிறாய்.

போடா…

நீ என்ன உன் படையினர் வெறும் மானிடர் என்றா நினைத்துக்கொண்டிருக்கிறாய்.

சிறுவனடா நீ.

சிவகணங்களடா அவர்கள்.

ஈசனின் பணியே அவர்களது கடன்.

கங்கை அவனுக்கு வேண்டும்.

அதை மீட்க அற்ப மானிடர்களால் ஆகுமா?

அதனால் தான் அழைப்பு வந்துள்ளது.

ஈசன் தனது சேனையைத்தான் அழைக்கிறான். புரிகிறதா!!!

இந்தப் போருக்காகவே பிறந்தவர்கள் இந்தச் சோழப்படையினர். புரிகிறதா!!!

அவர்கள் மீண்டாலும் மீளாவிட்டாலும் அப்பணிக்கெனப் பிறந்தவர்கள் அவர்கள்.

நீ அனுப்பு.

உன் படையினர் அற்ப மானிடர்கள் அல்ல என்பதை நினைவில் வைத்துக்கொள்.

அவர்கள் அந்தப்பணிக்காகவே என்பதையும் மறந்துவிடாதே.”

“ஜெய விஜயீ பவ… மங்களம் நிறைவதாக…”

கையுயர்த்தி கர்ஜிக்கும் குரலில் வாழ்த்திய கருவூர்த்தேவர் அங்கிருந்து அகன்றார்.

நண்பன் விடுத்த, பெரும் போருக்கான அழைப்பை மறுக்கவே இயலாத நிலையில், தன் நாட்டுப் பெண்டிர் பலர் மங்கலமிழக்க வேண்டியதிருக்கும் என்பதால் உண்டான கலக்கம் நெஞ்சைப் பிசைந்துகொண்டிருந்த சமயத்தில், கருவூர்த்தேவர் கூறிய “சிவகணங்களடா உன் படையினர்” எனும் மொழிகள் தந்த உத்வேகத்தால் “அருமொழி…. நம் படை கங்கையை மீட்க உத்தராபதம் செல்வதற்கான ஆயத்தங்களைச் செய்” என்று தனது கம்பீரக் குரலில் ஆணை பிறப்பித்தார் உடையார் ஶ்ரீராஜேந்திர சோழ தேவர்.

– சக்திஸ்ரீ

Leave a Reply