கொங்கு நாட்டுப்புற வழக்காறுகள்

அள்ளக்கயிறு (ம) வடக்கயிறு விளக்கம் :

அள்ளையில் கயிறு கட்டப்படுவதால் இது அள்ளக்கயிறு என அழைக்கப்படுகின்றது. இது மரம் ஏறும்பொழுது இடுப்புப் பகுதியில் அணிவதால் இடுப்புக்கயிறு என்று அழைக்கப்படுகிறது.

வடக்கயிறு கொட்லா என்று அழைக்கப்படுகிறது. வடக்கயிறு என்பது முட்டை வடிவில் நீள வட்ட அமைப்பு உடையது.

அள்ளக்கயிறு என்பது நீளமாக, மிகவும் வலிமையானதாக இருக்கும். பெரும்பாலும் மரம் ஏறுபவர்களே இதனைச் செய்து கொள்வர்.

அள்ளக்கயிறு (ம) வடக்கயிறு செய்யப்படும் முறை :

காய்ந்த தேங்காய் மட்டைகளை ஒரு வாரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். அதன் பின் அவை கொட்லா என்று அழைக்கப்படும்.

பொறச மறத்தால் செய்யப்பட்ட கருவி (குச்சி) மூலம் அடிக்க வேண்டும். அவ்வாறு நர் நாராகப் பிரிந்தவற்றைவெயிலில் நன்றாகக் காய வைத்தல் வேண்டும். பின்பு வசதிக்கேற்பச் சிறிய தடிமனாகவும், பெரிய தடிமனாகவும் கயிறைத் திரித்துக் கொள்ளலாம். பொதுவாக மரம் ஏறுபவர்கள் தாங்களாகவே கயிறு திரிப்பதில்லை. தேங்காய் மட்டையிலிருந்து நார் நாராகப் பிரிக்கப்பட்டவற்றை கயிறு திரிப்பவர்களிடம் விற்றுவிடுகின்றனர். பின்பு கயிறாகத் திரிக்கப்பட்ட வடக்கயிற்றைப் பணம் கொடுத்து வாங்கிக் கொள்கின்றனர். பொதுவாக மூன்று பிரி உள்ள கயிற்றைப் பயன்படுத்துகின்றனர். பெரியவர்கள், சிறியவர்கள் அனைவருக்கும் பிரி வடக்கயிறு கொடுக்கப்படுகின்றது. ஆனால் சிறியவர்களுக்கான கயிற்றின் நீளம் குறைவாகவும், பெரியவர்களுக்கான கயிற்றின் நீளம் பெரியதாகவும் இருக்கும்.

அள்ளக்கயிறு (ம) வடக்கயிறு மேல் எருமைத்தோல் சுற்றுதல் :

இவ்வாறு தயாரிக்கப்பட்ட வடக்கயிற்றின் மீது எருமைத்தோல் கற்றப்படுகின்றது. அதாவது எருமை இறந்த பின் அதன் தோலை உரித்து, அதில் உள்ள கொழுப்பு நீக்கிவிட்டு, சுத்தம் செய்யப்படுகின்றது. அதன் பின் அந்தத் தோலை வெயிலிலும், நிழலிலும் பதமாகக் காய வைத்தல் வேண்டும்.

தோலின்மேல் பகுதி சுத்தம் செய்யப்படுவதில்லை. அதன் மேல் பகுதியில் முடிகள் இருக்கும் நிலையிலேயே ஒரு விரல் அகலத்திற்கு நீளமாக வெட்டி எடுக்கப்படுகின்றது. அவ்வாறு வெட்டப்பட்ட நீளத்தோல் வடக்கயிற்றின் மீது இறுக்கமாகச் சுற்றப்படுகின்றது. ஒரு தோல் அளவு முடிந்ததும், அடுத்த தோலை இணைக்க முன்பு சுற்றப்பட்ட தோலின் இறுதி நுனியில் சிறு துளையிட்டு அதில் புதுத்தோலை விட்டுச் சிறு முடிச்சுப் போடப்படுகின்றது. இப்போது மறுபடியும் வடக்கயிற்றின் மீது தோல் இறுக்கமாகச் சுற்றப்படுகின்றது.

இந்த முறையில் வடக்கயிற்றின் மீது எருமைத் தோல் சுற்றப்படுகின்றது. அள்ளக்கயிறு பத்து அடி நீளம் வரை செய்யப்படுகின்றது. 20 அ கயிற்றை இரண்டாக மடித்து 10 அடி நீளமாக அல்லக்கயிறு திரிக்கப்படுகிறது.

மரம் ஏறுபவர்களின் வயதிற்கும், அவர்களின் உடல் அளவிற்கும் ஏற்ப அல்லக்கயிறு தயாரிக்கப்பட்டு அலைக்கயிற்றின் ஒரு பகுதியில் ஒரு அடி நீளம் தள்ளி ஒரு அடிச்சு போடப்படுகின்றது. அதன் இன்னொரு முனை மாட்டுவதற்கு ஏற்ப அமைக்கப்படுகிறது.

அள்ளக்கயிறு முடிச்சு :

இரண்டாக மடிக்கப்பட்ட வடக்கயிற்றின் முனையில் ஒரு கயிற்றை கால் அடி அளவிற்குப் பிரித்து அதில் ஒரு பிரியை மட்டும் வைத்து முடிச்சுப் போடப்படுகின்றது. “வி” வடிவில் கயிற்றை மடித்து அதன் நுனியில் அரை அடி நீளக்குச்சியை இரு கயிற்றின் நடுவே வைத்து, ஒரு கயிற்றின் ஒரு பிரியால் குச்சியையும் சேர்த்துக்கட்டி முடிச்சுப் போடப்படுகின்றது. இந்த முடிச்சு “கொளச்சி” என்று அழைக்கப்படுகின்றது. மரம் ஏறுபவரின் உயிர் பாதுகாப்பு இந்த அள்ளக்கயிற்றின் முடிச்சைக் கொண்டே அமைகின்றது. உயிரைக் காக்கும் பணியில் அள்ளக்கயிறு பயன்படுவதால், அந்த முடிச்சு வலிமையானதாகவும் எளிதில் கழன்று விடாமலும் இருக்குமாறு போடப்படுகிறது.

வடக்கயிறு அமைப்பு :

வடக்கயிறு என்பது மூட்டை வடிவில் நீள வட்ட அமைப்பு உடையது. இது முதலில் இரண்டு அடி நீளத்தில் அல்லக்கயிறு போன்றே வடக்கயிறு உள்ளேயும், எருமைத் தோல் வெளியேயும் இருக்குமாறு பின்னப்படுகின்றது. இவ்வாறு ஒரு அடி அளவிற்கு நீள் வட்ட அமைப்பில் வடக்கயிறு தயாரிக்கப்படுகின்றது.

இந்த முறைகளில் செய்யப்பட்ட அள்ளக்கயிறு, வடக்கயிறு ஆகியவற்றின் துணையோடு மரம் ஏறச்செல்வர். இதனைக் கையில் தூக்கிச் செல்ல முடியாது. ஏனெனில் அதிக எடை உடையது. மரத்தின் அடியில் ஏணியை வைத்து அதில் ஏறி பின்னர் அள்ளக்கயிறைத் தனது இடுப்பில் சுற்றி முன்புறம் இழுத்து அதனை மரத்தோடு சேர்த்துக் கட்டிக் கொக்கி போல் மாட்டிக் கொள்கின்றனர். கால் கயிற்றைக் காலில் மாட்டிக் கொள்வர். பின்னர் மரம் ஏறத் தொடங்குகின்றனர்.

நம்பிக்கைகள் :

அள்ளக்கயிறு, வடக்கயிறு ஆகியன உயிரைக் காக்கும் பொருள்களாக இருப்பதால் மரம் ஏறுபவர்கள் அவற்றைத் தெய்வத்திற்குச் சமமாக மதிக்கின்றனர்.

விழாக்காலங்களில் அவற்றிற்கும் பூசைகள் செய்யப்படுகின்றன. அவற்றைக் கால்களில் மிதிபடாதவாறு வீட்டின் ஒரு ஓரத்தில் கண்களில் படும்படியாக ஒரு கம்பி கட்டி அதில் மாட்டி வைக்கின்றனர்.

இவ்வாறு மரம் ஏறுபவர்களுக்கு அள்ளக்கயிறும், வடக்கயிறும் மிகுந்த உதவிபுரிகின்றது. அல்லக்கயிறு, வடக்கயிறு மாட்டிக் கொள்வதன் மூலம் ஒரு நாளைக்கு ஒருவர் எண்பது மரம் வரை ஏற முடியும். இவையின்றி வெறும் உடலால் ஏறினால் இரண்டு, மூன்று மரங்கள் மட்டுமே ஏற முடியும்.

மரம் ஏறுபவர் அள்ளக்கயிறு மாட்டிக் கொள்வதால் மரத்தில் ஏறும்போது மார்பில் உராய்வு தடுக்கலாம். மரத்தைக் கட்டிப்பிடித்து ஏறாமல் இரு கைகளின் விரல் பகுதி கீழ்நோக்கி இருக்குமாறு வைத்து, கைகளை உந்தி மேலே செல்வதால் நெஞ்சுப்பகுதி மரத்தில் மோதுவதில்லை. இவ்வாறு கைகளை உந்திமேல் செல்வதால் நெஞ்சுப்பகுதி மரத்தில் மோதுவது இல்லை. இவ்வாறு கைகளை உந்திச் செல்லும் போது, முதுகுப்பகுதி அள்ளக்கயிற்றால் தாங்கிக் கொள்ளப்படுகிறது. அல்லக்கயிறு போட்டுக் கொள்வதால் மரம் ஏறும்போது மரத்தில் எந்த இடத்திலும் கைகளின் துணையின்றி நிற்க முடியும்.

அள்ளக்கயிறு போடவில்லை என்றால் மரத்தைக் கட்டிப்பிடித்து ஏறும் நிலையும், மார்புப் பகுதியில் மரத்தால் உராய்வும் உண்டாகும். வடக்கயிற்றைப் பாதத்தில் மாட்டிக் கொள்வதால் மரத்தில் எளிதாக ஏற முடியும். மரத்தில் ஏறும்போது கால்களை விரித்துக் கொண்டு செல்லாமலும், தடுமாறாமலும், வழுக்காமலும் இருக்கக் கால்கயிறு உதவுகின்றது. இதனால் ஒவ்வொரு அடியும் எளிதாக எடுத்து வைக்கலாம்.

கொங்கு நாட்டுப்புற வழக்காறுகள் – முனைவர் தே.ஞானசேகரன் ,முனைவர் சி.சித்ரா ,முனைவர் ச.தங்கமணி ,முனைவர் சு.ஆனந்தவேல், முனைவர் செ.இளையராஜா, முனைவர் ச.கோகுல் கிருஷ்ணன்
விலை: 1500/-

இந்நூலினை எப்படி வாங்குவது?

1. எங்களது WhatsApp ல் 097860 68908 தொடர்பு கொள்ளலாம், அல்லது
2. எங்கள் இணைய தளத்தில் வாங்கலாம். இணையதள பக்கம் பின்னூட்டத்தில் உள்ளது.

எங்கள் முயற்சியில் எவ்வாறு நீங்களும் பங்கெடுக்கலாம்?:

1. எங்கள் நூல் அறிமுக பதிவுகளைப் பகிர்ந்து பலரை சென்றடைய உதவுங்கள்.
2. எங்கள் சமூக வலைத்தள பக்கங்களை Subscribe செய்யுங்கள்
3. உங்களுக்கு தேவையா நூல்களை எங்கள் மூலம் பெறுங்கள்.
4. வரலாற்றில் ஆர்வமுள்ள நண்பர்களுக்கு எங்களின் Heritager.in The Cultural Store பற்றி தெரிவியுங்கள்.
5. பிறந்தநாள், திருமண நாள் போன்ற முக்கிய நாட்களில் எங்கள் மூலம் உங்கள் நண்பர்களுக்கு நூல்களை பரிசாக அனுப்புங்கள்.

உங்களின் தொடர் ஆதரவுக்கும், அன்புக்கும் நன்றிகள்