பாண்டியன் நின்றசீர் நெடுமாறன்

பாண்டிய நாட்டில் பௌத்த சமயத்தை விடச் சமண சமயமே செல்வாக்குடன் விளங்கியது. பௌத்த சமயத்தவரை விடச் சமண சமயத்தவரே சைவ, வைணவர்களின் பொது எதிரிகளாக விளங்கினர். இதற்குக் காரணம் சமணர்களின் செல்வாக்கு முழுமையாக அழியாது ஆங்காங்கே நிலைத்து நின்றமை காரணமாகும். பாண்டிய நாட்டில் யானைமலை போன்ற இடங்களிலும், நகரங்களிலும் ஏராளமான சமணர்கள் இருந்தனர் என்பதைச் சம்பந்தரின் மதுரைப் பதிகப் பாடல்கள் மூலம் உணர முடிகின்றது. நாவுக்கரசரே சமணராய் இருந்து பின்பு சைவராக மாறியவர் என்பதை அவரது பாடல்கள் உணர்த்துகின்றன. திருச்சிராப்பள்ளி குடைவரைக் கோயில் கல்வெட்டு மகேந்திரவர்மன் புறச்சமயம் ஒன்றிலிருந்து லிங்கத்தினை வழிபடும் நிலைக்கு சைவ சமயத்திற்கு வந்தவன் என்று எண்ண இடந்தருகின்றது.”

தங்களுக்கு எதிராக விளங்கிய சமண, பௌத்த சமயங்களை எதிர்ப்பதில் சைவமும் வைணவமும் இக்காலத்தில் ஒன்றுபட்டு நின்றன. தங்களது தெய்வங்களை அரியும் அரனும் இணைந்த அரிகரனாகப் பார்த்ததை முதலாழ்வார் பாடல்களும் நாவுக்கரசர் பாடல்களும் உணர்த்துகின்றன. ” சமண, பௌத்த சமயங்களின்மீது சம்பந்தர் காட்டிய கடுமையான எதிர்ப்பினைப் போன்று திருமழிசையாழ்வாரும், எதிர்ப்பும்வெறுப்பும் கொண்டிருந்ததை அவரது பாடல்கள் தெரிவிக்கின்றன. சம்பந்தர் தனது ஒவ்வொரு பதிகத்திலும் பத்தாம் பாடலில் சமண பௌத்த சமயங்களைச் சாடியும் கேலி செய்தும் பாடியுள்ளார். இது மக்களிடையே அவர்கள் ஏற்கனவே பெற்றிருந்த செல்வாக்கைக் குறைக்கத் துணைபுரிந்தது. மேலும் சைவ சமய அடியார்க்கும் சைவ சமயத்தைப் பின்பற்றிய பொது மக்களுக்கும் இது ஒரு வித மகிழ்ச்சியைக் கொடுத்தது எனலாம்.”” சம்பந்தர் பாடல்கள் மூலம் அக்காலச் சமணர் வாழ்வை அறிய முடிகின்றது. சமணர்களில் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் செல்வாக்குடன் விளங்கியவர்கள் திகம்பரப் பிரிவைச் சார்ந்த சமணர்கள் ஆவார்கள். இவர்கள் பாண்டிய நாட்டிலும், தொண்டை நாட்டிலும் இருந்தார்கள் என்பதை யுவான் சுவாங் குறிப்பு மூலம் அறியமுடிகின்றது. சமணர்கள் நகரங்களிலும் நகரத்திற்கு வெளியேயிருந்த குன்றுகளிலும் அமைந்த குகைத் தளங்களிலும் பள்ளி யமைத்து வழிபாடும் சமயப் பிரச்சாரமும் செய்து வந்தனர்.”

