அறுவகைத் தெய்வமரபுகள் (அறுவகைச் சமயங்கள்)

அறுவகைத் தெய்வமரபுகள் (அறுவகைச் சமயங்கள்) :

இந்தியாவின் தொன்மையான சமயங்களில் பல்வேறு தெய்வங்களை வணங்கும் வழக்கம் இருந்து வந்தது. இத்தெய்வங்களில் சில ஒரு காலத்தில் சிறப்புப் பெற்றிருந்தன. வேறு சில தெய்வங்கள் சிறப்புப்பெறத் தொடங்கியபோது முதலில் உச்சநிலையிலிருந்த தெய்வங்கள் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டன. இவ்வாறு காலந்தோறும் மாறுதல்கள் நடைபெற்றுக்கொண்டு வந்தன. ஒரு காலத்தில் உன்னத நிலையிலிருந்தவர்கள் மற்றொரு காலத்தில் பின்னுக்குத் தள்ளப்பட்டனர். உதாரணமாக ரிக்வேத காலத்தில் முதன்மையிடத்தைப் பெற்றிருந்த இந்திரன், வருணன், அக்னி, பிரம்மா, சூரியன் ஆகியோர் பிந்திய வேத காலத்திலும் புராண காலத்திலும் பின்னுக்குத் தள்ளப்பட்டனர். தொடக்கத்தில் ஏதோ ஒரு இடத்தைப் பெற்றிருந்த விஷ்ணுவும் சிவனும் (ருத்ரன்) இதிகாச புராண காலங்களில் முதன்மையிடத்தைப் பெற்றனர். பிரம்மா, விஷ்ணு, சிவன் என்னும் மும்மூர்த்திகளின் நிலை உயரலாயிற்று. இத்தெய்வங் களை வணங்கியோர் ஒருங்கிணைந்து பௌத்த, சமண சமயத்தினரை ஒடுக்கப் பாடுபட் டனர். அச்சமயங்கள் தங்களது செல்வாக்கை இழந்த தருணத்தில் வைதீக சமயப் பிரிவின ரிடையே காழ்ப்புணர்ச்சி ஏற்படத் தொடங்கியது. ஒரு சமயப் பிரிவினர் மற்றதொரு சமயப் பிரிவினரைத் தங்களுக்குக் கீழானவர்கள் என்று கருதத் தொடங்கினர். இதனால் தாங்கள் வணங்கும் தெய்வமே மற்ற தெய்வங்களைவிட உயர்ந்ததும் சக்தி வாய்ந்ததும் ஆகும் என்று நம்பினர். அதற்கான செய்திகளைத் தொகுத்தனர். அவையே சமய இலக் கியங்களாகவும் தொன்மக் கதைகளாகவும் மலர்ந்தன.

வேதத்தில் ”ஏகம் ஸத் விப்ரா பஹீதா வதந்தி” என்று கூறப்பட்டுள்ளது. அதாவது,மெய்ப்பொருள் ஒன்று. சான்றோர் அதற்குப் பல பெயர்களிட்டிருக்கின்றனர்’ என்பதாகும். அதாவது ஒரே இறைவனுக்குப் பல பெயர்கள் உண்டு. பல பெயர்களைக் கொண்டு பல தொழில்களைச் செய்பவனும் ஒரே இறைவனே என்றெல்லாம் பேசப்பட்டது. இந்தியச் சமயங்களின் இந்நிலையினை மாக்ஸ்முல்லர் ‘ஹீனோதியிஸம்’என்று கூறினார். எனவே, ஒரு பக்கம் ஒவ்வொரு சமயப் பிரிவினரும் தங்களது கடவுளே முதன்மையானவர் என்று சொல்லிக் கொண்டிருக்கும் நிலையும் அனைத்தும் ஒருவனே இறைவனில் பேதமில்லை என்று கூறும் நிலையும் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. இதனை இந்தியச் சிற்பக்கலை வளர்ச்சியிலும் காணமுடிகிறது.

