சாவா மூவா பேராடு தெரியும் அதென்ன சாவா மூவா பெரும்பசு?

பல திருக்கோயில்களில் சிவலிங்கத்தின் மீது பசு பால் சொரியும் நிலையில் உள்ள சிற்பங்களைக் காணலாம். இறைவனுக்குப் பால் அபிஷேகம் செய்யவும், ‘பால் அமுது’ படைக்கவும் பசுக்கள் தானமாக அளிக்கப்பட்டதை பல திருக்கோயில் கல்வெட்டுகள் எடுத்துரைக்கின்றன. திருவரங்கம் கோயிலில் பெருமாளுக்குப் பால் அமுது சமர்ப்பிக்க 100 பசுக்கள் தானமாக அளிக்கப்பட்ட செய்தியை அக்கோயில் கல்வெட்டு குறிப்பிடுகிறது.

முதலாம் ராஜேந்திர சோழன் காலத்தில் திருமழபாடி கோயிலில் நாள்தோறும் பால் அபிஷேகம் நடைபெற நான்கு நாழி பால் தானமாக அளிக்கப்பட்டது. திருஞானசம்பந்தர் சீர்காழி திருத்தலத்தில் இறைவி உமாதேவியிடமிருந்து ஞானப்பால் பெற்ற வரலாறு நாம் அறிந்ததே. இதைக் குறிக்கும் வகையில் சீர்காழி திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள ஆளுடைய பிள்ளையார்க்கு நாள்தோறும் பாற்போனகம் படைக்க நிலம் தானமாக அளிக்கப்பட்டதை ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது.

திருப்பூர் அருகே உள்ள அவிநாசி கோயிலில் இறைவனுக்கு அர்த்தஜாம பூஜையின்போது பால் அமுது படைக்க 30 பசுக்கள் அளிக்கப்பட்டதாக முதலாம் குலோத்துங்க சோழன் காலக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. கோயில்களில் பொதுவாகப் பள்ளி அறைக்குச் செல்லும் நிகழ்ச்சியின்போது இறைவன் – இறைவிக்கு பால் அமுது படைப்பது நடைபெற்று வருகிறது. இதை ‘சயனப்பால்’ என அழைக்கின்றனர்.

“சாவா மூவாப் பெரும்பசு” – ஓர் ஆழமான விளக்கம்
கோயில்களுக்குப் பசுக்களைத் தானமாக அளிக்கும்போது ‘நாகு’ என்பதையும் சேர்த்து அளித்ததாகக் கல்வெட்டுகளில் காணப்படுகிறது. ‘நாகு’ என்பது கன்று ஈனும் பருவத்தில் உள்ள இளம் கிடாரி கன்று ஆகும். மேலும், பசுக்களின் எண்ணிக்கை குறைந்துவிடாமல் இருக்க ரிஷபமும் (எருதும்) அளித்தனர். இவையனைத்தும் ‘சுரபி மன்றாடிகள்’ வசம் ஒப்படைக்கப்பட்டன. இந்த முறையைத்தான் “சாவா மூவாப் பெரும்பசு” என்று கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

இங்கு “சாவா மூவாப் பெரும்பசு” என்பது ஒரு குறியீட்டுச் சொல்லாகும். இதன் நேரடிப் பொருள் ‘சாகவும், மூப்படையவும் செய்யாத பெரிய பசு’ என்பதாகும். ஆனால் உண்மையில், இந்தத் தொடர் நிரந்தரமான, அழியாத ஒரு கோசாலை அமைப்பையும், அதன் மூலம் கோயிலுக்குக் கிடைக்கும் நிலையான வருவாயையும் குறிக்கிறது. எப்படி எனில்:

சாவா (அழியா): கோயிலுக்குத் தானமாக அளிக்கப்பட்ட பசுக்கள், அவற்றின் கன்றுகள், பின்னர் அக்கன்றுகள் ஈனும் கன்றுகள் என தலைமுறை தலைமுறையாகப் பெருகி, ஒருபோதும் வற்றாத செல்வமாக விளங்க வேண்டும் என்பதே இதன் நோக்கம். ஒரு பசு இறந்தாலும், அதன் அடுத்த தலைமுறை மூலம் கோசாலை தொடர்ச்சியாக இயங்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

மூவா (மூப்படையாத): பசுக்களின் இளைய தலைமுறைகள் தொடர்ந்து உருவாகி வருவதால், கோசாலையில் எப்போதும் பால் தரும் ஆரோக்கியமான பசுக்கள் இருப்பதை இது உறுதி செய்கிறது. மூப்படைந்த பசுக்கள் செயலற்றுப் போனாலும், புதிய கன்றுகள் அவற்றின் இடத்தைப் பிடித்து, உற்பத்திச் சங்கிலியைத் தொடர வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

பெரும்பசு: இது வெறும் ஒரு பசுவைக் குறிக்காமல், ஒரு பெரிய அளவிலான கால்நடைச் செல்வத்தையும், அதனைப் பராமரிக்கும் அமைப்பையும் குறிக்கிறது. அதாவது, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பசுக்கள் மட்டுமல்லாமல், அவற்றின் சந்ததிகளும், அவற்றைப் பராமரிப்பதற்கான ரிஷபங்களும், அதற்கான நிலங்கள், பணியாளர்கள் என ஒரு முழுமையான அமைப்பையே இது குறிக்கிறது.

ஆகவே, “சாவா மூவாப் பெரும்பசு” என்பது ஒரு கோயில் அறக்கட்டளையின் ஒரு பகுதியாகும், இது கோயிலின் பால், நெய் தேவைகளை நிரந்தரமாகப் பூர்த்தி செய்வதோடு மட்டுமல்லாமல், அதைச் சுற்றியுள்ள சமூகத்திற்கும் வாழ்வாதாரத்தை வழங்கும் ஒரு நிலையான, தன்னிறைவு பெற்ற அமைப்பாகச் செயல்பட்டது என்பதையே உணர்த்துகிறது. இது பண்டைய கால மக்களின் தொலைநோக்குப் பார்வையையும், சுற்றுப்புறச் சூழல் மற்றும் சமூக நலன் சார்ந்த அணுகுமுறையையும் வெளிப்படுத்துகிறது.

பசுக்கள் மட்டும் கோயிலுக்கு அளிக்கப்படவில்லை. கோயிலில் விளக்கு எரிப்பதற்கு வேண்டிய நெய்க்காக ஆடு, எருமை போன்றவையும் அளிக்கப்பட்டன. அவற்றிலிருந்து வரும் வருவாய் கோயிலுக்குப் பயன்பட்டது. கால்நடைச் செல்வமும் பெருகியது. அவற்றைப் பராமரிக்கும் குடும்பங்களுக்கும் நிரந்தரமான வருவாய் கிடைத்தது.

சடங்குகளில் பசுவின் பங்கு:

சாஸ்திரங்களின்படி, திருமகள் பசுவின் பின்பகுதியில் வாசம் செய்கிறாள். ஸ்ரீரங்கம் கோயிலில் அதிகாலை விஸ்வரூப தரிசனத்தின்போது, கதவுகள் திறக்கும் முன் பசுவின் பின்புறம் கருவறையை நோக்கி இருக்குமாறு நிறுத்துவார்கள். யானையும் பெருமாளை நோக்கி வழிபடும் இந்தக் காட்சி தினமும் அதிகாலையில் நடைபெறுகிறது. இதேபோல் திருவானைக்கா கோயிலிலும் உச்சிகாலப் பூஜையின்போது அகிலாண்டேசுவரி தேவி பசுவை பூஜித்துவிட்டு, பின்னர் ஜம்புகேசுவரரை வழிபடும் நிகழ்வு நடைபெறுகிறது.

புதிய வீட்டிற்கு குடியேறும்போதும், பசுவை பூஜை செய்து வீட்டுக்குள் அழைத்துச் செல்லும் வழக்கம் இன்றும் உள்ளது. பசுவை வலம் வந்தால் இந்த உலகையே சுற்றி வந்த பலன் கிடைக்கும் என்று சிறப்பித்துக் கூறப்படுகிறது.

திருவொற்றியூர் கோயிலில் பஞ்சகவ்ய அபிஷேகம் மேற்கொள்ள 12 பசுக்களும், திருச்சிக்கு அருகே உள்ள திருநெடுங்களம் கோயிலுக்கு 61 பசுக்களும் அளிக்கப்பட்டதாகக் கல்வெட்டுகள் மூலம் அறிகிறோம்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்குவளை கோயிலில் ‘பஞ்ச திரவியத்தால்’ நீராட்டு செய்ய நிபந்தம் செய்து அளித்ததாகச் சுந்தர பாண்டியன் காலக் கல்வெட்டு கூறுகிறது. திருக்கோயில்களில் பசுக்களைப் பாதுகாப்பதற்கு கோசாலைகளும் இருந்திருக்கின்றன என்பதை கல்வெட்டுச் சான்றுகளால் அறிய முடிகிறது.

ஸ்ரீரங்கம் கோயிலில் ஹொய்சல மன்னர் காலத்தில் கோசாலை இருந்ததை அறிய முடிகிறது. நன்னிலம் வட்டத்தில் உள்ள திருப்பாம்புரம் கோயிலில் இறைவனுக்கு அபிஷேகம் செய்யவும், அமுது படைப்பதற்கும் வேண்டிய பால், நெய் ஆகியவற்றுக்காகப் பத்து பசுக்களும், மூன்று கன்றுகளும் அளிக்கப்பட்டன. கோயில் வாசலின் உட்புறத்தில் பசு-கன்றுகளைக் கட்டுவதற்கு ஒரு கொட்டிலும் கட்டி, அவற்றை மேய்ப்பதற்கு ஒரு ஆள் நியமிக்கப்பட்டு, அதற்குக் கூலியாக தினம் குறுணி நெல் அளிக்கப்பட்டதாக மூன்றாம் ராஜராஜசோழன் காலக் கல்வெட்டு கூறுகிறது.

திருவாரூர் கோயிலில் இருந்த பசு மடத்தில் (கோசாலை) உள்ள பசுக்களுக்கு நாள்தோறும் வைக்கோல் அளிக்க நிலம் தானமாக அளிக்கப்பட்டச் செய்தியை இரண்டாம் குலோத்துங்கன் காலக் கல்வெட்டினால் அறிய முடிகிறது. சென்னைக்கு அருகில் உள்ள திருவொற்றியூர் கோயிலிலும் நாள்தோறும் தீவனம் அளிக்க தானம் அளிக்கப் பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம் சித்தனாயக்கன்பாளையம் கிராமத்தில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் காணப்படும் கல்வெட்டில் மோருவரதி நாயக்கன் மகன் யவனப்ப நாயக்கன் ‘பசு மண்டபம்’ ஒன்றைக் கட்டுவித்தான் என்பதை அறிகிறோம்.

தொகுப்பு: Rajasekar Pandurangan
மூலம்: வழிகாட்டும் கல்வெட்டுகள் – கி. ஸ்ரீதரன் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை