பாண்டியநாட்டு பெயர்கள்

பெயர்கள் :

பாண்டியநாட்டில் இந்நாடுகளைக் குறிக்க நாடு என்ற பெயரோடு கூற்றம், வளநாடு. முட்டம், இருக்கை,ஊர்க்கீழ், குளக்கீழ், ஆற்றுப்போக்கு, ஆற்றுப்புறம் என்று பல்வேறு பெயர்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை இடத்திற்கும், சூழ்நிலைக்கும், காலத்திற்கும் ஏற்ற முறையில் இடப்பெற்ற பெயர்கள் ஆகும். இவற்றில் முட்டம், இருக்கை என்ற பெயர்கள் பாண்டியநாட்டில் மட்டும் நாடுகளுக்கு வழங்கப்பட்ட பெயர்களாகும். தமிழ்நாட்டின் பிறபகுதிகளில் நாட்டுப்பெயராக இப் பெயர் வழக்கு காணப்படவில்லை.

பாண்டியநாட்டில், குறிப்பிட்ட நாட்டுப்பிரிவில் அமைந்த ஏதாவது ஓர் ஊரின் பெயரோடு நாடு என்ற பின்னொட்டைச் சேர்த்து அந்நாட்டிற்குரிய பெயராக வழங்குவது பெருவழக்காக இருந்திருக்கின்றது. (எ.கா. வெண்பைக்குடிநாடு, ஆவியூர்நாடு) பாண்டியநாட்டில் இருந்த 129 நாடுகளில் 84 நாடுகளுக்கு இவ்வாறு பெயர் சூட்டப் பெற்றிருக்கின்றது. (பார்க்க நாடுகளின் பெயர்ப்பட்டியல் ) இதனால் நாடுகளுக்குப் பெயரிடும் முறையில் இதுவே முதன்மையான வழக்காக இருந்திருக்கின்றது எனலாம்.

முட்டம், இருக்கை போன்ற ஏனைய நாட்டுப் பெயர்கள் அருகிய அளவிலேயே இருந்திருக்கின்றன. ஊர் ஒன்றினைச் சூழ்ந்தபகுதி அல்லது சேர்ந்தபகுதி என்ற பொருளில் இப்பெயர் இடப்பெற்றிருக்க வேண்டும். காவூர் என்ற ஊரினை அடிப்படையாக வைத்து அதனைச் சூழ்ந்து தோன்றிய நாடு ‘காவூர்க்கீழ்’ என்று அழைக்கப்பட்டிருப்பது.நாட்டிற்கு ஊர் ஒன்றினை அடிப்படையாக வைத்துப் பெயரிடும் முறையைத் தெளிவுபடுத்துகின்றது. நாட்டிற்குப் பெயராக அமைந்த ஊரினை அந்நாட்டின் முதன்மையான ஊராகக் கருதுவதா தலைமை ஊராகக் கருதுவதா அந்நாட்டின் மூத்தகுடிகள் தோன்றிய ஊராகக் கருதுவதா என்பது ஆய்வாளர்களிடையே எழுந்த கேள்விகளாகும்.நாட்டின் முதன்மையான ஊராகவோ தலைநகரமாகவோ இதனைக் கருதுவதற்குச் சான்றுகள் இல்லை. பாண்டியநாட்டில் இருந்த நாடுகளில் பதினைந்திற்கும் குறைவான நாடுகளிலேயே அந்நாட்டிற்குப் பெயராக இடம்பெற்ற ஊர்ப்பெயர்கள் தொடர்ந்து வரலாற்றில் வழங்கி வரப்பெற்றுள்ளன. பிறநாடுகளில் அந்நாடு சிறப்புடன் விளங்கிவந்த காலத்திலும் அந்நாட்டிற்குரிய ஊர்ப்பெயர்களை ஆயிரக்கணக்கான கல்வெட்டுகளுக்கு இடையே காணமுடியவில்லை.

நாட்டின் பெயராக விளங்கும் ஊர்களில் நாட்டார்க்கு (நாட்டு அவை) அலுவலகம் இருந்ததாகத் தெரியவில்லை. இங்கு நாட்டவர்கள் வழக்கமாக வந்து தங்கி கூட்டம் நடத்துவது தொடர்பான செய்திகளையும் கல்வெட்டுகளில் காண்பது அரிது. மேலும் நாட்டின் பெயராக அமைந்த ஊர்கள் பல பிற்காலத்தில் பிரமதேயமாகவும், நகரமாகவும், தேவதானமாகவும் மாற்றப்பெற்றிருக்கின்றன. முரப்புநாட்டு முரப்பூர், போசளதேவசோமேஸ்வரமங்கலமாகவும் பறப்புநாட்டுப் பறம்பு, வீரநாராயணமங்கலமாகவும்” மாற்றப்பட்டிருக்கின்றன. ஆற்றூர் நாட்டு ஆற்றூர் வணிகரது எறிவீரதளமாகவும்” செங்குடிநாட்டுச் செங்குடி செங்குன்றாபுர மாகவும்” களக்குடி நாட்டுக் களக்குடி கரவந்தபுரமாகவும்” மாற்றப்பட்டிருக்கின்றன. கருங்குடி நாட்டுக் கருங்குடி கீர்த்திவிசயாலயநல்லூராகவும்” பொழியூர்நாட்டுப்பொழியூர்பார்த்திபசேகர நல்லூராகவும் மாற்றப்பட்டிருக்கின்றன.

எனவே, ஒருநாடு தோற்றம் எடுத்த காலத்தில் அப்பகுதியில் இருந்த மூத்த தொல்குடிகள் வாழ்ந்த மூதூர் ஒன்றின் பெயரே நாட்டிற்குப் பெயராக இடம்பெற்றிருக்க வேண்டும் எனத் தோன்றுகின்றது. காலப் போக்கில் நாட்டிற்குப் பெயராக அமைந்த ஊர்கள் நாட்டில் தோன்றியசமயம், வணிகம், ஆகியவற்றின் காரணமாகத் தோன்றிய பிறஊர்களின் வளர்ச்சியில் அவற்றின் தொன்மைச் சிறப்பை இழந்து மங்கிப்போயிருக்க வேண்டும். வரலாற்றில் வேறு இடம் இதற்கு இல்லாத காரணத்தினால் நாட்டிற்குப் பெயராக அமைந்த ஊர்கள் காலப்போக்கில் இடம் கண்டறியாத முறையில் மறைந்துவிட்டன. பலவூர்கள் பெயர்மாற்றம் பெற்று அதன் பெருமையையும் தொன்மையையும் இழந்தன.

நாடுகளின் பெயர்கள் :

நாடுகளுக்குப் பெயர் அமைவதில் பல்வேறுவகையான போக்குகளும் இருந்திருக் கின்றன என்பதையே கூற்றம், வளநாடு, முட்டம், இருக்கை, குளக்கீழ், ஆற்றுப்போக்கு, ஆற்றுப்புறம் என்ற பெயர்கள் உணர்த்துகின்றன. ஆனால் இவைமுன்னர்க் கூறியபடி அருகிய அளவிலேயே இருந்திருக்கின்றன. நாடுகளுக்குரிய பெயர்களின் பட்டியல், பல காலகட்டங் களில் பல பகுதிகள் இவை எவ்வாறு தோன்றி வளர்ந்தன என்பதைக் காட்டுகின்றன. (பார்க்க நாடுகளின் பெயர்ப்பட்டியல்)

கூற்றம் :

கூற்றம் என்ற பெயர் பாண்டியநாட்டில் பத்து நாடுகளுக்கு வழங்கியிருக்கின்றது. இவற்றில் பாண்டியநாட்டின் வடபகுதியிலுள்ள நாடுகளுக்கே கூற்றம் என்ற பெயர் அதிகமாக இருந்திருக்கின்றது. திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரே ஒரு நாட்டிற்கு மட்டும் கூற்றம் என்ற பெயர் இருந்திருக்கிறது.”கன்னியாகுமரி மாவட்டத்தில் இப்பெயர் வழக்கு இல்லை. தமிழ் நாட்டில் பொதுவாக சோழநாட்டில் மட்டுமே இப்பெயர் வழக்கு அதிகமாக இருந்தது. எனவே சோழ நாட்டிலிருந்து இப்பெயர் வழக்கு தெற்காகப் படிப்படியே பாண்டிய நாட்டிற்குள் பரவியிருக்க வேண்டும். கூற்றம் என்ற பெயர், நாடு என்ற பொருளிலேயே வழங்கப்பட்ட பெயராகும். பாண்டிய நாட்டு முத்தூற்றுக் கூற்றம் பத்தாம் நூற்றாண்டில் முத்தூற்றுக் கூற்ற நாடு என்றே அழைக்கப்பட்டிருப்பது இதனை உறுதிப்படுத்துகின்றது. கூறு என்ற சொல்லை அடிப்படையாக வைத்து கூற்றம் என்ற சொல் வந்திருக்க வேண்டும். (கூறு/கூற்று/கூற்று+ அம் கூற்றம்) கூறு என்பதற்குப் பங்கு, பகுதி, பிரிவு என்று பொருள்.இவற்றில் பங்கு என்று பொருள் கொள்வதே பொருத்தமாகத் தோன்றுகின்றது. குறிப்பிட்ட உரிமையுடைய பங்கு என்பதையே கூற்றம் என்ற சொல் உணர்த்துகின்றது. ஒரு நாடு வளர்ந்த நிலையில் அதற்கு உள்ளாகவே பல கூறுகள் (பங்குகள்) தோன்றியிருக்கின்றன.” மிழலைக் கூற்றமானது கீழ்க்கூறு. நடுவிற்கூறு, மேல்கூறு என்று மூன்று கூறுகளாக பிற்காலத்தில் பிரிந்துள்ளது. கூற்றம் மற்ற பிரிவுகளைவிட அளவில் பெரியதாய் இருந்தது. பாண்டிய நாட்டில் சங்க காலத்தில் சிற்றரசர் களுக்குரிய நிலப்பரப்பு கூற்றமாகப் பிற்காலத்தில் பெயரிடப்பட்டுள்ளது.

வளநாடு :

சிறிய பரப்புடைய நாடுகளுக்கு வளநாடுகள் என்று பெயரிடும் முறை பாண்டிய நாட்டில் தோன்றியதாகும்.இங்கிருந்தே தமிழ்நாட்டின் பிறபகுதிகளுக்கு இப்பெயர் வழக்கு பரவியிருக்க வேண்டும். பத்தாம் நூற்றாண்டிற்கு முன்பே பாண்டியநாட்டின் தென்பகுதியில் தாமிரபரணியின் இருகரைப்பகுதிகளில் வளநாடுகள் அதிகமாக இருந்திருக்கின்றன. வளநாடுகள் பெரும்பாலும் அரசர்களின் பெயரிலேயே அமைந்துள்ளன. (எ.கா. பராந்தக வளநாடு, திருவழுதி வளநாடு, பாண்டிமார்த்தாண்டவளநாடு, உலகுடைச் சிந்தாமணி வளநாடு, மான வீரவளநாடு) அரசர்கள் தங்களது செல்வாக்கை நாடுகளின் மீது செலுத்தி, தங்கள் கட்டுப்பாட்டிற்குள் அவற்றைக் கொண்டு வரவேண்டும் என்ற முயற்சியே இதற்குக் காரணமாக இருக்கலாம். மேலும், அரசர்க தம்முடைய முதன்மையை நாடுகளிடையே நிலைநிறுத்திக் கொள்ளவும் பேரரசுத் தன்மையுடன் நாடுகளை இணைத்துக் கொள்ளவும் அவற்றின் பழைய மரபுப்பெயர்களை இவ்வாறு மாற்றியிருக்க வேண்டும் எனலாம். இந்நாடுகளுக்குத் தொடக்கத்தில் வேறுபெயர் இருந்திருப்பது இதனை உறுதிப்படுத்துகிறது. முதலில் வேறு பெயரில் இருந்த இந்நாடுகள் அரசனின் பெயரினை ஏற்றதால் வளமை என்ற சிறப்பு அடைமொழி கொடுக்கப்பட்டு அரசனது பட்டப்பெயர்களால் அழைக்கப்பட்டிருக்கின்றன. துகவூர்க்கூற்றம், மகிமாகர வளநாடு என்றும்” களக்குடி நாடு, பாண்டிமார்த்தாண்டவளநாடு என்றும் “அழநாட்டின் ஒருபகுதி தொண்டைமான்வளநாடு என்றும்”இடைக்குளநாடு, உலகுடைச் சிந்தாமணி வளநாடு என்றும்மாற்றி அழைக்கப்பட்டிருக்கின்றன.
(நூலிலிருந்து)

பாண்டியநாட்டு வரலாற்று முறை சமூக நிலவியல் (கி.பி.600-1400) – முனைவர் வெ. வேதாசலம்

வெளியீடு: தனலட்சுமி பதிப்பகம்
Buy this book online: https://www.heritager.in/product/paandiyanaattu-varalaatru-murai-samooga-nilaviyal/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908

Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4

தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/

#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers