சைவ வைணவப் போராட்டங்கள்: ஒரு மறுவாசிப்பு

வைணவம் :

சைவக் கோயில்களில், திருமுறைகளைக் கோயில் கருவறையில் ஓத வேண்டும் என்பது போன்ற பிரச்சினை இருப்பது போல் வைணவக் கோயில்களில் கிடையாது. ஏனென்றால் வைணவத்தில் தென்கலை, வடகலை என்ற பிரிவு ஏற்கனவே வந்து விட்டது. தென் கலைக் கோயில்களில் ஆழ்வார்களின் பிரபந்தங்களுக்கே முன்னுரிமை என்று ஆகி விட்டது. ஆனால் எல்லாச் சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்பதில் பிரச்சினை சைவக் கோயில்களில் உள்ளது போலவே வைணவக் கோயில்களிலும் நீடிக்கிறது. வைணவத்தில் சாதி இல்லை என்று சொன்ன போதிலும், இராமானுஜர் சாதி பேதம் பார்க்காமல் வாழ்ந்து காட்டினாலும், நடைமுறையில் சாதி பேதம் நீடிக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். பிரபந்தங்களைப் படைத்தவர்கள் பல சாதியினர் என்றாலும், இன்று தென் கலைக் கோயில்களில் பிராமணர்களே பிரபந்தங்களை ஓதுகிறார்கள். மற்றவர்களை அனுமதிப்ப தில்லை. வைணவக் கோயில்களில் பணியாற்ற பயிற்சி பெற்ற அர்ச்சகர்கள் வைணவக் கோயில்களில் வேலை கிடைக்காமல் அலைகின்றார்கள். சைவத்திற்கும் வைணவத் திற்கும் இடையே பெரிய மோதல்கள் இல்லாவிட்டாலும்,தென் கலையினருக்கும் வட கலையினருக்கும் இடையே உள்ள மோதல் ஆங்கிலேயர் காலத்திலும் இருந்தது; சுதந்திர இந்தியாவிலும் இருக்கிறது.

மேம்போக்காகப் பார்க்கும் போது இந்த மோதல்கள் சடங்குகள், சம்பிரதாயங்கள் சம்பந்தப்பட்டதாகக் காட்சி யளித்தாலும், உண்மையில் ஆழ்வார்கள் மரபுக்கும் அந்த மரபின் மாற்றுக்கும் நடக்கும் போராட்டமாகவே இருக்கிறது.

வைணவக் கோயில்களில் வழக்குகள்

வடகலை, தென்கலை பிரிவினரிடையே பல வழக்குகள் நடைபெற்றிருக்கின்றன. காஞ்சிபுரம் கோயில்கள், திருவல்லிக் கேணி பார்த்தசாரதி கோயில், திருவரங்கம் கோயில்கள் முதலிய முக்கிய கோயில்களில் பல வழக்குகள் நடந்திருக் கின்றன. அந்த அளவுக்குச் சைவக் கோயில்களில் கிடையாது. சைவக் கோயில்களில் பெரிய வழக்காடி சிதம்பரம் கோயில் தான்.

வைணவக் கோயில்களில் பல வழக்குகள் வெள்ளைக் காரன் ஆட்சியிலேயே நடைபெற்றன. பெரும்பாலான வழக்குகள் சடங்குகள், சம்பிரதாயங்கள், இவற்றில் யாருக்கு முதன்மை உரிமை என்பன பற்றியதே!

காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோயில் வழக்கு வெள்ளைக்காரன் ஆட்சியில் நடந்த வழக்கு. தீர்ப்பு 1.5.1882 ல் வழங்கப்பட்டது என்பதைப் பார்க்கும் போதே வழக்கின் பழைமை புரியும். வழக்கைத் தொடுத்தவர்கள் தென் கலையினர். எதிர்த் தரப்பினர் வடகலையினர் வழிபாட்டின் தொடக்கத்தில் ஆழ்வார்களின் பிரபந்தங்களைப் பாடுவது தங்கள் பாரம்பரிய உரிமை என்றார்கள் தென்கலையினர். மேலும் தங்களின் ஆசார்யரான மணவாள மாமுனியை தங்கள் விழாக்களில் போற்றிப்பாடுவதும் தங்கள் உரிமை என்றார்கள். வடகலையினர் இதைத் தடுப்பதாகவும் புகார் கூறினர். வடகலையினர் வேதாந்த தேசிகரைத் தான் விழாக்களில் போற்றிப் பாட வேண்டும் என்றனர். அதாவது தென்கலைதமிழை முன்னிறுத்தியது. முன்னிறுத்தியது. வடகலை வடமொழியை