வைணவமும் சைவமும் :

நெடுமாறன் காலத்திற்குச் சற்று முன்னரும் அவன் காலத்திலும் தொண்டை நாட்டில் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ் வார், திருமழிசையாழ்வார் என்ற நான்கு ஆழ்வார்கள் வாழ்ந்திருக்கின் றார்கள். திருமாலின்பால் ஆழ்ந்த பக்தி கொண்டு ஊர் ஊராகச் சென்று பாடல்கள் பாடி வைணவ சமயத்தை இவர்கள் இக்காலத்தில் வளர்ந் திருக்கின்றார்கள். பாண்டிய நாட்டில் திருத்தங்கல், திருக்குறுங்குடி. திருக்கோட்டியூர், திருமாலிருஞ்சோலை முதலிய வைணவத் தலங்கள் இவர்களின் பாடல்களைப் பெற்று விளங்கியிருக்கின்றன. முதலாழ் வார்களுக்குப் பின்னர்த் தோன்றிய திருமழிசையாழ்வார் பாடல்களில் மட்டும் முதலாழ்வார்களது போக்கிற்கு மாறான நிலையில் சைவ சமயத்தின்மீது கொண்ட காழ்ப்புணர்ச்சி காணப்படுகின்றது. இவர் ஏழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர் ஆவார். சமண, பௌத்த சமயங்களை முதலில் சைவரோடு ஒன்றுபட்டு எதிர்த்து நின்ற வைணவர்கள் இக்காலத்தில் அவற்றின் தாழ்ச்சிக்குப் பிறகு, தங் களுக்குள்ளேயே முரண்படத் தொடங்கி விட்டார்கள் என்பதைத் திருமழிசையாழ்வாரின் பாடல்கள் உணர்த்துகின்றன.”

சைவ சமயத்தில் அப்பரும் ஞானசம்பந்தரும் இக்காலத்தில் சிறப்புடன் சைவத்தை வளர்த்த சைவ சமயப் பெருங்குரவர்களாக விளங் கியவர் ஆவர். அப்பர் தொண்டை நாட்டிலும் ஞானசம்பந்தர் சோழ நாட்டிலும் பாண்டிய நாட்டிலும் அவர்களது புறச் சமயங்களாகிய சமண, பௌத்த சமயங்களின் ஆதிக்கத்தைக் குறைக்கப் பாடுபட்டுள்ளார்கள். ஊர்தோறும் சென்று தங்களது இசைநயம் செறிந்த பதிகங்களில் சமூகவேறுபாடுகளை மறந்து சைவர் என்ற முறையில் ஒன்றுபட்டு நின்று சைவப்பணி செய்திருக்கின்றார்கள்.

அப்பர், ஞானசம்பந்தர் காலத்தில் வாழ்ந்த இக்காலத்தில் சைவ அடியார்களாக அப்பூதியடிகள், முருக நாயனார், சிறுதொண்டர், திருநீலநக்கர், மங்கையர்க்கரசியார், குலச்சிறையார், குங்குலியக்கலயர் திருநீலகண்டயாழ்ப்பாணர் ஆகியோர் வாழ்ந்திருக்கின்றனர்.” இவர் களது வரலாறுகள் கி.பி. 12ஆம் நூற்றாண்டில் இயற்றப் பெற்ற பெரிய புராணத்தில் விளக்கமுற எடுத்துக் கூறப்பட்டுள்ளன.

ஏழாம்நூற்றாண்டில் சைவசமயத்தில் தோன்றிய உட்பிரிவினரை யும் காண முடிகின்றது. பாசுபதர், மாவிரதிகள், காபாலிகர், வைரவர் என்று அவர்கள் நாவுக்கரசர் பாடல்களில் குறிப்பிடப்படுகின்றனர்.”

கோயில்களின் வளர்ச்சி :

சைவ, வைணவ சமயங்களைச் சார்ந்த கோயில்களின் எழுச்சியும் வளர்ச்சியும் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் குறிப்பிடத்தக்கவையாக இருந்துள்ளன. தமிழ்நாட்டில் அதுவரை மண், மரம், செங்கல், உலோகம் முதலிய விரைவில் அழியும் பொருள்களைக் கொண்டு கோயில்களை எடுப்பது பெருவழக்காக இருந்து வந்தது. அவை மறைந்து முழுக்க முழுக்க கல்லினையே பயன்படுத்திக் கோயிலை உருவாக்கும் வழக்கம் இக்காலத்தில் ஏற்பட்டது.* செங்கல்லால் கட்டப்பெற்ற மண்தளிகள் இக்காலத்தில் புதுப்பிக்கப் பெற்றுக் கற்றளிகளாக மாற்றப் பெற்றன. காஞ்சிபுரம், கூரம் போன்ற இடங்களில் கற்களை அடுக்கிக் கட்டடக் கோயில்களை எழுப்பும் பணியில் மகேந்திரவர்மன். முதலாம்பரமேசுவரவர்மன் போன்ற பல்லவ மன்னர்கள் ஈடுபட்டனர்.9 மலையையே குடைந்து உருவாக்கப்படும் குடைவரைக் கோயில்கள் தோன்றின.இக்காலத்தில் தொண்டை நாட்டிலும் சோழநாட்டிலும் மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன் போன்றவர்களும் பாண்டிய நாட்டில் நெடுமாறனின் தந்தையும் நெடுமாறனும் இப்பணியில் ஈடுபட்டனர். மண்டகப்பட்டு என்ற இடத்தில் குடைவரைக் கோவில் ஒன்றினை மண், மரம், செங்கல், உலோகம் போன்ற பொருள்களைத்தவிர்த்து கல்லிலேயே மும்மூர்த்திகளுக்குக் குடைவரைக் கோயிலாக எடுப்பித்ததாக அங்குள்ள கல்வெட்டு மூலம் மகேந்திரவர்மன் தெரிவித்துள்ளான். பாண்டிய நாட் டில் நெடுமாறன் தந்தையிடத்துப் பணிபுரிந்த அதிகாரி சேவூர்க்கிழான் சாத்தனேறன் என்பவன் அரசன் ஆணைப்படி மலையடிக்குறிச்சியில் தான் எடுப்பித்த குடைவரைக் கோயிலைக் கல்லாலான கோவில் என்ற பொருள்பட ‘கற்றிருக்கோயில்’ என்று குறிப்பிட்டு அழைத்துள்ளான்.” மன்னர்களும் அவர்களது அலுவலர்களும் எடுப்பித்த இக்கோயில்களில் சிவன்கோயில்கள் தேவகுலம், ஈஸ்வரகிருகம் என்றும் திருமால் கோயில்கள், விஷ்ணு கிருகம், விண்ணகரம் என்றும் அழைக்கப்பட்டன.”

திருநாவுக்கரசர் பாடல்கள் மூலம் பெருங்கோயில், ஞாழற் கோயில், கொகுடிக்கோயில், ஆலக்கோயில், இளங்கோயில், கரக் கோயில், மணிக்கோயில், தூங்கானைமடம், பூங்கோயில் என்று இக் காலத்தில் இருந்த கட்டடக் கோயில்களின் வகையினைப் பற்றி அறிய முடிகின்றது. இக்கோயில்களின் நிர்வாகத்தினைச் சிறப்புடன் நடத்தப் பணியாளர்கள் பலர் இருந்துள்ளனர். சிவாச்சாரியார் சிவன் கோயில் பூசைகளை நிறைவேற்றுபவராக இருந்தனர். அக்கோயில் நிர்வாகத்தினை மேற்கொண்டோர் பரிகரம் என்றழைக்கப்பட்டதைக் கூரம் செப்பேடு தெரிவிக்கின்றது.”

இக்கோயில்களில் தொன்றுதொட்டு மரபுடன் விளங்கிய பழங் கோயில்களுக்கு அப்பர், சம்பந்தர் போன்ற சைவக் குரவர்கள் மதிப் பளித்து அவற்றைப் போற்றிப் பதிகங்கள் பாடினர். அவற்றிற்கே பொது மக்களும் மிகுந்த மதிப்பளித்தனர். மன்னர்கள் பக்தியினாலும் அதே நேரத்தில் தங்கள் பெருமையை வெளிப்படுத்தும் வகையிலும் தங்கள் பெயரால் தோற்றுவித்த கோயில்களுக்கு இக்காலத்தில் புனிதத் தன்மை தந்து தெய்வீகச் சிறப்பளிக்கப் பெற்றதாகத் தெரியவில்லை.

ஆழ்வார்களும் நாயன்மார்களும் முறையே திருமால், சிவன் ஆகியோரது பல வகை திருக்கோலங்களைப் பாடியுள்ளனர். பிற்காலத் தில் இவை அப்பதிகங்கள் பாடிய ஊர்களில் சிற்ப வடிவம் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. இக்காலத்தில் தோற்றுவித்த கோயில்களில் சிவன், திருமால், பிரம்மா, பிள்ளையார், கொற்றவை (மகிசாசுரமர்த் தனி) சேட்டை (மூதேவி) ஆகியோரது உருவங்கள் இடம் பெற்றன. மேலும், சிவனது தாண்டவங்களும், கங்காதரமூர்த்தி போன்ற உருவங் களும் இடம்பெற்றன.”

வைதீக சமயங்கள் தங்களது சமயத்தினைப் பரப்புவதற்குரிய மடங்களைத் தோற்றுவிக்கும் முறையும் இக்காலத்தில் தோன்றின. மகேந்திரவர்மனின் மத்தவிலாசப் பிரகசனம் காபாலிகர் மடம் ஒன்று ஏகாம்பரநாதர் கோயிலை ஒட்டி இருந்ததைத் தெரிவிக்கின்றது.”

கோயிற் கலைகள் :

இக்காலத்தில் கோயில்களில் இசையும் நடனமும் இணைந்தே வளர்ந்தன. இதனைப் போற்றிய மகேந்திரவர்மன் போன்ற அரசர்கள் இசையில் வல்லவர்களாக இருந்தனர். மகேந்திரவர்மனுக்குச் ‘சங்கீர்ணசாதி’ என்ற பெயர் இருந்திருக்கின்றது.” குடுமியான்மலை இசைக் கல்வெட்டினை இவன் காலத்தது என்று கருதுகின்றனர். இதன் அருகி லுள்ள கல்வெட்டில் பரிவாதினி என்ற வீணையும் (யாழ்) குணசேனர் என்ற இசையாசிரியன் பெயரும் குறிப்பிடப்படுகின்றன.” கி.பி. ஏழாம் நூற்றாண்டில் இருந்த இசைக்கலையின் சிறப்பிற்கு எடுத்துக்காட்டுகள் தேவாரப் பாடல்களாகும். இசைப்பண்களைப் பற்றியும் அக்காலத்தி லிருந்த இசைக்கருவிகள் பற்றியும் இப்பாடல்களால் அறிந்து கொள்ள முடிகின்றது.

பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் ஓவியக்கலையிலும் வல்லவ னாய் இருந்திருக்கின்றான். இவன் தட்சிண சித்திரம் என்ற நூலுக்கு உரை எழுதியிருப்பதை இவனது மாமண்டூர் குடைவரைக் கோயில் கல்வெட்டு உணர்த்துகின்றது என்பர். மேலும் இவன் சித்திரகாரப்புலி என்ற பெயரினையும் பெற்று விளங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. (நூலிலிருந்து)

பாண்டியன் நின்றசீர் நெடுமாறன் – முனைவர் வெ.வேதாசலம் பேராசிரியர் அ.கலாவதி
விலை: 200 /-
வெளியீடு: தனலட்சுமி பதிப்பகம்
Buy this book online: https://www.heritager.in/product/pandiyan-nindraseer-nedumaaran/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908

Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4

தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/

#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers