உலக சூழலியல் தினத்தில், கட்டிடக்கலை நிபுணர் கிருத்திகா உடன் இருந்த உரையாடல் மிக அழகானதாகவும், அனுபவங்களைப் பகிரப்பட்ட ஒரு தளமாகவும் எனக்குள் நீண்ட நாட்களாக இருந்த தேடல்களுக்கான விஷயமாகவும் இருந்தது.
அதிலிருந்தே இந்தக் கட்டுரை ஆரம்பிக்கிறது, நம்மை சுற்றி பலவிதமான கட்டிடக் கலைஞர்கள் உள்ளபோதிலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கட்டிடங்கள் மிகுந்த ஈர்ப்பையும் அதன்பால் ஒரு ஆர்வத்தையும் உண்டு செய்கின்றனது. அது என்ன எல்லாமே நான்கு சுவர்களுடன் கூடிய ஒரு அறையோ அல்லது இடமோ தானே? என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால் நிச்சயமாக இல்லை. ஒரு வீடு அல்லது ஒரு கட்டிடம் நமக்கு பிடித்த வகையில் நம்மைப் பிரதிபலிக்கக் கூடிய ஒரு இடமாகவும், நம் எண்ணங்களின் பிம்பமாகவும், பெரும்பாலும் அமைகிறது. இது வெறும் செங்கற்களாலும், கான்கிரீட் நிறைந்த பொருட்களாகவும் நீங்கள் பார்த்தீர்கள் என்றால் அப்படி மட்டும் தான் தெரியும். அதையும் தாண்டி அந்த இடம் அதன் பயன்பாட்டாளர்களோ அல்லது அதை உருவாக்கியவர் மூலமோ ஒரு தனித்துவம் கொண்டுள்ளதாக விளங்குகிறது.
மாணவ பருவத்திலும் சரி அதற்குப் பின்னான பயணங்களிலும் சரி பெரும்பாலும் என்னை ஈர்த்தது பழங்கால கட்டிடங்களாகவே இருந்துள்ளன. கோவில்கள் அல்லது இயற்கையோடு இயைந்த வாழ்வியல் முறையை வெளிப்படுத்திய கட்டிடங்கள். அவற்றைப் பின்பற்றிய கட்டிடக் கலை வல்லுநர்களும் பெரும்பாலும் எளிய மக்களுடனும், அவர்கள் வாழ்வியலைப் புரிந்து அவற்றின் அங்கமாக இருந்து இருக்கிறார்களே அன்றி வேறு ஏதோ ஒரு மாநிலத்திலிருந்து வந்து அவ்விதமான செயல்பாடுகளைச் செய்ய முடிவதில்லை. அதனால் நமக்கு மிக அதிகமான பரிச்சயமாக உள்ள ” லாரி பேக்கர்” ரிலிருந்து இந்த தொடர் கட்டுரைகள் ஆரம்பிக்கும் எண்ணம். நிச்சயமாக இப்படியான ஒரு தூண்டுதலுக்குக் கட்டிடக் கலைஞர் கிருத்திகா அவர்களுக்கு நன்றி!
லாரி பேக்கர் அவர்கள் கிட்டத்தட்ட 40 ஆண்டுக்காலம் இந்தியாவில் தன்னுடைய கட்டிடக்கலை பணியை மேற்கொண்டுள்ளார். இவருடைய கட்டுமான பணியைப் பார்க்கும்பொழுது பெரும்பாலும் சிறிய ஊர்களிலிருந்த எளிமையான மக்கள் வாழும் வீடுகளில் ஆரம்பித்து பள்ளிகள், சில தேவாலயங்கள் மற்றும் சில மருத்துவமனைகளும் இதில் அடங்கும். பல கட்டிடக் கலைஞர்கள் பாரம்பரிய முறையைப் பின்பற்றினாலும் அதில் ஐயா அவர்கள் வேறுபட்டு இருப்பது உள்ளூர் மரபு கட்டிடக்கலையை மக்களுக்குத் தேவையான வகையில் உருவாக்கித் தந்துள்ளது தான். ஏனென்றால் ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு தேவை இருக்கும்.
பொதுவாக உலக அளவில் என்ன மாதிரியான கட்டிடக்கலை பயன்படுத்தப்பட்டு இருந்ததோ அதை விடுத்து அவர் எந்த ஊரில், எந்த கிராமத்திலிருந்தாரோ, அந்த கிராமங்களில் எந்த வகையான கட்டிடக்கலையை, காலம் காலமாகப் பின்பற்றி வந்தார்களோ, அதையே தன்னுடைய கட்டிடங்களிலும் பின்பற்றி வடிவமைக்கும் முறையை தொடங்கினார். அதேபோல உள்ளூரில் கிடைத்த கட்டுமான பொருட்களையும் மக்களையும் வேலையில் அமர்த்தினார்.
அந்த காலகட்டத்தில் உலக அளவில் ‘பொதுமை’ ஆக்கப்பட்ட எந்த கட்டடக்கலை கருத்துக்களையும் அவர் தம்முடைய வேலையில் புகுத்திக் கொள்ளவில்லை. எல்லோருக்குமான பொதுவான ஒரு கட்டிடக்கலை கொள்கை என்பதை அவர் ஆதரிக்கவில்லை. அவருடைய எண்ணங்கள் ஒவ்வொரு மனிதனும் அவனுக்கான தேவைகளைப் பொறுத்து, அவனுடைய இருப்பிடத்தையோ அல்லது வேலை இடத்தையோ மாற்றி வடிவமைத்துக் கொள்ள வேண்டும். அதுவும் இந்தியா போன்ற பல்வேறு தரப்பட்ட கலாச்சார மக்கள் உள்ள வாழ்விடத்தில் இதற்கான தேவை அதிகமாக இருந்ததாக அவர் உணர்ந்தார். அதனாலேயே அவர் தமக்கான அந்த பணி இங்கிருக்கும் பாரம்பரிய முறைகளை நெறிப்படுத்தி, சுற்றுவட்டாரத்தில் உள்ள கட்டுமான பொருட்களைக் கொண்டு, கட்டிடங்கள் அவற்றின் தன்மையை உணர்த்த வேண்டும் என்று எண்ணினார்.
அதே நேரத்தில் பேக்கர் அவர்களை ஒரு ‘ பழமை வாதி’ என்றும் கூறிவிட முடியாது. அவர் கட்டிடக்கலை என்பது பலதுறைகளின் வளர்ச்சி மற்றும் மாறுதல்களுக்கு உட்பட்டது என்னும் எண்ணத்தைக் கொண்டிருந்தார். மற்ற கலைகளைப் போலவே கட்டிடக்கலையும் தனக்கான ஒரு பாதையையும், மெதுவாக அதன் தன்மையை மாற்றிக் கொள்ளும் விதமாகவும் வளர்ந்திருக்கிறது. அதேநேரத்தில் பாரம்பரிய கட்டிட கலை என்பது ஒரு கட்டுக்கோப்பான கட்டமைப்பிற்குள் இல்லாமல் அது பல்வேறு இடங்களில் பல்வேறு காலகட்டங்களில் அதனை உபயோகிக்கும் மனிதனுக்கு ஏற்ற வகையில் மாற்றங்களைப் பெற்று நம்மோடு பயணித்துக் கொண்டிருக்கிறது. அதன் காரணமாக பேக்கர் அவர்கள் பல்வேறு தரப்பட்ட தலைமுறை தலைமுறையாகக் கட்டிடக்கலையில் இயங்கிவரும் கட்டுமான கலைஞர்களிடம் அவர்களின் அனுபவங்களைப் பற்றிக் கேட்டறிந்தார்.
அவர் உருவாக்கிய கட்டிடக்கலை கருத்துக்கள் அல்லது கோட்பாடுகள் கேரளத்திலிருந்த வீடு கட்டுவதற்கு என அதிகப் பணம் செலவழிக்க முடியாத மக்களும் பயன்படுத்தும் விதத்தில் அமைந்தது அவரின் வெற்றி எனலாம். அது ஒரு புரட்சியைப் போன்று பல்வேறு இடங்களில் பயன்படுத்தப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட ஒரு பாரம்பரிய கட்டடக்கலை சின்னமாகவே மாறிவிட்டது. அவர் கொள்கைகளை அவர் சீரிய முறையில் கட்டிடங்களின் வழியே பிறரும் உணரும் வண்ணம் வடிவமைத்துள்ளார். பாரம்பரிய அறிவு, தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் வாழ்வியல் சார்ந்த மாற்றங்களை லாரி பேக்கர் அவர்களின் கட்டிடக்கலை குறித்த பெருமுயற்சியாக விளங்கிற்று.
லாரி பேக்கர் அவர்களின் கட்டடக்கலை குறித்த புரிதல் அவர் சிறுவயதில் இங்கிலாந்திலும் மற்றும் பிதொராகர் எனப்படும் உத்தரப்பிரதேசத்தின் ஒரு பகுதியில் வாழ்ந்ததும் பேருதவியாக இருந்தது எனலாம். 17 வயதில் தன் நண்பர்களுடன் சேர்ந்து லாரி பேக்கர் ஐரோப்பா கண்டத்தின் பல ஊர்களுக்கு மிதிவண்டிகளுடன் ஒரு பயணத்தை மேற்கொள்கிறார். இந்த பயணம் அவரை பல வகையான மனிதர்கள், இடங்கள், வீடுகள் போன்றவற்றை அறியவும் அவை ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு விதமாக வடிவமைக்கப்பட்டு இருப்பதைப் புரிந்து கொள்ளவும் வழிவகை செய்தது. அவர் கட்டடக்கலையை தேர்வு செய்வதற்கு இது ஒரு மிக முக்கிய காரணமாக இருந்ததாக அவரே குறிப்பிடுகிறார். பிரம்மிங்ஹம் கட்டிடக்கலை பள்ளியில் 1937 ஆம் வருடம் கட்டடக்கலையியல் படிப்பை முடிக்கிறார். ஆனால் இரண்டாம் உலகப் போரின் காரணமாக அவரால் அந்த வருடம் அலுவலகங்களில் வேலை செய்து பெறப்படும் பயிற்சி காலத்தை நிறைவு செய்ய முடியவில்லை. மேலும் அந்த காலகட்டத்தில் சீனாவிற்கும் ஜப்பானுக்கும் நடந்த போரில் பல்வேறு நாடுகளிலிருந்து காயம்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி செய்ய பலர் பர்மாவிற்கு அனுப்பப்பட்டனர். அப்படியான ஒரு குழுவுடன் சேர்ந்து லாரி பேக்கர் பர்மாவை வந்தடைகிறார். அங்கு இருக்கும் சூழலை பார்த்து, அதற்காக தம்மால் ஏதாவது செய்ய முடியுமா? என யோசிக்கும் லாரி பேக்கர் அங்குப் பலர் தொழு நோயால் பாதிக்கப்பட்டிருப்பதைப் பார்த்தார். அவர்களுக்கு நம்மால் முடிந்த மருத்துவ உதவிகளைச் செய்ய வேண்டும் என்று எண்ணினார். ஆனால் அங்கு இருந்த கொஞ்சக் காலத்தில் அவர் உடல் நிலை பாதிப்படைந்து திரும்ப இங்கிலாந்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறார். அப்படி அவர் பயணப்பட்ட போது பாம்பாய் வழியாகச் செல்லும் கப்பலுக்கு அவர் காத்திருந்த பொழுது காந்தியடிகள் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் வாழ்வின் மிக முக்கிய தருணமாக அதை குறிப்பிடுகின்றார்.
இங்கிலாந்திற்குச் சென்ற பிறகு உடல்நிலையில் முன்னேற்றம் பெற்ற லாரி பேக்கர், இந்தியாவில் ஒரு தொழுநோயாளிகளைக் குணப்படுத்தும் இயக்கத்திற்குக் கட்டுமானம் தெரிந்த, ஓரளவிற்கு அறிவியல் புரிதல் உள்ள கட்டிடக்கலைஞர் ஒருவர் தேவை என்பதை அறிகிறார். அந்த வேலையைச் செய்வதற்காக அவர் இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்குப் பயணிக்கிறார். அங்கு அவர் முகாம்களை மருத்துவமனைகளாக மாற்றும் பணியில் ஈடுபடுகிறார். பெரும்பாலும் அவருக்கு கிடைத்த பணிகள் ஒரு குக்கிராமத்திலிருந்த கட்டிடங்களைப் பெரிது படுத்துவதோ அல்லது மராமத்து வேலைகள் செய்வது போன்றவை மட்டுமே. அந்த காலகட்டத்தில்தான் தொழு நோய்க்கு என புதிதாக மருத்துவமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அந்த புதிய மருத்துவ முறைகளைச் செயல்படுத்துவதற்கென உத்திரப்பிரதேசத்தில் ஒரு புதிய மருத்துவமனையை அந்த குழு உருவாக்க எண்ணியது. அதற்காக சாண்டி என்பவரது வீட்டில் லாரி பேக்கர் தங்கியிருந்து வேலைகளை கவனித்தார் . இந்த காலகட்டத்தில் அவர் சாண்டியின் தங்கை எலிசபெத் ஜேக்கப்பை சந்திக்கிறார். எலிசபெத் ஒரு மருத்துவர், அவரும் தொழு நோயாளிகளைக் குணப்படுத்தும் பிரிவில் ஐதராபாத்தில் வேலை செய்து வந்தார். இருவரும் காதலித்து திருமணம் செய்துகொள்ளும் முடிவை மேற்கொண்டாலும் இரு குடும்பங்களும் இத்திருமணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.
அதன்பிறகு எலிசபெத் ஹைதராபாதில் வேலை செய்துகொண்டும், லாரி பேக்கர் ஒவ்வொரு தொழுநோய் மருத்துவமனையையும் முடித்து விட்டு வேறு இடங்களுக்குப் பயணப்பட்டுக் கொண்டே இருந்தார். ஒவ்வொரு புதிய முயற்சியிலும் அவர் அறிந்துகொண்ட விஷயங்கள் அதிகமாகிக்கொண்டே இருந்தது. அவரும் எலிசபெத்தும் பெரும்பாலும் அவர்கள் வேலைகளிலிருந்து கிடைத்த இடைவெளியில் சந்தித்துக் கொண்டிருந்தார்கள். அந்த தொழு நோய் குணப்படுத்தும் குழுவின் நடைமுறைகளில் சில கருத்து வேறுபாடு தோன்றியதும் எலிசபெத்தும், பேக்கரும் அந்த இயக்கத்திலிருந்து வெளியேற முடிவு செய்தனர். வெளியேறிய சிறிது காலத்திற்குள் அவர்கள் திருமணமும் செய்து கொண்டனர்.
அவர்கள் திருமணத்திற்குப் பிறகு இமாலய மலைத்தொடர் அருகில் இருக்கும் ஒரு மலைப்பாங்கான பிரதேசத்திற்கு தேனிலவுக்காக சென்றனர். அந்த ஊரின் பெயர் பிதொராகர். கொஞ்ச காலம் அங்கு தங்கிய இருவரும் அந்த இடத்தின் மீது கொண்ட ஈர்ப்பால் அங்கேயே தங்களுடைய வாழ்விடத்தை அமைத்துக் கொள்ள முடிவு செய்தனர். பிதொராகரில் மருத்துவ வசதி தேவை என்பதாலும் எலிசபெத் ஒரு மருத்துவர் என்பதாலும் மக்கள் அவர்கள் இருவரும் தங்குவதற்கு ஒரு வீடும், ஒரு சிறிய மருத்துவ வசதி ஏற்படுத்துவதற்காக அறையையும் அளித்தனர். தம் வாழ்வில் பதினாறு ஆண்டுகளை பிதொராகரில் செலவிட்டுள்ளார். இங்கு அவர் கற்றுக் கொண்டது ஏராளம். இந்த இடம் மிக அதிக வானிலை மாற்றங்களுக்கு உட்பட்டதாகும். மலைப் பாங்கான இடமாக இருந்ததாலும் இதன் கட்டுமான முறைகள் மிக வேறுபட்டதாக இருந்தது.
அங்கிருந்த மக்களுக்கு அங்கேயே கிடைக்கப்பெறும் கட்டுமான பொருட்களின் உபயோகத்தை பார்த்து அவர் வியந்தார். அங்கிருந்த கட்டிடங்கள் கல், மண், செம்பராங்கல் மற்றும் மாட்டுச் சாணத்தை கொண்டு அந்த வீடுகள் வடிவமைக்கப்பட்டிருந்தன. அவர் கல்லூரி காலத்தில் என்ன படித்து இருந்தாரோ, அவை அனைத்தும் வேறுவிதமாக அங்கு செயல்பாட்டில் இருந்தது. பெரும்பாலும் நிறைய விஷயங்களை புதிதாக கற்பதை காட்டிலும் ஏற்கனவே படித்தவற்றை மறந்து விடுதல் மிக முக்கியமான விஷயமாக இருந்தது. அங்கு வாழ்ந்த மக்கள் அங்கு கிடைத்த கட்டுமான பொருட்களின் பயன்பாட்டை ஒரு கட்டிடக் கலை நிபுணரை விட அதிகமாக அறிந்து வைத்திருந்தனர்.
ஒரு ஆங்கிலேய கட்டிடக் கலை நிபுணர், நகர்புறங்களில் வாழ்ந்து படித்த இளைஞர், கல்வி அறிவு இல்லாத கிராமத்தின் அல்லது மலைவாழ் பிரதேச பழங்குடி மக்களுடன் சேர்ந்து வேலை செய்யும் புதுமையான காட்சிகள் அங்கு அரங்கேறியது. அது மிக பயனுள்ளதாகவும் இருந்தது. அவர்களிடமிருந்து அந்த கட்டுமானங்களை பற்றியும் அதன் தொழில்நுட்பங்களைப் பற்றியும் அறிந்துகொள்ள முடிந்தது. அவ்வூரில் அவர் பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் சமூக நலக்கூடங்களை கட்டி அம்மக்களுக்கு உதவினார். அதேபோல இந்த எல்லா கட்டிடங்களும் அதன் இடத்திற்கு ஏற்ப அங்கு அவருக்கு கிடைத்த உள்ளூர் கட்டுமான கலைஞர்களை வைத்துக்கொண்டு கட்டப்பட்டதாக இருந்தது.இந்த அனுபவம் அவருக்கு அவருடைய தொழிலில் முன்னேற பேருதவியாக இருந்தது என்று கூறினால் அது மிகையல்ல. 1973 ஆம் ஆண்டு எலிசபெத்தும், பேக்கரும் மத்திய கேரள பகுதிக்கு குடிபெயர்ந்தனர். நகருக்குள் அல்லாமல் வேகமான் என்ற ஒரு கிராமத்தில், மலைவாழ் மக்களும், தமிழக புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் சேர்ந்து இருந்த இடத்திற்கு அருகில் தங்களுடைய குடியிருப்பை அவர்கள் அமைத்துக்கொண்டனர். இங்கும் அவர்கள் பள்ளிகள், தொழு நோயாளிகளுக்கான முகாம்கள் போன்றவற்றை அவர் ஏற்கனவே கற்று வைத்திருந்த வகையில் கட்டி முடித்தார்.
சில வருடங்களுக்குப் பிறகு திருவனந்தபுரத்திற்கு ஒரு விடுமுறைக்காக வந்தார்.அந்த இடமும், அங்கிருந்து சூழலும் பிடித்துப்போக மீண்டும் தங்களது இருப்பிடத்தை பேக்கர் தம்பதியினர் மாற்றுகின்றனர். இங்கு அவர் எளிமையான விஷயங்கள் நம் வாழ்க்கையின் மிக முக்கிய பங்களிப்பாக இருக்கிறது என்பதை புரிந்து கொள்கிறார். அவர் இதுவரை பயன்படுத்தி வந்த தொழில்முறை அனுபவங்களில் இது சிறிய மாற்றத்தை உண்டு செய்கிறது.
பேக்கர் கட்டிய ஒரு வீட்டிற்குள் அல்லது ஒரு அறைக்குள் நுழைவதற்கு முன்பே அது அவரால் கட்டப்பட்டது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும். அது அங்கு பயன்படுத்தப்பட்ட கட்டுமான பொருட்களாகவோ, பூசப்பட்டிருக்கும் சுன்னமாகவோ, குறைந்த செலவில் செய்யப்பட்டிருக்கும் அவ்வீட்டின் இருக்கை மற்றும் மேசைகளாகவோ அல்லது அந்த அறைக்குள் நுழையும் அதிகமான வெளிச்சமாகக் கூட இருக்கலாம்.
இன்னும் நிறைய இருக்கிறது மரபு சார்ந்தது பேச … (தொடரும்)