பாரியின் பறம்பு மலையும் 300 ஊர்களும்

பாரியின் பறம்பு மலையும் 300 ஊர்களும் :

வேள் பாரியின் பறம்பு மலை’ பல்வேறு வளங்களையும் சிறப்புகளையும் கொண்டது. வேளிர் மரபினரான பாரி கடையெழு வள்ளல்களில் ஒருவனாகவும் போற்றப்படுகின்றான். சங்க காலத்தில் பாரியைப் போன்றே பல குறுநில அரசர்களும் தமிழகத்தில் பல மலைகளை ஆட்சி செலுத்தி வந்தனர். எனினும் இவர்கள் மருத நில பேரரசுக்கு கட்டுப்பட்டவர்க ளாகவே இருந்தனர். திறைகளைச் செலுத்தியும் பேரரசர்கள் செய்யும் போர்களில் துணை நின்றும் தங்கள் ஆட்சியதி காரத்தை இவர்கள் தக்கவைத்துக் கொண்டனர்.

பாரியின் பறம்பு மலையானது பல்வேறு வளங்களைக் கொண்ட காட்டினை உடையதாக இருந்தது. இம்மலைக் காடானது யானைகளை மிகுதியாகக் கொண்டிருந்ததால், ‘மலைபோலும் களிருகளையும் நல்ல அணிகலன்களையும் பரிசாகப் புலவர்களுக்கும், பாணர்களுக்கும் பாரி அளித்தான்’ என சங்கப் பாடல் (அகம். 303) பதிவு செய்கின்றது.

பாரி குறித்த பல பாடல்கள் கபிலரால் இயற்றப் பட்டுள்ளன. இப்பாடல்கள் இருவரின் நட்பிற்குச் சான்றாக அமைகின்றன. சங்கப் பாடல்களின் வழி பாரியின் பறம்பு மலையின் வளத்தை பின்வருமாறு அறியலாம்.

1.பறம்பு நாட்டில் வளமான 300 ஊர்கள் அமைந்திருந்தன.

2.சுவையான சுனைகள், அருவிகள், குளங்கள் முதலியன மலைக் காட்டில் இருந்தன.

3.சந்தனமரம், வேங்கை முதலான மர வளங்களைக் கொண்ட காடுகள் மலைகளில் இருந்தன.

4.மூங்கில் அரிசி, பலா, வள்ளிக் கிழங்கு, தேன் முதலிய பொருட்கள் யாரும் விளைவிக்காமல் இயற்கையாகவே மக்களுக்கு கிடைத்தன.

5.வரகு, எள், நெல், அவரை, பீர்க்கம் – சுரைக் கொடி, முல்லைக் கொடி முதலானவை சிறப்பாக விளைந்தன.

6.மயில்கள், குரங்குகள், பசுக்கூட்டங்கள் முதலிய விலங்கு கள் இருந்தன.

பறம்பு மலையானது இன்று ‘பிரான்மலை’ என அழைக்கப் படுகின்றது. இது சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம் சிங்கம்புணரி ஊருக்கு அருகில் உள்ளது. காரைக்குடியிலிருந்து மேற்கே 42 கி.மீ. தொலைவிலும், மதுரையிலிருந்து வடக்கே 63 கி.மீ. தொலைவிலும், புதுக்கோட்டையிலிருந்து தென்மேற்கே 45 கி.மீ. தொலைவிலும் உள்ளது. சிங்கம்புணரியிலிருந்து கிருங்காக்கோட்டை வழியாக 7 கி.மீ. தொலைவில் உள்ளது. இம்மலையின் அதிகப்படியான உயரம் சராசரியாக 2,450 அடியாகும்.

பாரியின் பண்டைய பறம்பு நாடானது, அன்றைய பாண்டிய நாட்டு நிலப் பகுதிகளை உள்ளடக்கிய 300 ஊர்களையும் கொண்டிருந்தது. இவ்வளவு வளமான நிலப் பகுதியானது ஒரு குறுநில மன்னனின் தலைமையின் கீழிருந்தது மூவேந்தர்களுக்கு சிக்கலான ஒன்றாகவே இருந்தது.

அகநானூறு 78 ஆம் பாடல் பறம்பு மலை மக்களின் அகவாழ்வினை பாரியின் வீரச் சிறப்போடு பதிவு செய்கின்றது.

‘பாரியின் பறம்பு மலையின் யானைகள் வளமாக வாழ்ந்தன. இத்தகைய மலைச்சாரலில் குறவனின் முற்றத்தில் மூங்கில் மரத்தின் பூக்கள் உதிர்ந்தும், காந்தள் பூக்கள் படர்ந்தும் இருக்கும் அம்முன்பனிக் காலத்தில் வாடைக் காற்று வீசும். இத்தகைய சிறப்பான மலையினை மூவேந்தர்கள் முற்றுகை யிட்டனர். அப்பொழுது இம்மலை மக்களோ, கபிலரால் வளர்த்து பழக்கப்படுத்தப்பட்ட கிளிகள்யெல்லாம் கொண்டு வந்த கொடுத்த நெற் கதிர்களை ஆம்பல் மலர் தண்டுகளுடன் சமைத்து உண்டு நாட்களைக் கழித்தனர். இந்நிலையில் பறம்பினை முற்றுகையிட்ட மூவேந்தர்களைத் தன் குதிரைப்படையால் பாரி புறம் காட்டி ஓடச் செய்தான். இவ்வளவு சிறப்பான மலையில் தேனுடன் பூத்துள்ள மலரைப் போன்ற நெற்றியை உடைய தலைவியை, தலைவனே நீ பிரிவின் போது நினைத்துப் பார்த்ததுண்டா? என்பதே அப்பாடல் கருத்தாகும். பாடல் வருமாறு:

குறவர் முன்றில்
முந்தூழ் ஆய் மலர் உதிர, காந்தள்
னீடு இதழ் நெடுந் துடுப்பு ஒசிய, தண்ணென
வடை தூக்கும் வருபனி அற்சிரம்,
நம் இல் புலம்பின் தம் ஊர்த் தமியர்
என் ஆகுவர் கொல் அளியார்தம் ? … (அகம். 78)

பாரியின் பறம்பு மலைக் குறித்து பல பாடல்கள் பேசுகின்ற நிலையில், அவனது வளமான மலையை மூவேந்தர்கள் முற்றுகை யிட்டபொழுது அங்கு வாழ்ந்த மக்கள் எவ்வாறு அதனை எதிர்கொண்டனர் என்பதை மேற்பார்த்த பாடல் தெளிவாக விளக்குகின்றது. எனினும் காலப்போக்கில் பறம்பு மலையை மூவேந்தர்கள் கைப்பற்றினர் என்பதே வரலாறு

இவ்வாறே சிறு இனக்குழுத் தலைவர்கள், குறுநில அரசர்கள் ஆகியோரை வீழ்த்திய பிறகே மூவேந்தர்கள் பேரரசர்களாக வளர்ச்சியடைந்தனர். பாரியின் மலை வளத்தை இம்மூவேந்தர்கள் கைப்பற்றியபின் எவ்வாறு பகிர்ந்து கொண்டனர் என்பதெல்லாம் ஆய்வுக்குரிய ஒன்று.

இன்று நாம் நில வரைபடத்தைப் பார்க்கும் பொழுது ‘சிங்கம்புணரி’யில் இருந்து ‘திருவலந்தூர்’, ‘காட்டுக்குடி பட்டி’ ஆகிய ஊர்களுக்குப் பறம்பு மலைத் தொடருக்கு இடையில் உள்ள வழியில்தான் செல்ல வேண்டும். இச்சாலை இன்று ‘திருவலந்தூர் – பொன்னமராவதி சாலை’ என்று அழைக்கப் படுகின்றது. இவ்வழி இல்லையெனில் ‘மேலைச் சிவபுரி’ யைச் சுற்றித் தான் மேற்கண்ட ஊர்களுக்குச் செல்ல வேண்டும். இந்த போக்குவரத்து வழி பாண்டிய மன்னனுக்கு முக்கியமான ஒன்றாக அன்று இருந்திருக்க வேண்டும். (பார்க்க வரைபடம்)

இந்தப் போரின் அதிகப்படியான பயனை பாண்டிய மன்னனே அடைந்திருப்பான் எனக் கருதத் தோன்றுகின்றது. சேரர்களுக்கு இதில் பெரிய பலன் இருந்திருக்காது.காரணம், கபிலர், பாரியின் மகள்களை மணம் செய்து வைக்க வேண்டி சேர அரசன் ‘செல்வக் கடுங்கோ’வைச் சந்தித்து அவனைப் பாடி பரிசில் பெற்று அவனது நண்பன் ‘மலையமான் திருமுடிக்காரி’ யைப் பார்க்கச் செல்கின்றார். திருமுடிக்காரியின் இரு மகன் களுக்குத் தான் பாரி மகளிர் இருவரும் மணம் செய்து வைக்கப்படுகின்றனர். இவ்வாறு சேர அரசன் பாரி மகளிருக்கு உதவிய செயலானது, நாம் மேற்சொன்ன கருத்துக்கான காரணத்தை வலுப்படுத்தவே செய்கின்றது.

பாண்டியன் செய்த பறம்பு மலைப் போரின் தேவைக் குறித்து அறிய வேண்டியுள்ளது. பாண்டியர்களுக்கு மலைப் பகுதியினை ஆட்சி செய்யும் குறுநில அரசர்கள் திறையாக யானைகள் பலவற்றைக் கொடுத்தனர். அவை எப்படிப்பட்டயானைகளாக இருக்க வேண்டும் எனில், வெண்மையான தந்தங்கள் அறுக்கப்படாமல் உள்ளவையாக இருக்க வேண்டும். இவ்வாறு திறையாகப் பெற்ற யானைகளைக் கொண்டுதான் பாண்டியன் யானைப் படையினை அமைத்தான். சான்றாக, வடக்கே வேங்கட மலைப் பகுதியில் ஆட்சி செய்த குறுநில மன்னர்கள் யானைகளைத் திறையாக பாண்டிய மன்னனுக்கு வழங்கியதையும் அதனைக் கொண்டு அவன் யானைப் படை அமைத்ததையும் அகம். 27 ஆம் பாடல் வழி அறிய முடிகின்றது.

பறம்பு மலைப்பகுதியில் உள்ள காடுகளில் அதிக அளவில் யானைகள் இருந்தன. பாரி தன்னை நாடி வருபவர்களுக்குப் பரிசாக யானைகளைக் கொடுத்துள்ளான். வளமான இந்த மலைத் தொடரும், அதன் கீழ் அமைந்துள்ள ஊர்களும் பாண்டிய னுக்குத் தேவைப்பட்டது. எனினும் அவன் தனியாக நின்று பாரியை போரில் வெல்வது கடினம். ஆகவே மூவேந்தர்கள் கூட்டாகச் சேர்ந்து பாரியின் பறம்பை முற்றுகையிட வேண்டிய நிலை ஏற்பட்டது, முடிவில் அவர்கள் வெற்றியும் பெற்றனர்.

இவ்வாறாகத்தான் சத்திய புத்திரர்கள், வேளிர்கள், ஓவியர், எவ்வியர் என பல்வேறு குறுநிலத் தலைமைகளை வீழ்த்தியே மூவேந்தர்கள் தங்கள் ஆட்சிப் பரப்பையும் செல்வங் களையும் பெருக்கிக் கொண்டனர் என்பது வரலாறு.

பாரியின் மறைவிற்குப்பின், ஈச்ச மரத்தின் ஓலைகள் உதிர்ந்து, குவிந்து குப்பை மேடாக அம்மலைப்பகுதியில் கிடந்தன. அவ்வாறு பாழ்பட்டிருந்த அந்நிலத்தின் வழியே உப்பு வணிகர் கள் தங்கள் வண்டிகளை ஓட்டிச் சென்றனர் என கபிலர் புறம். 116 பாடலில் மனம் கலங்கி எழுதுகின்றார். மேலும் பறம்பு மலையில் உள்ள குளங்களோ உடைந்து, அழிந்து கிடந்தன என்பதை புறம். 188 ஆம் பாடலில் அவர் குறிப்பிடுகின்றார். பறம்பு மலைத் தொடரின் வளமும் அதன் சிறப்பும் பாரியின் மறைவுக்குப்பின் அழிந்து சிதைந்திருந்ததை நுட்பமாக சங்க இலக்கியப் பாடல்கள் பதிவு செய்கின்றன.

மேலும், பறம்பு மலை ஒரு காலத்தில் நன்னன் மரபினருக்கு உரியதாக இருந்துள்ளது என்பதை அகம். 356 பாடல் குறிப்பிடு கின்றது. பின்னாளில் முருக வழிபாட்டினனான வேள் பாரி வசம் வந்தது. அடுத்து பாண்டியர், சோழர் என பல அரசர்களின் ஆட்சிக்கு உட்பட்டதாக இருந்தது. மாறாக, இன்று பறம்பு மலையின் உச்சியில் ஒரு மசூதி அமைந்துள்ளதைப் பார்க்கலாம். இவ்வாறு பல்வேறு வரலாற்றுச் சுவடுகளைப் பறம்பு மலை தன்னகத்தே
கொண்டுள்ளது. (நூலிலிருந்து.)

2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் நிலம் – சி.இளங்கோ

வெளியீடு: அலைகள் வெளியீட்டகம்
Buy this book online: https://www.heritager.in/product/2000-andukaluku-munthaiya-tamil-nilam/
To order on WhatsApp: wa.me/919786068908
Call: 097860 68908
Buy online: www.heritager.in

Social Media Handles:
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia

தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு

#books #tamilbookstore #Heritager wwww.heritager.in

Buy History and Heritage Related book online:

Buy Tamil Inscription Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/inscriptions/
Buy Tamil Literature Books: https://www.heritager.in/product-category/books/tamil/literature/
Buy Tamil Archaeological Books: https://www.heritager.in/product-category/books/tamil/archaeology/
Buy Tamil Temple Architecture and Art Books: https://www.heritager.in/product-category/books/tamil/art/
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/