செப்பேட்டைப் பாதுகாத்த முன்னோர்

செப்பேட்டைப் பாதுகாத்த முன்னோர்

நமது முன்னோர்கள் செப்பேடுகளைப் பாதுகாப்பதில் அக்கறை கொண்டவர்களாக இருந்தனர் என்பது பலவற்றால் தெரிகிறது.

திருச்செங்கோட்டில் கி.பி 962, 967 ல் எழுதப்பட்ட இரண்டு செப்பேடுகள் ஒன்றாகக் கிடைத்தன. ஆனைமங்கலம் (லெய்டன்) செப்பேடுகள் கி.பி 1006, 1090-ல் எழுதப்பட்டவை ஒன்றாகக் கிடைத்தன. திருபுவனத்தில் கி.பி 1204, 1214-ல் எழுதப்பட்ட இரண்டு செப்பேடுகள் ஒன்றாகக் கிடைத்தன. மதுரை தளவாய் அக்கிர காரத்தில் கி.பி 1504, 1510, 1596-ல் எழுதப்பட்ட மூன்று செப்பேடுகள் ஒன்றாகக் கிடைத்தன. திருக்களரில் கி.பி 1030, 1049, 1098, 1163 1207-ல் எழுதப்பட்ட 5 செப்பேடுகள் ஒன்றாகக் கிடைத்தன. இவற்றின் மூலன் ஒரு ஊரின் செப்பேடுகளை ஒருசேர பாதுகாத்த விபரம் தெரிகிறது.

இளையான் புத்தூர், வேள்விக்குடி, தளவாய்புரம் போன்ற ஊர்ச்செப்பேடுகள் அழிந்த பின்னர் அவற்றை மீண்டும் எழுதியுள்ளனர்.

பகைவரிடமிருந்து செப்பேடுகளைப் பாதுகாப்பதற்காக பூமிக்குள் பத்திரமாகப் புதைத்து வைத்தனர். தளவாய்புரப் செப்பேடுகள் மரப்பெட்டியின் உள் வைத்துப் புதைத்துள்ளனர். எசாலம், திரு இந்தளூர் போன்ற ஊர்களில் இறை படிமங்களைப் பாதுகாப்புக்காகப் புதைக்கும் போது செப்பேடுகளையும் அவற்றிற்கு இணையாகக் கருதி உடன் வைத்துப் புதைத்துள்ளனர்.

ஆனால் அண்மைக் காலத்தில் செப்பேடுகளின் அருமை தெரியாமல் அதைப் பாத்திரங்களாக மாற்றியுள்ளனர். அவ்வாறான பாத்திரங்களில் சில எழுத்துக்கள் உள்ளதை இன்றும் பார்க்கலாம். சிலர் அவற்றைச் சாதாரண உலோகமாக கருதிப் பழைய பாத்திரக் கடையில் விற்று விடுகின்றனர். வரலாற்றுச் சிறப்புமிக்க 676 ஆம் ஆண்டைச் சேர்ந்த முதல் பாண்டியர் செப்பேட்டை 2006 ஆம் ஆண்டு மதுரைப் பழைய பாத்திரக்கடையில் திருச்செங்கோடு விஜயகுமார் விலைக்கு வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

செப்பேட்டைப் பாதுகாத்த முறை

ஒரு செப்பேடு பல ஏடுகளில் ஏழுதப்பட்டிருந்தால் அவைகளை ஒரு வளையத்தில் கோர்த்து அவை பிரியாவண்ணம் இணைத்துப் பாதுகாத்தனர்.

திரு இந்தளூர்ச் செப்பேட்டில் “இவ்வளையத்தில் கோர்த்த ஏடுகள் எண்பத்தாறு” என்று எழுதப்பட்டுள்ளது. வளையம் உடைந்த செப்பேடுகளில் இடையில் பல ஏடுகள் காணாமல் போய்விட்டன. சுந்தர சோழனின் பள்ளன் கோயில் செப்பேட்டில் வளையம் உடைக்கப்பட்டதால் மொத்தம் 24 இதழ்களில் 13, 15, 18, 19, 21,23 எண்கள் இடப்பட்ட இதழ்கள் மட்டுமே கிடைத்துள்ளன.

பல ஏடுகள் கொண்ட செப்பேடுகளில் பெரும்பாலும் முதல் பக்கமும் கடைசி பக்கமும் எழுத்துக்கள் வெட்ட மாட்டார்கள். செப்பேட்டு இதழ்கள் ஒன்றோடு ஒன்று உராய்ந்து எழுத்துக்கள் அழியாமல் இருக்க இதழ்களின் ஓரங்கள் சற்றுத் தடித்துச் செய்யப்படும். இதழ்கள் கலைந்தாலும் தொடர்ச்சியாகப் படிக்க வசதியாக ஏடுகட்கு வரிசை எண்கள் இடப்பட்டன. கரந்தைச் செப்பேட்டில் ஒவ்வொரு இதழிலும் ‘திரிபு’ (திரிபுவன மாதேவிச் சதுர்வேதமங்கலம்) புள்ளிருக்கு வேலூர் செப்பேட்டில்’பு’ என்றும் முதற்குறிப்பு எழுதப்பட்டிருப்பதால் இதழ்கள் பிரிந்தாலும் அடையாளம் காணப்படும்.

கோயில்களில் முக்கியமான சிலருக்கு மட்டுமே தெரிந்த ‘சேமம்” என்ற இடத்தில் செப்பேடுகள் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டன. ஆபத்து வரும் எனக் கருதிய காலத்தில் நிலத்தில் செப்பேடுகளைப் புதைத்து வைத்தனர். செப்பேடுகளைப் பெரிய பானையில் வைத்துப் புதைத்தனர். சேந்தனூர் போன்ற சில இடங்களில் ‘மூன்று செப்பேடு மூத்தாந்தாழியில் வைத்துப் புதைத்து இருக்கிறோம்” என்று எழுதப்பட்டுள்ளது.

செப்பேட்டைத் தனியாகப் புதைக்கும் போது அரிப்பு ஏற்படாதவாறு சுற்றிலும் நிறைய ஆற்றுமணல் அல்லது உமியைப் போட்டுப் புதைத்தனர். பழைய செப்பேடுகள் பலவும் நிலத்தின் உள்ளிருந்தே கிடைத்தன. தளவாய்புரம் செப்பேடு நிலத்தினுள் மரப் பெட்டியிலிருந்து கிடைத்தது.

கல்வெட்டுகளைப் போலவே வரலாற்றை எழுத அடிப்படைச் சான்றாக விளங்குவன செப்பேடுகள். கல்வெட்டுகள் ஆய்வு தொடர்பாகப் பல நூல்கள் வெளிவந்துள்ளன. செப்பேடுகள் தொடர்பான ஆய்வு நூல்கள் எதுவும் வெளிவரவில்லை. மூல பாடம் அடங்கிய செப்பேட்டு நூல்கள் மட்டுமே வெளிவந்துள்ளன. இந்நூல் அக்குறையைப் போக்குகிறது.

தமிழ்க் கல்வெட்டுகள் சுமார் 20000 பதிப்பிக்கப்பட்டுள்ளன. செப்பேடுகள் சுமார் 600 பதிப்பிக்கப்பட்டுள்ளன. செப்பேடுகள் பற்றிய விரிவான அறிமுகத்துடன் பல்வேறு முதலில் வகைப்பட்ட செப்பேடுகளின் அரிய படங்கள் 30 இடம் பெற்றுள்ளன. கல்வெட்டு செப்பேடுகளின் எழுத்து வளர்ச்சியைக் காட்டும் படம் உள்ளது.

அடுத்து பல்லவர்,சேரர்,சோழர்,பாண்டியர், விஜயநகரம், மதுரை-தஞ்சை நாயக்கர், சேதுபதிகள், புதுக்கோட்டை அறந்தாங்கித் தொண்டைமான்கள், மைசூர் உடையார் செப்பேடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கல்வெட்டின் மெய்க்கீர்த்திபோல் அரச மரபின் கீர்த்திப் புகழ்மொழிகள் கூறப்பட்டதுடன் பழனிச் செப்பேட்டில் கானும் முருகன் புகழ்மொழியும் உள்ளது.

பௌத்தம், சமணம், இஸ்லாம், கிறித்துவச் செப்பேடுகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகம் தவிர்த்து இந்தியாவின் பிற பகுதிகளிலும், வெளிநாட்டிலும் உள்ள செப்பேடுகள் பற்றிய செய்திகள் உள்ளன. செப்பேடு தொடர்பான இந்திய மேனாட்டு முன்னோடிகள் யார் யார் என்று கூறப்பட்டதுடன் பதிப்பு முதல் முயற்சி சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

செம்பில் எழுதப்பட்ட செப்பேடு போல பொன், வெள்ளிப்பட்டயங்கள் கூறப்பட்டுள்ளன. அரசியர் சிலரும் செப்பேடு அளித்துள்ள விபரம் சான்றுடன் உள்ளது. சில செப்பேடுகள் கல்வெட்டிலும் ஓலையிலும் எழுதப்பட்டுள்ளது காட்டப்பட்டுள்ளது. பல சமூகத்தார் செப்பேட்டில் தங்கள் குலப்பெருமைகள் கூறியமை தொகுக்கப்பட்டுள்ளது.

செப்பேடு சொல்லும் சேதிகள் – புலவர் செ. இராசு
₹250

இந்நூலினை எப்படி வாங்குவது?

1. எங்களது WhatsApp ல் 097860 68908 தொடர்பு கொள்ளலாம், அல்லது
2. எங்கள் இணைய தளத்தில் Heritager .in வாங்கலாம்.
இணையதள பக்கம் பின்னூட்டத்தில் உள்ளது.