Description
உ.வே. சாமிநாதையர் பழந்தமிழ் நூல்களின் பதிப்பாசிரியர் மட்டுமல்லர்; வரலாற்று ஆசிரியரும்கூட. அவர் எழுதிய தன்வரலாறும் சமகாலச் சான்றோர் பலரைப் பற்றிச் சிறியதும் பெரியதுமாக எழுதியுள்ள வாழ்க்கை வரலாறுகளும் மிக முக்கியமானவை.
உ.வே. சாமிநாதையரின் ஆசிரியராகிய மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, பத்தொன்பதாம் நூற்றாண்டுக் குருகுலக் கல்விமுறையின் ஆசிரியவகை மாதிரியாகவும் புலமை மரபின் பேராளுமையாகவும் திகழ்ந்தவர். அவரது வாழ்க்கை வரலாற்றைப் பல்லாண்டு உழைப்பின் மூலம் உ.வே.சா. எழுதினார். உடனிருந்து சில ஆண்டுகள் பழகிய அனுபவங்கள், அவர் எழுதிய நூல்கள், சமகாலத்தவர் வழியாகப் பெற்ற ஆதாரப்பூர்வமான சம்பவங்கள், கடிதம் உள்ளிட்ட எழுத்துப்பூர்வ ஆவணச் சான்றுகள் முதலியவற்றைத் தொகுத்துத் தரவுகளாகக் கொண்டார். ‘சுதேசமித்திரன்” நாளிதழில் அறிவிப்பு வெளியிட்டும் தரவுகளைத் திரட்டினார். இவ்விதம் நவீன வரலாற்று எழுத்தியல் முறைகளைப் பின்பற்றி எழுதப்பட்ட முன்னோடி வாழ்க்கை வரலாற்று நூல் இது.