இந்த வழக்கை தென்கலையினர் முதலில் மாவட்ட நீதி மன்றத்தில் தாக்கல் செய்த போது, சமய, சடங்குகளில், சம்பிரதாயங்களில் தலையிட்டுத் தீர்வு தருவது உரிமையியல் வழக்கின் (சிவில் வழக்கில்) வரையறைக்கு உட்படாது என்று கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தது மாவட்ட நீதிமன்றம். உயர்நீதி மன்றத்திற்கு மேல் முறையீடு செய்யப்பட்ட போதும். உயர்நீதிமன்றமும் மாவட்ட நீதிமன்றம் சொன்னதை ஆமோதித்தது.அதாவது இது போன்ற வழக்குகளில் தலையிட முடியாது என்றது உயர்நீதிமன்றம். அப்போது இந்தியாவில் உச்சநீதிமன்றம் கிடையாது. லண்டனில் உள்ள பிரிவி கவுன்சில் தான் உச்ச நீதிமன்றமாகக் கருதப்பட்டது. வழக்கு லண்டன் சென்றது!

லண்டன் நீதிமன்றம் உரிமையியல் நீதிமன்றத்திற்கு வழக்கை விசாரிக்கும் அதிகாரம் உள்ளது என்று வழக்கை மீண்டும் விசாரிக்க மாவட்ட நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது. மீள் விசாரணையில் தென் கலையினர் கோரிக்கை ஏற்கப் பட்டது. உயர்நீதி மன்றமும் சில மாறுதல்களோடு தென்கலை வைணவர்களின் உரிமையை நிலைநாட்டியது. சமயக் கோட் பாடுகளின் உண்மைத் தன்மையைக் கண்டறிவது, மற்றும் சடங்குகள், சம்பிரதாயங்கள் முதலியனவற்றை ஒழுங்கு படுத்துவது, நீதிமன்றத்தின் கடமை அல்ல, என்றாலும் பக்தர்களின் உரிமையைப் பாதுகாப்பதும், அதை ஒட்டி பக்தர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட கோட்பாடுகள் மற்றும் நடைமுறைகள் பற்றி நீதிமன்றம் தீர்ப்பளிக்க முடியும் என்றது உயர்நீதி மன்றம்.

இதுபோல பல வழக்குகள் உண்டு. எந்த அளவுக்கு தென்கலையினரும் வடகலையினரும் மோதிக் கொண்டார்கள் என்பதை இன்னொரு வழக்கிலும் பார்க்கலாம். கோயில் யானைக்கு எந்த நாமம் போடுவது என்பதிலும் வழக்கு ஏற்பட்டது. இந்த வழக்கும் காஞ்சி கோயில் சம்பந்தப்பட்டதுதான். கோயில் யானையை தென் கலையினராக தாங்கள் தான் பராமரித்து வருவதாகவும், அந்த உரிமை தங்களுக்கு உரியது என்றும், யானையை, ஊர்வலமாக நடத்திச் செல்வதும் தாங்கள் தான் என்றும் அதில் தலையிட வட கலையினருக்கு எந்த உரிமையும் இல்லை என்றும் வழக்கு தொடரப்பட்டது. தென் கலையினருக்கு ஆதரவாகவே கீழ்நீதி மன்றத்திலும் உயர்நீதிமன்றத்திலும் தீர்ப்பு வந்தது. இறுதியில் வழக்கு உச்சநீதி மன்றத்திற்குச் சென்றது.

வழக்கு நடக்கும் போதே கோயில் யானை இறந்து போனது. இன்னொரு யானை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. உச்சநீதி மன்றம் ஒரு இடைக்கால ஏற்பாடாக தென் கலையினர் ஒரு யானை,வடகலையினர் ஒரு யானை வைத்துக் கொள்ள அனுமதி தந்தது. ஒரு யானைக்கு தென்கலை நாமம், இன்னொரு யானைக்கு வடகலை நாமம். இரண்டு யானைகளும் ஒன்றன்பின் ஒன்றாக அல்ல. பக்க வாட்டில் செல்லவேண்டும் என்றது உச்சநீதி மன்றம். பின்னர் சில ஆண்டுகள் கழித்து உச்ச நீதிமன்றம் இறுதி உத்தரவைப் பிறப்பித்தது. அதன் சாராம்சம் இதுதான். “இடைக்காலமாக செய்யப்பட்ட ஏற்பாடு நன்றாகவே நடைபெற்றிருக்கிறது. எனவே இடைக்கால ஏற்பாடு இறுதி ஏற்பாடாக உறுதி செய்யப்படுகிறது. யானைகள் ஒவ்வொன்றும் பக்கவாட்டில் செல்வதற்குப் பதில் ஒன்றன்பின் ஒன்றாக செல்லவேண்டும் தென்கலை நாமம் போட்ட யானை முதலில் செல்லவேண்டும். வடகலை போட்ட நாமம் போட்ட யானை அதன் பின்னால் செல்லவேண்டும். இருதரப்பினரும் தங்களுக்கென்று ஒரு யானை வாங்கி அதைப் பராமரித்துக் கொள்ள வேண்டும்.”

இவ்வாறு பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வந்தது உச்ச நீதிமன்றம் (பார்க்க 1995 supp (4) Supreme court cases 563)

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலிலும் தென்கலை வடகலை உரிமை சம்பந்தமான வழக்குகள் உண்டு. இக்கோயிலிலும் தென்கலை பிரிவினருக்கே வெற்றி கிடைத்தது. திருவரங்கம் கோயிலும் தென்கலைக் கோயிலே. இங்கும் வழக்குகள் உண்டு. இதில் ஒரு வழக்கில் எழுந்த ஒரு பிரச்சினை ஒரு முக்கியமான தகவலைச் சொல்கிறது. அரங்கநாதனுக்கு நெற்றியில் தென்கலை நாமம்தான் இருக்கும்.

நாமம் என்றால் என்ன?

திருமாலின் பாதங்கள் தான் நாமம். நாமத்தின் வடிவத்தைப் பார்த்தாலே அது பாதங்கள் போல்தான் இருக்கும். திருமாலின் பாதங்களை நாமமாக பக்தர்கள் போட்டுக் கொள்ளலாம். திருமாலுக்கே அவருடைய பாதங்களை நாமமாக நெற்றியில் போடலாமா?

அதனால் வடகலைப் பிரிவினர் தங்கள் வழக்கில் அரங்கநாத சுவாமிக்கு நாமம் போடக் கூடாது என்றார்கள். நீதிபதி கேட்டார். சுவாமியின் நெற்றியில் தென்கலை நாமம் இருப்பதால் அதை எடுக்க வேண்டும் என்று கேட்கிறீர்கள். தென்கலைக்குப் பதில் வடகலை நாமம் இருந்தால் அதை நீக்கச் சொல்வீர்களா – இவ்வாறு கேட்ட நீதிபதி இதுபோன்ற பிரச்சினைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று சொல்லிவிட்டது.

தென்கலை வடகலை மோதல்கள் எந்த அளவுக்குச் சென்றிருக்கின்றன என்பதை இந்த வழக்குகள் காட்டும் (Air) 1939 Madras 757)

திருப்பதி கோயிலும் தென்கலைக் கோயில் தான். பிரபந்தங்கள் அங்கும் முன்னுரிமை பெறும். மார்கழி மாதம் வந்தால் வடமொழி சுப்ரபாதம் நிறுத்தப்பட்டு ஆண்டாளின் தமிழ்ப் பாசுரங்கள் பாடப்படும்.

தென்கலை வடகலை மோதல்கள் இப்போது குறைந்து விட்டன! பழைய சென்னை மாகாண எல்லையைத் தாண்டினால் எல்லா வைணவக் கோயில்களிலும் வடகலை தான் ஆட்சி செய்கிறது!

இப்போது இந்துத்துவா இந்தியாவை மிரட்டுகிறது.இந்துத்துவா யார் பக்கம் நிற்கும்? வடகலை பக்கமா? தென்கலைப் பக்கமா?

ஒற்றைக் கலாச்சாரத்தைத் திணிக்கும் சக்திகள் தென்கலை பக்கம் நிற்காது? வடகலை பக்கமே நிற்கும்!

ஆழ்வார்கள் மரபுக்கு ஆபத்து காத்திருக்கிறது!
(நூலிலிருந்து)

சைவ வைணவப் போராட்டங்கள்: ஒரு மறுவாசிப்பு – சிகரம் ச.செந்தில்நாதன்
விலை:165 /-
வெளியீடு: சந்தியா பதிப்பகம்
Buy this book online: https://heritager.in/product/saiva-vainava-poraattangal-oru-maruvaasippu/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908

Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4

தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://heritager.in/product-category/books/tamil/history/

#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers