சிலப்பதிகாரத்தில் நடனம்

சிலப்பதிகாரத்தில் நடனம் :

சிலப்பதிகாரம் தமிழர்களின் கவின்கலைகள், குறிப்பாக நடனம் பற்றிய தகவல்களைத் தரும் ஒரு சுரங்கம் எனினும் மிகையாகா நடனம் தமிழர்களின் தனிப்பெரும் சொத்து என்பதற்கும், உலக அளவில் அது ஒரு தொன்மை வாய்ந்த ஓர் உன்னத கலை என்பதற்கும் சிலப்பதிகாரம் தகுந்த சான்றுகளைத் தருகின்றது.

எனவேதான், உலகளாவிய நிலையில் புகழ்பெற்ற நடனம் பற்றிய ஆய்வறிஞர் பெரில் டி சோயட்டே (Beryl de Zoete) என்பவர், “சிலப்பதிகாரம், உலகிலுள்ள மிகச் சிறந்த இலக்கியப்படைப்பு மட்டு மல்ல, பழங்காலத் தமிழர்களின் பண்பாட்டைக் குறிப்பாக நடனத்தைப் பற்றிக் குறிப்பிடும் ஒரு கலைக் களஞ்சியம்” என்று குறிப்பிடுகிறார் (The Other mind A study of dance in South India, Victory Gollanry, London 1953 Р.11).

மேலும், புகழ்வாய்ந்த வரலாற்றுப் பேராசிரியர் ஏ.எல். பாஷம் (A.L.Basham) The wonder that was India” न தனது நூலில், ‘இந்திய இலக்கியங்களில், நீதிக்குச் சிறப்பிடமும் பண்டைத் தமிழர்களின் கவின் கலையாகிய நடனத்திற்குக் கொடுத்த உயர்வும், சிலப்பதிகாரத்தைத் தவிர வேறு எங்கும் காணப்படவில்லை” என்று குறிப்பிடுகிறார். (Quoted by Prof. C. Krishnamurthy, Tamil literature through the ages P.11), G. சிங்காரவேலு சச்சிதானந்தம் என்பவரும் ‘சிலப்பதிகாரம், நடனத்தின் நுணுக்கங்களையும், சிறப்புகளையும் எடுத்தியம்பும் ஒரு பெட்டகம் என்று குறிப்பிடுகிறார் (The social life of Tamils Deriod p.51). classical

அரங்கேற்று காதை :

தமிழர்களின் நடனக் கலையின் தனிச்சிறப்பும், அதன் வளமையும், மக்களிடம் அது பெற்றிருந்த செல்வாக்கும் பற்றி அறிந்து கொள்வதற்குரிய ஆதாரமாக, ஆவணக் களஞ்சியமாகத் திகழ்வது சிலப்பதிகாரத்தின் அரங்கேற்று காதை. நடனம் என்பது தமிழர்களின் தனிப்பெரு ஆடற்கலை என்பதை அரங்கேற்றுக்காதை நிரூபிக்கின்றது. அரங்கேற்றுக்காதை தமிழர்களின் நடனக் கலையின் வரலாறு எனினும் பொருந்தும். அரங்கேற்றுக் காதை ஆய்வாளர் ஷாஜகான் கனி,

தமிழ் நடன மரபுகளின் அரியப் பண்பாட்டுச் செய்திகளைச் செறிவாக அன்றைய நடனக் கலைக்கே உரிய கலைச்சொற்களால் உணர்த்தும் கருவூலம் அரங்கேற்றுக் காதை(அரங்கேற்றுக் காதை ஆராய்ச்சி ப.4)
என்று குறிப்பிடுகிறார்.

அரங்கேற்றுக் காதையில், நடனத்தைக் கற்றுக்கொடுக்கும் நடன ஆசான்கள்,நடனம் ஆடுபவர்கள், அவர்களது தகுதிகள், மன்னர் முன் நடனம் ஆடுதல் அரங்க அமைப்பு முதலிய தகவல்கள் தரப்படுகின்றன.

நடன ஆசான் :

நடனத்தின் முதுகெலும்பாய்த் திகழ்பவர்கள் நடனத்தைக் கற்றுக்கொடுத்துப் பயிற்சியளிக்கும் ஆசான்கள், எத்தகைய தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும், பழைய மரபுப்படி எத்தகைய விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பவற்றை இளங்கோவடிகள் அரங்கேற்றுக் காதையில் குறிப்பிடுகின்றார்.

தேசி, மார்க்கம் எனும் இருவகை கூத்தின் இலக்கணம் அறிந்திருக்க வேண்டும். அல்லியம் முதலாகக் கொடி கொட்டி வரையிலுமுள்ள பதினொரு வகை கூத்துக்களையும் தெரிந்து கொண்டு, புறத்திற்குரிய பிண்டியும் (ஒற்றக்கை), பிணையலும் (இரட்டைக் கை) பற்றி அறிந்து கொள்ள வேண்டும். மேலும் அகக் கூத்திற்குரிய எழிற்கையும் தொழிற் கையும் அறிந்து, குரவைக் கூத்து, வரிக் கூத்து ஆகியவற்றையும் கற்றிருக்க வேண்டும். இத்தகைய ஒருவரே ஆடல் ஆசானாக ஆக முடியும் என்று, நடன ஆசானுக்குரிய தகுதிகளாக அரங்கேற்றுக் காதை குறிப்பிடுகின்றது.

இருவகைக் கூத்தி னிலக்கணம் அறிந்து
பலவகைக் கூத்தும் விலக்கினிற் புணர்த்துப்
பதினோ ராடலும் பாட்டுங் கொட்டும்
விதிமான் கொள்கையின் விளங்க வறிந்தாங்
காடலும் பாடலும் பாணியும் தூக்கும்
கூடிய நெறியின் கொளுத்துங் காலை
பிண்டியும் பிணையலு மெழிற்கையுந் தொழிற்கையும் கொண்ட வகையறிந்து கூத்துவரு காலைக்
கூடை செய்தகை வாரத்துக் களைதலும்
வாரஞ் செய்தகை கூடையிற் களைதலும்
பிண்டி செய்தகை யாடலிற் களைதலும்
ஆடல் செய்தகை பிண்டியில் களைதலும்
குரவயும் வரியும் விரவல செலுத்தி
ஆடற் கமைந்த வாசான் தன்னொடும்

(அரங்கேற்று காதை வரி : 12-25)

நடன ஆசிரியருக்குரிய தகுதிகளாக, இளங்கோவடிகள் பட்டியலிட்டுக் காட்டுவதிலிருந்து, பண்டையத் தமிழகத்தில் நடனம் எனும் கலை எத்தகைய வளர்ச்சியும் வளமையும் பெற்றுத் திகழ்ந்தது என்பதை அறிய முடிகின்றது.

நடனம் ஆடுபவர் :

நடனம் ஆடுபவர்களுக்கு, என்னென்ன தகுதிகள், எத்தகைய நெறிமுறைகளை அவர்கள் பின்பற்ற வேண்டும், எப்பொழுது நடனம் கற்கத் தொடங்க வேண்டும், எப்பொழுது நடனம் அரங்கேற்றம் நிகழ்த்த வேண்டும், அரசன் முன்னால் நடனம் ஆடுவதற்குரிய முறைகள் எவை எவை என்பனவற்றை மிகத் தெளிவாக அரங்கேற்றுக் காதையின் வாயிலாக இளங்கோவடிகள் சுட்டிக் காட்டுகிறார். அவர் காலத்திற்கு முன்னரே, மிகத் தொன்மை காலத்திலிருந்தே, நடன ஆசான், நடன ஆடுபவர்களுக்கென்ற மரபாகப் பின்பற்றப்பட்டு வந்த விதிமுறைகளை அவர் குறிப்பிடுகிறார்.

மாதவியின் நடனம் :

நடனம் ஆடுபவர் எந்த வயதில் நடனம் கற்கத் தொடங்க வேண்டும், எப்பொழுது அரங்கேற்றம் நிகழும், அரசன் முன்னால் எப்பொழுது ஆடல் நிகழும் என்பதை அரங்கேற்றுக்காதை குறிப்பிடுகிறது. ஐந்து வயதில் நடனம் கற்க வேண்டும், ஏழு ஆண்டிற்குப் பின்னர் அரங்கேற்றம் நிகழ வேண்டும் என்பது அக்கால மரபு, அந்த மரபின்படி, மாதவி,நடனம் கற்று, மன்னர் முன்னால் நடன அரங்கேற்றம் நிகழ்கிறது.

ஏழாண் டியற்றியோ ரீரா றாண்டிற்
சூழ்கழல் மன்னற்குக் காட்டல் வேண்டி

தகுதிவாய்ந்த நடன ஆசானிடம் கற்றபின், நடன அரங்கம் எவ்வாறு இருக்கும், அரங்கத்தில் நுழையும்போது எந்தக்காலை முன் வைத்து, எந்தத்தூண் பக்கம் செல்ல வேண்டும் என்பவை பற்றிப் பழைய மரபுகளை நன்கு அறிந்து செயல்படுபவளாக மாதவி அறிமுகப்படுத்தப்படுகிறாள்.

இயல்பினின் வழாஅ விருக்கை முறைமையிற்
குயிலுவ மாக்க ணெறிப்பட நிற்ப
வலக்கால் முன்மிதித் தேறி யரங்கத்து
வலத்தூண் சேர்தல் வழக்கெனப் – பொருந்தி

(அரங்கேற்றுக்காதை : 129-135)

மாதவி பதினொரு வகையான நடனங்களை ஆடுகிறாள். அவற்றை இசையுடனும் தாளத்துடனும் ஆடுகிறாள்.

பதினோ ராடலும் பாட்டும் கொட்டும்
விதிமாண் கொள்கையின் விளங்க அறிந்தாங்கு ஆடலும் பாடலும் பாணியும் தூக்கும்
கூடிய நெறியினைக் கொளுத்தும் காலை

(அரங்கேற்றக் காதை : 14-17)

கீழ்க்குறிப்பிடும் பதினொரு வகை ஆடல்களையும் மாதவி ஆடுகிறாள்.

கொடுகொட்டி ஆடல்

• பாண்டரங்க ஆடல்

• அல்லியத் தொகுதி

• மல்லாடல்

• துடியாடல்

• குடை ஆடல்

• குடம் ஆடல்

•பேடி ஆடல்

• மரக்கால் ஆடல்

• பாலை ஆடல்

• கடையம் ஆடல்

மேற்குறிப்பிட்ட பதினொரு ஆடல்களில் ஆறு ஆடல்கள் நின்று ஆடுபவை, ஐந்து ஆடல்கள், அரங்கத்தில் நடந்து சென்று ஆடுதல்

அல்லியம் கொடுகொட்டி குடைகுடம் பாண்டரங்கம் மல்லுடன் நின்றாடல் ஆறு
துடிகடையம் பேடு மரக்காலே
பாவை வடிவுடன் வீழ்ந்தாடல் ஐந்து

(அடியார்க்குநல்லார் உரை வரி. 14)

உரையாசிரியர்களின் கருத்துகள் அடிப்படையில், இந்தப் பதினொரு ஆடல்களிலும் பயன்படுத்தப்பட்ட இசைக் கருவிகள், இசை பற்றிய செய்திகள் கிடைக்கின்றன.

(மயிலை சீனி வேங்கடசாமி ப.130)

நடனம் மக்களால் மட்டுமல்ல, ஆட்சி செய்த அரசர்களாலும் ஆதரித்த ஒரு கலையாகத் திகழ்ந்துள்ளது என்பதை அரங்கேற்றக் காதை வாயிலாக அறிய முடிகிறது. சிறந்த முறையில் நடனமாடியமையால் தலைக்கோல் பெற்று நடன அரங்கேறிய மாதவியின் அரங்கேற்ற நிகழ்ச்சியில் பங்குகொண்ட மன்னனால் மாதவிக்கு 108 கழஞ்சு வழங்கப்பட்டது.

இலைபூங் கோதை யியல்பினின் வழாமைத் தலைகோல் எய்தித் தலையரங் கேறி
விதிமுறைக் கொள்கையின் ஆயிரத்து – எண்கழஞ்சு ஒருமுறை யாகப் பெற்றன ளதுவே.

(அரங்கேற்றுகாதை 160-163)
இவை, தமிழ்ச் சமுதாயத்தில், நடனத்திற்கு இருந்த அங்கீகாரத்தையும் ஆதரவையும் வெளிப்படுத்துகின்றன. மேலும், இவை, பல தலைமுறைகளாகத் தொடர்ந்து பின்பற்றுப் பட்டு வரும் மரபு உடையது என்பதனை,

வந்தமுறையின் வழிமுறை வழாமல்

(அரங்கேற்று காதை வரி. 146)

என்று குறிப்பிடுகிறார் இளங்கோவடிகள். சிறந்த முறையில் நடனம் ஆடுபர்களுக்குத் தலைக்கோல்’ வழங்குகிற மரபும் நடைமுறையில் இருந்துள்ளது என்பதனை, மலைபடுகடாமில் கூறப்பட்டுள்ளது.தலைகோல் வழங்கும் மரபு தொடர்ந்து தமிழகத்தில் நடைபெற்று வந்தமைக்கு அண்மைக்கால அகழாய்வுக் கண்டுபிடிப்புகள் சான்று பகர்கின்றன.

சிற்பங்களை ஆய்வு செய்யும் குடவாயில் பால சுப்பிரமணியம் அவர்கள் தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் தூணிலிருந்தத் தலைக்கோலைக் கண்டுபிடித்துள்ளார். (நூலிலிருந்து.)

விலை:120/-
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
Buy this book online: https://www.heritager.in/product/tamilar-aadarkalai/
To order on WhatsApp: wa.me/919786068908
Call: 097860 68908
Buy online: www.heritager.in

Social Media Handles:
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia

தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு

#books #tamilbookstore #Heritager wwww.heritager.in

Buy History and Heritage Related book online:

Buy Tamil Inscription Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/inscriptions/
Buy Tamil Literature Books: https://www.heritager.in/product-category/books/tamil/literature/
Buy Tamil Archaeological Books: https://www.heritager.in/product-category/books/tamil/archaeology/
Buy Tamil Temple Architecture and Art Books: https://www.heritager.in/product-category/books/tamil/art/
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/