பெண் தெய்வ வழிபாடு -சாக்தம் :

உலகின் எப்பகுதியிலும் தொன்மையான வழிபாடாகக் கருதப்படுவது தாய்த்தெய்வ (சக்தி) வழிபாடும் சூரிய வழிபாடுமாகும். இந்தியாவில் சிந்து சமவெளி நாகரிக காலத்திலேயே பெண் வழிபாடு சிறப்புற்றிருந்தது. அப்பகுதியில் ஒவ்வொரு வீட்டிலும் பெண் சிற்பங்கள் வைத்து வணங்கப்பட்டதை அறியச் சான்றுகள் பல கிடைத் துள்ளன. ஆனால், வேத காலத்தில் பெண் தெய்வ வழிபாடு பிரபலமற்ற நிலையிலிருந் தது. ஆண் கடவுளரின் செல்வாக்குப் பெருகியது. வேத காலத்திற்கு முந்திய மக்கள் தாய்த்தெய்வத்தை வேளாண்மையின் மூலக்கூறான மண்ணின் தெய்வமாகக் கருதி வழி பட்டனர். ஆனால் வேதகாலத்தில் வானுலகக் கடவுளுக்கு முக்கியத்துவம் தரப்பட் டது. இதிகாச – புராணக் காலங்களில் பெண் தெய்வங்கள் ஆண் கடவுளருடன் தொடர்பு படுத்தப்பட்டனர். அவர்களது மனைவியர்களாகவோ சக்திகளாகவோ துணையாளர் களாகவோ ஆக்கப்பட்டனர். இதனைக் காளிதாசரின் இரகுவம்சத்திலும் குமாரசம்பவத் திலும் ஸ்கந்த குப்தரின் சூனாகார் கல்வெட்டிலும் குப்தர் காலச் சிற்பங்களிலும் காணலாம். இவற்றில் சிவனும் பார்வதியும் கணவனும் மனைவியாகவும் விஷ்ணுவும் ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோர் கணவனும் மனைவியராகவும் சித்தரிக்கப்படலாயினர். சிவனும், பார்வதியும் இணைந்த அர்த்தநாரியின் சிற்பங்கள் குப்தர் காலத்திலேயே வடிக்கப்படலாயின.

கி.பி. நான்காம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்ட விஷ்ணுபுராணம் மகா லட்சுமியை விஷ்ணுவின் மனைவியாகக் குறிப்பிட்டது. இவ்வாறு பெண் தெய்வங்கள் சிவன், விஷ்ணு மற்றும் பிற ஆண் கடவுளருடன் இணைக்கப்பட்டபோதும் அவர்களால் சக்தி வழிபாடு தனிச்சிறப்பு வழிபாடாகப் பரிணமித்து வளர்ச்சியடைவதைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. குப்தர் காலத்திலேயே (கி.பி. 4-6 நூற்றாண்டுகள்) பெண் தெய்வ வழிபாட்டைக் குறிக்கும் சாக்தம் தனித்த வழிபாட்டு நெறியாக வளரத் தொடங்கியது. கி.பி.3-5 நூற்றாண்டுகளில் எழுதப்பட்ட மார்க்கண்டேய புராணத்தின் ஒரு பகுதியான தேவிமகாத்மியம் சக்தியின் சிறப்பியல்புகளையும் தனித்தன்மையையும் எடுத்தியம்பு கின்றது. இதன் மூலம் உலகின் அனைத்து உயிர்களையும் உற்பத்தி செய்பவளும் காத்து அருள்புரிபவளும் அன்னையே; அவளிலிருந்து அனைத்துக் கடவுளரும் தோன்றினர் என்றும் விளக்கப்பட்டது. மகாவிஷ்ணுவும் சிவனும் இராமனும் பிறரும் தேவியைத் துதித்தனர் என சாக்தர்கள் பறைசாற்றினர். லலித சகஸ்ரநாமமும் தேவிபாகதவ புராண மும் தன்னிகரற்றவள், அளவிடற்கரியவள், பிரபஞ்சத்தைக் காப்பவள் என்றெல்லாம் சக்தியின் சிறப்பினைக் கூறுகின்றன. இதன் உச்சகட்டம்தான் வங்காளத்தில் காளிதேவி சிவபெருமானின்மீது நின்று கொண்டிருக்கும் காட்சியாகும். தேவியின் பத்துவிரல்நகங்களிலிருந்தே விஷ்ணுவின் பத்து உருவங்கள் தோன்றியதாக லலித சகஸ்ரநாமம் கூறுகிறது. இந்தியாவில் புனிதமான புவியியலமைப்பினை உருவாக்கும் வகையில் தேவியின் சக்தி பீடங்கள், நாடெங்கும் பரவிக் கிடப்பதாகக் கூறப்பட்டது. தேவியின் உடலில் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு இடத்தில் விழுந்ததென விவரிக்கப்பட்டது.

சூரிய வழிபாடு – சௌரவம் :

உலகெங்கிலும் வெளிப்படையாகத் தெரிந்த வானுறையும் தெய்வம் சூரிய னாகும். ரிக் வேத காலத்திலேயே சூரியன் முதன்மையான கடவுளர்களில் ஒருவனாக வணங்கப்பட்டான். உயிரினங்களைப் பாதுகாக்கும் சக்தி படைத்ததோடு,மனித வாழ்வின் இருளைப் போக்கும் ஒளியைத் தரத்தக்கக் கடவுளே சூரியனாவான். இதிகாச -புராணங்கள் சூரியனை விஷ்ணு நாராயணரோடு தொடர்புபடுத்தின. ஒரு சில இடங்களில் சிவனோடும் தொடர்பு படுத்தப்பட்டது. சூரிய தபினி -உபநிடதம் சூரியனைத் தலைமையான கடவுள் என்று கூறுகிறது. இராமாயணத்தில் ஸ்ரீராமன் சூரியனை வணங்கி ஆசிபெற்று போருக்குச் சென்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மார்க்கண்டேய புராணம் பிரம்மா -விஷ்ணு சிவன் ஆகிய மூவரின் கட்டமைப்பே சூரியன் என்கின்றது. இருப்பினும் சூரியனைத் தனித்த கடவுளாக வணங்கும் நிலை தொடர்ந்தது என்பதில் ஐயமில்லை. தமிழகத்தில் சிலப்பதிகாரத்தில் சூரிய வழிபாடு சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தமிழகத்துச் சிவன் கோயில்களில் நுழைவாயிலின் இடதுபக்கம் சூரியனின் சிற்பத்தை வைக்கும் மரபும் தொடங்கியது. காலையில் எழுந்ததும் மனிதனின் அறிவு ஒளியைக் கிளர்ந்தெழச் செய்யும் சூரியனை வணங்குவது என்பது பல சமயத்தவரிடையே குறிப்பாக பிராமணரிடையே, இன்றும் நிலவி வருகின்ற ஒரு பழக்கமாக உள்ளது. சீனாவிலும் ஜப்பானிலும் இன்னும் பிற நாடுகளிலும் இவ்வழிபாடு சிறப்புற்று விளங்குகின்றது. சூரிய வழிபாடு ‘சௌரவம்’ என்றும் அவனை வழிபடுவோர் ‘சௌரவர்’ என்றும் அழைக்கப்பட்டனர்.

விஷ்ணு வழிபாடு – வைணவம் :

வேதத்தில் இவ்வுலகின் மூன்று வெளிகளை மூவடிகளால் விஷ்ணு அளந்தது பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. வேதப் பாடலொன்று விஷ்ணுவை சூரியனோடு தொடர்புபடுத்திக் காட்டுகிறது. விஷ்ணுவை வணங்குவோர் வைணவர் எனப்பட் டனர். வேத காலத்தைத் தொடர்ந்து விஷ்ணுவும் நாராயணனும் வாசுதேவ கிருஷ்ண ரும் ஓரணியில் இணைக்கப்பட்டனர். இதன் விளைவாக ஒன்றோடொன்று தொடர் புடைய வழிபாட்டு முறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு விஷ்ணுவின் அவதாரங்கள் என்னும் கோட்பாடு உருவாயிற்று. விஷ்ணுவே ஆக்கலும் காத்தலும் அழித்தலுமான தொழில்களைச் செய்கின்றார் என வைணவர்கள் நம்பினர். இந்தியாவின் இருபெரும் காவியங்களான மகாபாரதமும் இராமாயணமும் வைணவத் தொடர்புடையனவாக அமைந்தன. கி.மு. 3 – 2 நூற்றாண்டு காலத்திலேயே வைணவ சமயம் சுடர்விடத் தொடங்கியது.கி.பி. ஒன்றாம் நூற்றாண்டிலேயே விஷ்ணுவின் உருவம் பொறிக்கப் பட்ட நாணயம் பாஞ்சால மன்னன் விஷ்ணுமித்திரனால் வெளியிடப்பட்டது. விஷ்ணுபுராணம் விஷ்ணுவையன்றி வேறு எவருக்கும் உலகைக் காக்கும் வல்லமை இல்லை என்று குறிப்பிடுகிறது. குப்தர் காலத்தில் அரசன் விஷ்ணுவின் பிரதிநிதி என்ற கோட்பாடு வளரலாயிற்று, விஷ்ணுவும் சிவனும் ஒன்றெனும் கருத்து உருவாகி, அவர்கள் இருவரும் இணைந்துள்ள ஹரிஹார் சிற்பம் அக்காலத்திலேயே அமைக்கப்பட்டபோதும் மற்ற கடவுளர்கள் ஒவ்வொரு பிரச்சனையையும் தீர்க்கும் வழியைப் பெறவும் அசுரர்களை அழிக்கவும் விஷ்ணுவின் உதவியையே நாடுவதாக புராணக் கதைகள் எழுந்தன. இதனால் அவரது தனிப்பட்ட வழிபாடு. ஒரு பிரிவினரிடையே வளர்ச்சியடையத் தொடங்கியது. அவர் மற்றவர்களைவிட மேலானவர் என்றுரைக்கும் சிற்பங்களும் வடிக்கப்பட்டன. தமிழகத்தில் பக்தி இயக்கத்தின்போது ஆழ்வார்களும் இவரைப் புகழ்ந்து பாடலாயினர்.

சிவ வழிபாடு – சைவம் :

சிவபெருமானை வழிபட்டோர் சைவர்கள் எனப்பட்டனர். ரிக்வேத காலத்தில் ருத்ரன் என்று அழைக்கப்பட்ட கடவுளே பிற்காலத்தில் சில மாற்றங்களுடன் சிவன் என வணங்கப்பட்டார். அவர் பக்தர்களுக்கு அன்பனாயும் எதிரிகளுக்கு அஞ்சத்தக்கவ னாகவும், அண்டினோருக்குக் கருணை செய்பவனாகவும் கருதப்பட்டார். யஜுர்வேதத் தில் சதாருத்ரியத்தில் ருத்ரனாக சாதாரண நிலையிலிருந்த இவர் பிரபஞ்சத்தின் நாயகனாக வர்ணிக்கப்படுகிறார். வாஜசநேய சம்ஹிதையில் அனைத்துத் திசைகளின் கடவுளாக்கப்பட்டார். சுவேதாசுவதர உபநிடதத்தில் சிவனது (புனிதமான, சாந்தமான) தத்துவம் வெளிப்படுத்தப்பட்டது. இதில் இவரது பெயர்களாக ஹரன், மகாதேவன், ஈசன், ஈசானன், மகேசுவரன், பகவான் என்றெல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளன. இதிகாச புராண காலங்களில் இவர் ஒளிப்பிழம்பான தூண் என்றும் அனைத்தும் அவரே என்றும் தொன்மக் கதைகள் இயற்றப்பட்டன. தேவியருக்கும் பிற கடவுளருக்கும் மேலானவர் என்று சைவர்களால் சிவன் போற்றப்பட்டார். ஒரு பிரிவினர் தேவியும் சிவனும் இணைபிரியாதவர் என்று காட்ட அர்த்தநாரி உருவங்கள் அமைக்கலாயினர். சிவனும் விஷ்ணுவும் வேறல்ல என்பதை உணர்த்த ஹரிஹரர் சிற்பத்தைப் படைத்தனர். சிவனையும் பார்வதியையும் இணைத்து கல்யாணசுந்தரர் ஆக்கினர். பார்வதியை விஷ்ணுவின் சகோதரியாக்கினர். இத்திருமணக் கோட்பாடு மூவரையும் இணைத்தது.

கணபதி வழிபாடு – காணாபத்யம் :

சிவன் – பார்வதி குடும்பத்தில் கணபதியும், ஸ்கந்த கார்த்திகேயனும் பிள்ளைகளா கச் சேர்க்கப்பட்டனர். இந்திய தொல்மரபுக்குழு ஒன்றின் கடவுளாக வணங்கப்பட்ட கணபதி வைதீக சமயத்தவர்களாலும் சமணராலும் பௌத்தராலும் ஏற்றுக் கொள்ளப்பட் டார். சிவபெருமான் பிராமணரின் கடவுளென்றும் கணேசர் (கணபதி) சூத்திரர்களின் கடவுள் என்றும் மனுதர்ம சாத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் ஒரு கால கட்டத்தில் தந்தையும் மகனுமாக இணைக்கப்பட்டனர். ஆனால் கணபதியை மட்டுமே வணங்கும் காணாபத்யர்களோ தம்மால் வணங்கப்படும் இக்கடவுளே முழுமுதற் கடவுள் என்றும் ஏனைய கடவுளர்கள் அவரை வணங்கி ஆசி பெற்றே எக்காரியமும் செய்ய முனைவர் என்னும் தொன்மங்களை இயற்றினர். இதனால் சிவ- பார்வதி குடும்பத்தில் இணைக்கப்பட்டபோதும் அவரது தனிச்சிறப்பான வழிபாட்டைத் தடுத்து நிறுத்த யாராலும் இயலவில்லை. கணபதி வழிபாடு தொடர்ந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது.

ஸ்கந்த கார்த்திகேயன், சுப்பிரமணியன் வழிபாடு – கௌமாரம் :

வடநாட்டில் ஸ்கந்த – கார்த்திகேயன், சுப்பிரமணியன், குமாரன் என்றும் தமிழகத்தில் முருகன் என்றும் வணங்கப்பட்ட போர்க்கடவுளான இவர் சிவ பார்வதி மைந்தனாகக் கருதப்பட்டார். அக்னியில் தோன்றியவர் என்றும் கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவர் என்றும் அவரது தோற்றம் பற்றிப் பலவாறாகக் கூறப்படுகிறது. கணபதியையும் கார்த்திகேயனையும் இணைக்க முன்னவர் பின்னவ ருக்கு மயிலை வாகனமாக அளித்தார் என்றும் சொல்லப்பட்டது. காளிதாசரின் குமார சம்பவத்தில் சூரனைச் சம்ஹாரம் செய்யவே சிவன் – பார்வதி மைந்தனாகக் குமாரன் அவதரித்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பிரம்மனையும் பிறரையும் இக்கடவுளுக்குக் கீழானவர்கள் என்ற எண்ணத்தை உருவாக்க ‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்திற்கு விளக்கம் சொன்னவர் இவரே என்றும் தந்தைக்கே உபதேசம் செய்தவர் என்றும் இவரைப் பற்றிய தொன்மக்கதைகள் உருவாயின. சிவ- பார்வதி குடும்பத்தோடு இணைத்துக்காட்ட பெரும் முயற்சிகள் மேற்கொண்டபோதும் இவரது தனிச்சிறப்பு வழிபாடு மேலோங்கி வருவதைத் தடுக்க முடியவில்லை. இவர் தனிப்பெருந்தெய்வம் என்பதை உணர்த்து வதற்காக ஏற்பட்டதுதான் ‘ஞானப்பழம்’ தொடர்பான கதையாகும். தமிழகத்தில் உதய மான இக்கதையின் விளைவாக குன்றுதோறும் குமரன் ஆட்சி என்ற நிலை உருவானது.

எனவே, சக்தி, சூரியன், விஷ்ணு, சிவன், கணபதி, ஸ்கந்த கார்த்திகேயன் ஆகிய ஆறு தெய்வங்களும் ஏதேனும் ஒரு வகையில் ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்தப்பட் டபோதும் அவர்கள் தனித்தனியே பக்தர்களையும் வழிபாட்டு மரபையும் கொண்டி ருந்தனர். சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினரும் இவர்களில் ஏதேனும் ஒருவரைத் தம் இஷ்டதெய்வமாகக் கொண்டு வழிபடலாயினர். இந்திய சமயத்தில் அல்லது வைதீக சமயத்தில் இந்த ஆறு பிரிவினர் வழிபடும் முறையே சண்மதம் அல்லது அறுவகைச் சமயம் என அழைக்கப்படலாயிற்று. கி.பி. எட்டாம் நூற்றாண்டளவில் வாழ்ந்த ஆதி சங்கரரும் அறுவகைச் சமய வழிபாட்டை ஆதரித்துப் பேசியுள்ளார். ஆனால்,அவருக்கும் முன்பே குப்தர்களது காலத்தில் ஐந்து கடவுளரை வணங்கும் பஞ்சாயதன முறை மற்றும் அறுவரை வணங்கும் சண்மத வழிபாட்டு முறை வழக்கிலிருந்து வந்தது. பெருங்கதை, தேவாரம்,திருவாசகம் ஆகியவற்றில் அறுவகைச் சமயம் பற்றி குறிப்பிடப்படுகிறது. அறிவினால் மிக்க அறுவகைச் சமயம்’என்ற தேவாரமும் ‘திருத்தகும் அறுவகைச் சமயத்து அறுவகையோர்க்கும்’ என்று திருவாசகமும் குறிப்பிடுகின்றன.

