இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றிய ஆய்வு முறையிலான இலக்கிய மானிடவியலை இந்நூல் அறிமுகம் செய்கிறது. இலக்கியத்தின் ஊடாக மக்களையும், அவர்களுடைய பண்பாட்டு வெளிப்பாடுகளையும் பற்றி மேற்கொள்ளப்படும் ஆய்வுதான் இலக்கிய மானிடவியலாகும். இலக்கியம், மானிடவியல் ஆகிய இரண்டு அறிவுப் புலங்களும் தத்தம் எல்லைகளைக் கடந்து உருவாக்கிக் கொள்ளும் ஈரிடைப்புல நோக்கு என்னும் நெறிமுறை ஊடாகச் சமூகப் பண்பாட்டுச் சூழலுக்குள் இலக்கியம் பெற்றுள்ள இடத்தைக் கண்டறிய முனைகின்றன.
தமிழ் இலக்கிய ஆய்வில் மானிடவியல் கோட்பாடுகளையும் இன ஒப்பியலையும் கையாண்டு, ஈரிடைப்புல நெறிமுறை தழுவிய புதியதோர் ஆய்வுத் தடத்திற்கு வித்திட்ட முன்னோடித் தமிழறிஞர்கள் க. கைலாசபதி, நா. வானமாமலை, க.சிவத்தம்பி உள்ளிட்டோர் ஆவர். அவர்களுடைய ஆய்வுகளில் தனித்துக் காணப்பட்ட பண்பாட்டிடை ஒப்பாய்வு என்பது, எவ்வாறு தன்னியல்பாகத் தமிழில் இலக்கிய மானிடவியல் தோன்றுவதற்கு வித்திட்டது என்பதையும் இந்நூலின் ஒரு பகுதி ஆராய்கிறது.
ஆற்றுப்படை நூல்கள், தொகை நூற் பாடல்கள், சிலப்பதிகாரம் முதல், சமகாலத்திய பண்பாட்டு ஆவணங்களாகக் கருதப்படும் நாவல்களான செடல், ஆழிசூழ் உலகு ஆகிய படைப்புகள் வரையில் இந்நூலின் ஈரிடைப்புல நோக்கிலான விவாதப் பொருளுக்குக் களமாக அமைந்தவை ஆகும்.