இரட்டைக் காப்பியங்கள் தோன்றிய வரலாறு

இரட்டைக் காப்பியங்கள் தோன்றிய வரலாறு :

சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் எனப்படுகின்றன. இவை இரண்டும் தம்முள் கதைத் தொடர்பு கொண்டுள்ளன. சிலப்பதிகாரம் கண்ணகியின் சிலம்பால் பெயர் பெற்றது. மணிமேகலை, கோவலன் மாதவியின் மகள் மணிமேகலையின் பெயரால் அமைந்தது. சிலப்பதிகாரம் சமணக் காப்பியம்; மணிமேகலை பௌத்த காப்பியம். சிலம்பை இயற்றியவர் சேர அரசன் செங்குட்டுவனின் இளவல் இளங்கோ அடிகள். மேகலையை இயற்றியவர், மலைவளம் காணச் சென்றிருந்த செங்குட்டுவனிடம் கண்ணகிக் கதையைக் குன்றக் குறவர்கள் கூறியபோது உடனிருந்த சீத்தலைச் சாத்தனார். குன்றக்குறவர்கள் கூறிய செய்தியின் பின்னணியில் உள்ள கண்ணகியின் வரலாற்றைச் சாத்தனார் இளங்கோவடிகட்குக் கூற, ‘முடிகெழு மூவேந்தர் மூவர்க்கும் உரியது. அடிகள் நீரே அருளுக’ என்று செங்குட்டுவன் இளங்கோவடிகளை வேண்டினான். இளங்கோவடிகளும் அதனை ஏற்றுக் கண்ணகிக் காப்பியத்தைச் செய்தார்.

இரு காப்பியங்களிலும் பெண்டிரே தலைமை மாந்தராக அமைகின்றனர். முதற்காப்பியத்தில் கண்ணகியும், தொடர்காப்பியத்தில் அவளது மகளாகக் கருதத்தக்க மணிமேகலையும் காப்பியத் தலைமையை ஏற்கின்றனர். கண்ணகி கற்பின் திறத்தை எடுத்துக் காட்டுபவள்; நீதியை நிலைநாட்டுபவள்; தெய்வமானவள். மணிமேகலை அறத்தின் பெருமையை உலகிற்கு உணர்த்தியவள்; பசிப்பிணையைப் போக்கியவள்; இறைப்பணியை வாழ்நாட் பணியாக ஏற்றுக் கொண்டவள் இவ்வாறு இரு காப்பியங்களம் தம்முள் பல இயைபுகளைக் கொண்டுள்ளன. இதனால் இவை இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப்படுகின்றன. ‘இரட்டைக் காப்பியங்கள்’ எனும் பெயரில் தமிழறிஞர் வ. சுப. மாணிக்கம் அவர்கள் மிகச் சிறந்த ஆராய்ச்சி நூல் ஒன்றை எழுதியுள்ளார்.

காப்பியம் :

தமிழில் ஆதியில் காப்பியங்கள் இருந்ததற்கான சான்றுகள் இல்லை. ஆனால் சில கதைகள் மக்களிடம் வாய்மொழியாக வழங்கப்பட்டிருக்கக்கூடும் என்பதற்கான சான்றுகள் உள்ளன. நற்றிணையில் ‘ஒருமுலை இழந்த திருமாவுண்ணி’ கதை ஒன்று இடம்பெற்றுள்ளது. அவள் ஒரு மலையின் உச்சியிலிருந்த வேங்கை மரத்தினடியில் நின்று வானுலகம் சென்றாள் என்ற குறிப்பு உள்ளது. குறுநில மன்னனான பேகன் என்பவன் தன்னுடைய மனைவியாகிய கண்ணகியை மறந்து மற்றொருத்தியிடம் வாழ்ந்து வந்த செய்தியைப் புறநானூற்றுப் பாடல்கள் (புறநா.143-147) தெரிவிக்கின்றன. ‘உன் மனைவியிடம் சென்று அவளது துன்பத்தை தீர்ப்பாயாக. அதுவே நீ எமக்குத் தரும் பரிசில்’ என்று கபிலர், பரணர், அரிசில்கிழார். பெருங்குன்றூர்கிழார் போன்ற புகழ்பெற்ற புலவர்கள் வையாவிக் கோப்பெரும் பேகனை அறிவுறுத்திப் பாடியுள்ளனர்.

கண்ணகிக் கதை ஒரு தொன்மக்கதை என்பதை நிறுவுவது போன்று, சுமேரிய நாட்டில் கண்டெடுக்கப்பட்ட அகழ்வாய்வுச் சின்னங்களும் சான்றாகின்றன. அங்குள்ள சுடுமணல் முத்திரை ஒன்றில் கையில் சிலம்புடனும், தலையில் தீப்பிழம்புகளுடனும் மலையுச்சியில் உள்ள ஒரு மரத்தின் அடியில் ஒரு பெண் நிற்பது போன்ற உருவம் காணப்படுகிறது. இவள் பெயரை ‘இனானா’ என்று சுமேரியாவின் பழம் பாடல்கள் சொல்லுகின்றன. இவள் தன் கணவனை இழந்ததால், கீழுலகம் சென்று அங்குள்ள தெய்வத்திடம் முறையிட்டாள் என்றும், அந்தத் தெய்வம் அவனை உயிர்ப்பிக்காததால் வானுலகம் சென்றாள் என்றும் அவளைப் பற்றிய முடிவு கூறப்படுகிறது. கீழுலகிற்கு அவள் கணவன் இறந்ததற்காக நீதி கேட்கச் செல்கிறாள் என்று அக்கதையில் குறிப்பிடப்படுகிறது . மேலும் அவளது தோற்றமும் அவளது பேச்சுக்களும் கண்ணகியையே நமக்கு நினைவூட்டுகின்றன. இதனைப் பார்க்கும்போது கண்ணகித் தொன்மம் மிகப் பழமையானது என்றும், சுமேரியாவுக்கும் பழந்தமிழகத்திற்கும் இருந்த வாணிகத் தொடர்பாலும் பிற தொடர்புகளாலும் இத்தொன்மம் இடம்பெயர்ந்து சென்றிருக்கலாம். என்றும் கருத வாய்ப்புண்டு.

‘காப்பியம்’ என்பது தமிழில் சிறப்பான ஒரு நிலையைப் பெற்றிருந்தது. இலக்கணத்தைக் கூட ‘காப்பியம்’ என்று அழைக்கும் வழக்கம் பண்டைத் தமிழகத்தில் நிலவியது. தமிழரின் எழுத்து, சொல் பொருள் ஆகியவற்றுக்கு எழுதப்பட்ட இலக்கணம் ‘தொல்காப்பியம்’ என்று அழைக்கப்பட்டது இதனை உறுதி செய்யும். ‘காப்பியாற்றுக் காப்பியனார்’ என்று ஒரு புலவர் அழைக்கப்படுகிறார். ‘பல்காப்பியனார்’ என்பது மற்றொரு புலவரது பெயர். பிற உலக இலக்கியங்களில் காணப்படுவதுபோலத் தமிழில் தொடக்ககாலத்தில் காப்பிய இலக்கியங்கள் தோன்றவில்லையெனினும் காப்பியச் சாயல் கொண்ட காப்பியத்தை நோக்கிய வளர்ச்சியைக் கொண்ட பத்துப்பாட்டு தோற்றம் பெற்றுள்ளது அதேபோலத் தகடூர் யாத்திரை என்ற முற்றுகைகயைப் பற்றிய தொடர்நிலைச் செய்யுளின் சில பகுதிகள் தமக்குக் கிடைத்துள்ளன.

சிலப்பதிகாரம் :

சிலப்பதிகாரம் தமிழின் முதற்காப்பியம் எனக் கருதப்படுகிறது. இதன் காலத்தை நிர்ணயிப்பதற்கு இதிலுள்ள வரலாற்றுச் சான்று ஒன்று உதவுகிறது. இதன் இறுதிக் காண்டமாகிய வஞ்சிக் காண்டத்தின் வரந்தரு காதையில் சேரன் செங்குட்டுவன் எடுத்த கண்ணகிக் கோவில் (பத்தினிக் கோட்டம்) விழாவிற்கு இலங்கை மன்னன் சுயவாகு வருகை புரிந்தான் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சுயவாகுவின் காலம் கி.பி. 114-136 ஆகும். எனவே சிலப்பதிகாரத்தின் காலமும் கி. பி. 2ஆம் நூற்றாண்டாகக் கருதப்படுகிறது. சிலப்பதிகாரம் இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழ் இன்பமும் கலந்து செய்யப் பெற்றுள்ளதால் இது ‘முத்தமிழ்க் காப்பியம்’ எனப்படுகிறது. இதன் இடையிடேயே உரைநடை விரவிய செய்யுட்பகுதிகள் காணப்படுவதால் ‘உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்’ என்றழைக்கப்படுகிறது. தொடர்ச்சியான கதையை உடைய நீண்ட பாடலாதலால். ‘பொருள் தொடர்நிலைச் செய்யுள்’ என்று சிறப்பிக்கப்படுகிறது. இவ்வாறு பல சிறப்புக்களைப் பெற்ற இந்நூல் ‘நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்’ என்று பாரதியாரால் போற்றப்படுகிறது. இந்நூலிலுள்ள பதிகத்தின் வாயிலாக சிலப்பதிகாரம் இயற்றப்பட்டதன் நோக்கத்தையும் சூழலையும் அறிகிறோம்:

அரசியல் பிழைத்தோர்க்கு அறம்கூற்று ஆவதூஉம் உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும் ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதூஉம் சூழ்வினை சிலம்பு காரண மாகச்
சிலப்பதி காரம் என்னும் பெயரால்
‘நாட்டுதும் யாம்ஓர் பாட்டுடைச் செய்யுள்

இந்நூல் தமிழகத்தின் அன்றைய ஆட்சிப் பகுதிகளாகிய சேரநாடு, சோழநாடு, பாண்டியநாடு ஆகிய மூன்று பகுதிகளையும் தழுவிச் செல்கிறது. சோழநாட்டில் கண்ணகி – கோவலன் திருமண வாழ்வு, மாதவிக்கும் கோவலனுக்கும் ஏற்பட்ட உறவு ஆகியன காட்டப்படுகின்றன. கோவலன் மாதவியிடம் பொருள் இழந்து நிலை தாழ்ந்த சூழலில் சிலம்பை முதலீடாக வைத்து வணிகம் செய்து புதுவாழ்வு தொடங்க கண்ணகியும் கோவலனும் மதுரைக்குச் செல்வதும், விதிவசத்தால் கோவலன் கொலைப்படுவதும், கண்ணகி பாண்டியனிடம் முறையிடுவதும், மதுரையைத் தீக்கிரையாக்குவதும் பாண்டிய நாட்டில் நிகழ்கின்றன. மதுரையைத் தீக்கிரையாக்கிய கண்ணகி, மன அமைதி தேடி நடந்தே சென்று சேர நாட்டை அடைந்து அங்குள்ள ஒரு மலையுச்சியில் (தற்போது குமுளிக்கு அருகே தமிழ்நாடு கேரளா எல்லையில் அமைந்துள்ள மலைத்தொடர்ப்பகுதி. அங்குப் பழைய கண்ணகி கோவிலும் உள்ளது. இப்போது அது கேரள அரசு நிர்வாகத்தில் உள்ளது) வேங்கை மரத்தின் கீழிருந்து வானுலகம் செல்வதும், அதைக் கண்ட குன்றக்குரவர்கள் அக்காட்சியை மலைவளம் காணவந்த சேரனிடம் உரைப்பதும், சேரனுடன் இருந்த சாத்தனார். இளங்கோவடி கட்குக் கண்ணகியின் வரலாற்றினைச் சொல்வதும், அதைக் கேட்டு வியப்படைந்த சேரன் செங்குட்டுவன், கண்ணகிக்குக் கோயில் எழுப்ப வடவரைவென்று இமயத்திலிருந்து கல் எடுத்து வந்து’ பத்தினிக் கோட்டம் நிறுவுவதும் சேரநாட்டில் நிகழ்கின்றன.

இவ்வாறு இக்காப்பியம் பண்டைத் தமிழகத்திலிருந்த மூன்று நாடுகளையும் தழுவிச் செல்வதால், இதனைத் ‘தமிழ்த் தேசியக் காப்பியம்’ என்றும் அழைக்கலாம். அரசர்களுக்கு மாறாக – கோவலன்-கண்ணகி மாதவி ஆகியோரைக் கதைத் தலைவர்களாகக் கொண்டுள்ளதால் இதனைக் ‘குடிமக்கள் காப்பியம்’ என்று சிறப்பித்துச் சொல்வர்.

இந்நூல் புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் ஆகிய மூன்று பெரும் பிரிவுகளை உடையது. ஒவ்வொரு காண்டமும் பல காதைகளாகப் (chapters) பிரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இந்நூலில் மொத்தம் 30 காதைகள் உள்ளன. (புகார்க் காண்டம் 10 காதைகள், மதுரைக் காண்டம்13 காதைகள், வஞ்சிக் காண்டம் 7 காதைகள் ). ஒவ்வொரு காதையின் இறுதியிலும் அக்காதையின் சுருக்கத்தைச் சொல்வது போல ஓரிரு வெண்பாக்கள் உள்ளன.

சிலப்பதிகாரம் முழுவதற்கும் ‘அரும்பதவுரை’ என்ற பழைய உரைக்குறிப்பு உண்டு. விரிவான அடியார்க்கு நல்லார் உரையும் (கானல்வரி தவிர்ந்த) முதல் 23 காதைகளுக்கு உள்ளது. சிலப்பதிகாரத்தைப் பற்றிய ஆராய்ச்சி நூல்களும் திறனாய்வுக் கட்டுரைகளும் ஏராளமாக வெளிவந்த வண்ணம் உள்ளன. தமிழரின் கலைக் கருவூலமாகத் திகழ்வது சிலப்பதிகாரம். இதில் காணப்படும் இசை நுணுக்கங்கள். நடன முத்திரைகள், அடவுகள் போன்றவை பற்றிய ஆய்வுகள் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டுள்ளன. ஆயினும் இந்நூல் தரும் இசைச் சிறப்பினையும் நடனம் பற்றிய செய்திகளையும் இன்னும் முழுமையாக வெளிப்படுத்த இயலவில்லை.

சிலம்பின் சிறப்புக்கள் :

தமிழரின் முதற்காப்பியமாகவும் மூத்த காப்பியமாகவும் விளங்கும். சிலம்பிற்குப் பல சிறப்புகள் உள்ளன. அரசர்களைப் பற்றிப் பாடாமல் முதன் முதலாகக் குடிமக்களைப் பற்றிப் பாடிய மூத்த காப்பியம் இது. இசை, நடனம், நாடகம் பற்றிய தமிழரின் கவின் கலைகள் பற்றிய அறிய செய்திகளை இந்நூல் தருகிறது. அரங்கேற்றுக் காதை முழுவதும் கவின்கலைக் குறிப்புகள் விரவியுள்ளன

குரல்வழி நின்றது யாழே: யாழ்வழித்
தண்ணுமை நின்றது தகவே: தண்ணுமைப்
பின்வழி நின்றது முழவே: முழவொடு
கூடிநின் றிசைத்தது ஆமந் திரிகை

என்று இசைக்கருவிகளின் கூட்டிசை (orchestra) குறிப்பிடப் படுகிறது. நாடக மேடையின் நீள அகல உயரங்கள், நாடகத்தின் திரைச்சீலைகள் (சார்ந்துவரல் எழினி, பொருந்துவரல் எழினி), பின்னணித் திரைகள், நாடக அரங்கம் அமைப்பதற்குரிய நிலம் ஆகியவை பொறியாளனுக்கு உள்ள நுண்ணறிவோடு விளக்கப் பட்டுள்ளன.

சிலப்பதிகாரம் இலக்கியச்சுவை விழுமிய நூலாகும். சங்க இலக்கியதின் தொடர்ச்சியையும், வளர்ச்சியையும், சிலப்பதிகாரம் காட்டுகிறது. ஐவகை நிலங்கள், அங்குள்ள மக்கள் வாழ்க்கை, அந்நிலத்திற்குரிய ஆடல் பாடல்கள் ஆகியன பற்றிய குறிப்புக்கள் சிலப்பதிகாரத்தைச் சமுதாய இலக்கியமாகக் காட்டுகின்றன. குன்றக் குரவையில் குறிஞ்சி நில மக்கள் வாழ்வும், ஆய்ச்சியர் குரவையில் முல்லை நில மக்கள் வாழ்வும், நாடுகாண் காதையில் மருதநில மக்கள் வாழ்வும், வேட்டுவவரியில் பாலைநில வாழ்வும் விரிவாகப் பேசப்படுகின்றன.

வருவது முன்னுரைக்கும் உத்தியிலமைந்த (Foreshadowing) பாடல்கள் சிலவற்றை மங்கல வாழ்த்துக் காதையில் இளங்கோவடிகள் யாத்துள்ளார்.’மண் தேய்த்த புகழினான்’ என்று கோவலனைப் புகழ்வதும் ‘காதலற் பிரியாமல் கவவுக்கை ஞெகிழாமல்’ என்று எதிர்மறையில் வாழ்த்துவதும், கோவலனும் கண்ணகியும் மதுரைக்கு வரும்போது, அங்குள்ள மரம் செடி கொடிகள் அசைவது அவர்களை வாரல் என்பது போல மறித்து நிற்க’ என்று இளங்கோவடிகள் சொல்வதும், கண்ணகியின் தோற்றத்தைக் கண்டு வாயிலோன் பாண்டியனிடம் ‘வம்பப் பெருந்தெய்வம்’ என்றுரைப்பதும் முன் உணர்த்தும் உத்திக்குச் சான்றுகளாக அமைகின்றன.

‘மங்கலவாழ்த்தில்’ தொடங்கும் சிலம்பு ‘அவலத்தில்’ முடிகிறது. இவ்வகையில் இது ஒரு அவலக் காப்பியமே. அடைக்கலக் காதைக்கு (காப்பு) அடுத்து கொலைக்களக்காதையும் (அழிவு), நாடுகாண்காதைக்கு (நாடு) அடுத்து காடுகாண்காதையும் (காடு) அமைந்து முரண்சுவையை மிகுவிக்கின்றன. இதேபோன்று அந்திமாலை சிறப்புச்செய் காதையில் கோவலனோடு கூடிய மாதவி அழகும் அணியும் பெற அமர்ந்திருக்கும் அழகும், கோவலனைப் பிரிந்த கண்ணகி மங்கல அணி தவிர வேறு அணியின்றி நலம்கெட வாடியிருக்கும் அவலமும் அருகருகே அமைந்து கற்போற்குச் சுவையூட்டுகின்றன.

சிலப்பதிகாரத்தில் மக்கள் இலக்கிய மரபைப் போற்றும் பல பகுதிகள் அமைந்திருக்கக் காணலாம். இதனுள் வரிப்பாடல்கள் (கானல்வரி, ஆற்றுவரி, ஊசல்வரி, கந்துகவரி), குரவைப் பாடல்கள் (ஆய்ச்சியர் குரவை, குன்றக்குரவை) ஆகிய நாட்டுப்புறப் பாடல் வடிவங்கள் இலக்கியமாகியுள்ளன.

கோவலனும் மாதவியும் தங்கள் தன்முனைப்பை (ego) விட்டுக்கொடுக்க மனமின்றி எதிரும் புதிருமாக இசைபாடிப் பிரிந்த கானல்வரிப் பகுதி, சிலப்பதிகார நாடகத்தின் திருப்பு மையமாக (Turning point) அமையும் இடமாகும். இக்கானல்வரிப் பகுதியைப் பற்றிய மிகச் சிறந்த ஆராய்ச்சி நூலினை (கானல்வரி) அறிஞர் தெ. பொ.மீ. அவர்கள் எழுதியுள்ளார். கானல்வரிப் பகுதி, திருக்குறள் காமத்துப்பாலின் பாடல்கள் பலவற்றுக்கு விளக்க இலக்கியமாக அமையும் தகுதியைக் கொண்டுள்ளது. கண்ணகியின் கதை சிறுமாற்றங்களுடன் நாட்டுப்புறப் பாடல்களாகவும் (கர்ணகி கதை இலங்கைப் பகுதியில் கோவிலன் கதை என்றும் வழங்கப்படுகின்றது.

மணிமேகலை :

சிலப்பதிகாரம் முடியும் இடத்தில் மணிமேகலை தொடங்குகிறது. சிலப்பதிகாரக் கதையின் தோடர்ச்சியாக இது கருதத்தகுவதாகும் கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மணிமேகலையின் வரலாறு கூறும் இக்காப்பியத்தைப் பாடியவர் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் என்பவராவார். இவரே இளங்கோவடிகளுக்குக் கண்ணகிக் கதையைக் கூறியவர். சிலப்பதிகாரம் சமண சமயக் காப்பியமாகக் கருதப்பட்டாலும் பிற சமயங்களையும் அது பொதுமை நோக்கில் வைத்துப் பேசுகிறது. ஆனால் பௌத்த காப்பியமான மணிமேகலை பிற சமயங்களைக் கடுமையாகக் குறை கூறுகிறது.

மணிமேகலைக் காப்பியத்தைப் பாடியவர், கேட்டவர் பற்றிய செய்தியைப் பதிகம் பின்வருமாறு சொல்கிறது:

இளங்கோ வேந்தன் அருளிக் கேட்
வளங்கெழு கூல வாணிகன் சாத்தன்
மாவண் தமிழ்த்திறம் மணிமேகலை துறவு
ஆறைம் பாட்டினுள் அறியவைத் தனன்

சிலப்பதிகாரம் போன்றே மணிமேகலையும் முப்பது காதைகளை உடையது. சிலப்பதிகாரம் மங்கலவாழ்த்துக் காதையில் தொடங்குவது போல மணிமேகலை விழாவறை காதையில் தொடங்குகிறது. இங்கு இந்திரவிழா பற்றிய விரிவான செய்தி சொல்லப்படுகிறது.

தன் குலத்தொழிலின் நிழல்கூட மணிமேகலையின் மீது படாதவண்ணம் மாதவி அவளை வளர்த்து வருகிறாள். இந்திரவிழாவிற்கு நாட்டியமாட மணிமேகலையை அனுப்ப மறுக்கிறாள். அவளைக் கண்ணகியின் மகளாகவே கருதுகிறாள்.

மாபெரும் பத்தினி மகள்மணி மேகலை
அருந்தவப் படுத்தல் அல்லது யாவதும்
திருந்தாச் செய்கைத் தீத்தொழில் படாஅள்

என்று மணிமேகலையை நாட்டியமாட அனுப்பச் சொன்னவர்களுக்கு மாதவி பதில் தந்து திருப்பியனுப்புகிறாள். மணிமேகலையைத் தவக்கோலம் பூணச் செய்கிறாள். மணிமேகலையும் மனமுவந்து அதனை ஏற்று அறப்பணிகள் செய்கிறாள். தீவதிலகை வாயிலாக ஆபுத்திரன் கையிலிருந்த அமுதசுரபியைப் பெறுகிறாள். அள்ள அள்ளக் குறையாத அந்த அமுதசுரபியால் பசித்து வந்தோரின் பிணி தீர்க்கிறாள். அரசகுமாரனான உதயகுமரனைக் கொன்ற பழி மணிமேகலை மீது விழவே அவள் சிறையில் அடைக்கப்படுகிறாள். மணிமேகலை சிறைக்கோட்டத்தை அறக்கோட்டம் ஆக்குகிறாள். மேகலையின் ஆற்றலை வியந்து அவளை விடுதலை செய்கின்றனர். அவள் வஞ்சி மாநகர் சென்று கண்ணகி கோவலன் படிமங்களைக் கண்டு தொழுகிறாள். பின்னர் காஞ்சி மாநகர் சென்று அறவண அடிகளைக் கண்டு தவத்திறம் பூணுகின்றாள். இந்த மையக்கதையைச் சுற்றிப் பல கிளைக்கதைகள் பின்னப்பட்டுள்ளன.

சுவைமிக்க பல கூறுகளைப் பெற்றுச் சிலப்பதிகரம் சிறந்த நாடகக் காப்பியமாகத் திகழ்கிறது. ஆனால் மணிமேகலை அறக்கருத்துக்கள் நிறைந்த முழுமையான சமய – தத்துவக் காப்பியமாக விளங்குகிறது. இயற்கை இகந்த நிகழ்ச்சிகள் பல இதில் இடம்பெற்றுள்ளன. இது துறவுக் காப்பியம் என அழைக்கப்பட்டாலும் காமத்தின் வலிமையை ஆற்றலுடன் எடுத்துரைக்கிறது. உதயகுமரனின் உருவுகண்டு அவன் பின்னே சென்ற தன் நெஞ்சத்தைக் கடிந்துரைத்த மணிமேகலையின் கூற்று இதற்கு நல்ல சான்றாகும்:

கற்புத் தானிலள் நற்றவ உணர்விலள்
வருணக் காப்பிலள் பொருள்விலை யாட்டிஎன்று இகழ்ந்தன னாகி நயந்தோன் என்னாது.
புதுவோன் பின்னைப் போனதென் நெஞ்சம்
இதுவோ அன்னாய் காமத் தியற்கை

‘பசிப்பிணி தீர்ப்பதே தலையாய அறம்’ என்று வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம் இக்காப்பியம் வற்புறுத்தத் தவறவில்லை.

‘மண்திணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாரம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே
அறமெனப் படுவது யாதெனக் கேட்பின்
மறவா திதுகேள் மன்னுயிர்க் கெல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் அல்லது கண்டதில்’

பௌத்த சமயம் வடநாட்டில் தோன்றித் தமிழ்நாட்டிற்கு அறிமுகமான புறச்சமயம் ஆதலின் இச்சமயக் கொள்கை விளக்கங்களைக் கூறும் நூற்பகுதியில் பல பாலிச் சொற்களும் சமஸ்கிருதச் சொற்களும் காணப்படுகின்றன. பல இடங்களில் இந்நூலின் சொற்கள், தொடர்கள், உவமைகள் ஆகியவை சிலப்பதிகாரத்தோடு இயைபு கொண்டுள்ளன. குறட் கருத்துக்களை இந்நூல் பல இடங்களில் எடுத்தாண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

எ-டு:

‘தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் பெருமழை என்றஅப்
பொய்யில் புலவன் பொருளுரை தேராய்’

இக்காப்பியத்தின் நோக்கத்தை இதன் ஆசிரியர் சீத்தலைச் சாத்தனார் இந்நூலின் தொடக்க அடிகளிலேயே காட்டிவிடுகிறார்.

பசியும் பிணியும் நீங்கி
வசியும் வளனும் சுரக்க

இவ்வாறு சிலப்பதிகாரமும் மணிமேகலையும் முறையே வினைக்கோட்பாட்டையும் அறக்கோட்பாட்டையும் வலியுறுத்தும் சகோதரக் காப்பியங்களாகத் திகழ்கின்றன.

தமிழ் இலக்கிய வரலாறு – கி.இராசா
₹250
Buy Link: https://heritager.in/product/thamil-ilakkiya-varalaru/

இந்நூலினை எப்படி வாங்குவது?

1. எங்களது WhatsApp ல் 097860 68908 தொடர்பு கொள்ளலாம், அல்லது
2. எங்கள் இணைய தளத்தில் Heritager .in வாங்கலாம்.
இணையதள பக்கம் பின்னூட்டத்தில் உள்ளது.

எங்கள் முயற்சியில் எவ்வாறு நீங்களும் பங்கெடுக்கலாம்?

1. எங்கள் நூல் அறிமுக பதிவுகளைப் பகிர்ந்து பலரை சென்றடைய உதவுங்கள்.
2. உங்களுக்கு தேவையா நூல்களை எங்கள் மூலம் பெறுங்கள்.
3. வரலாற்றில் ஆர்வமுள்ள நண்பர்களுக்கு எங்களின் Heritager .in The Cultural Store பற்றி தெரிவியுங்கள்.

உங்களின் தொடர் ஆதரவுக்கும், அன்புக்கும் நன்றிகள்