இக்கருத்து இந்திய சிற்பக்கலையிலும் தாக்கம் பெற்றது. இதனைத் தியோகாரில் உள்ள குப்தர் காலத்து தசாவதாரக் கோயில் தேவகோஷ்டத்தில் உள்ள அனந்தசயனச் சிற்பத்தில் காணலாம். இதில் விஷ்ணு அனந்தசயனத்திலிருக்கின்றார். அவரது உருவத் திற்கு மேலே அவரது தொப்புளிலிருந்து உருவான பிரம்மாவும் காளை வாகனத்தின்மீதுஅமர்ந்தபடி சிவனும் பார்வதியும் மயில்மீது அமர்ந்த பாணியில் கார்த்திகேயனும் தலையைச் சுற்றிப் பிரபையுடன் சூரியனும் சற்றுத்தள்ளி கணபதியும் உள்ளனர். சண்மதக் கோட்பாட்டைச் சித்தரிக்கும் முதலாவது சிற்பத்தொகுதி இதுவேயாகும். இதனைத் தொடர்ந்து, தென்னிந்தியாவில் பாண்டியர் குடைவரைக் கோயில்களிலும் இம்மரபு பின்பற்றப்பட்டிருப்பதைக் காணலாம். இது ஏறத்தாழ சங்கரரின் காலத்தினை ஒட்டியதாகும்.

பாண்டியரின் திருப்பரங்குன்றம் குடைவரையில் சிவன்,விஷ்ணு,துர்க்கை, கணபதி, சுப்பிரமணியர் ஆகியோரின் சிற்பங்களைக் காணலாம். இங்கு பஞ்சாய தனமுறை பின்பற்றப்பட்டுள்ளது. இதற்குச் சற்றுக் காலத்தால் பிந்திய திருச்சி கீழ்க்குடை வரையில் சிவன், விஷ்ணு, கணபதி, பிரம்மா, சுப்பிரமணியர், துர்க்கை, சூரியன் ஆகிய அனைவரும் இடம் பெற்றுள்ளனர். இது சண்மதக் கோட்பாட்டிற்கு சிறந்த ஓர் உதா ரணமாகும்.

பாண்டியர்களது கல்வெட்டுகளில் காணப்படும் மெய்க்கீர்த்திகளில் அவர்கள் அறுவகைச் சமயங்களும் வளரப் பாடுபட்டனர் என்ற செய்தி காணப்படுகிறது. இவை அனைத்தும் ஒன்றிலிருந்து தோன்றியவை என்ற உணர்வு அவர்களுக்கு இருந்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் அறுவகைச் சமயங்களையும் ஆதரித்துள்ளனர். ஒரே மூலப்பொருளைச் சைவர்கள் சிவன் என்றும் வைணவர்கள் விஷ்ணு என்றும், காணாபத்யர் கணபதி என்றும் கெளமாரர்கள் குமரன் என்றும், சௌரவர்கள் சூரியன் என்றும், சாக்தர்கள் சக்தி என்றும் பெயர் வைத்து வழிபடத் தொடங்கினர் என்பதை உணர்ந்தோர் பேதங்களைப் பார்ப்பதில்லை. இதனை உணர்ந்த தொடர்ந்து வந்த அரச மரபினரும் மக்களும் அறுவகைச் சமயங்களையும் ஆதரித்து வரலாயினர். கோயில்களில் சிற்பங்களில் இவ்வனைவரும் இடம் பெறலாயினர். இவர்களுக்குள் இருந்து வந்த வேற்றுமைக் கருத்துக்களைக் காட்டும் சிற்பங்களும் வடிக்கப்பட்டன. இந்நூலின் பின்வரும் பகுதிகளில் ஒவ்வொரு பிரிவினைச் சேர்ந்த தெய்வங்களின் தோற்றம் அவற்றின் வழிபாட்டு வளர்ச்சி நிலை, சிற்பங்களில் அவை பெற்றிருந்த முக்கியத்துவம், கல்வெட்டுகளில் உள்ள அவர்கள் தொடர்பான செய்திகள் ஆகியன பற்றி இந்தியக் கலை வரலாற்றுக் கண்ணோட்டத்தோடு விளக்கப்பட்டுள்ளன.
(நூலிலிருந்து)

இந்தியக் கலைவரலாற்றில் அறுவகைத் தெய்வ வழிபாடு சக்தி, சூரியன், விஷ்ணு, சிவன், கணபதி, முருகன் – முனைவர் வெ. வேதாசலம்
விலை: 1200/-
வெளியீடு: தனலட்சுமி பதிப்பகம்
Buy this book online: https://www.heritager.in/product/inthiya-kalaivaralaatril-aruvagai-theiva-vazhibaadu/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908

Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4

தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/

#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers