பார்ப்பனர் யார்?
பிராமணர், அந்தணர், பார்ப்பனர் என்று குறிப்பிடப்படும் மக்கள் தொகுதியை முதலில் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். பொதுவாகச் சிவந்த நிறமும் பெரும்பாலும் மீசை இல்லாத முகமும் மார்பில் பூணூலும் பார்ப்பனரைப் பார்த்த மாத்திரத்திலேயே நாம் அறிய உதவும் அடையாளங்களாகும். இப்போது பார்ப்பனப் பெண்கள் (குடும்பச் சடங்கு நேரங்கள் தவிர) மடிசார் வைத்துப் புடவை கட்டுவது இல்லை. சாதிய மொழி வழக்கு (Caste dialect) என்பது எல்லாச் சாதியார்க்கும் உரிய பண்புதான். ஒவ்வொரு சாதியார்க்கும் வட்டார வழக்கு உண்டு. இதனை அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல் ஆய்வுகள் விளக்குகின்றன. ஆனாலும் புதிய கல்வி, நகர நாகரிகம் ஆகியவை மற்ற சாதியாரின் மொழி வழக்கையும் உச்சரிப்பையும் மாற்றியது போலப் பார்ப்பனர்களின் பேச்சு வழக்கை மாற்றவில்லை. வந்துண்டு, இருக்கச்சே, தோப்பனார், ஆத்திலே, வெச்சு, அவாளை, த்வம்சம், பண்ணிப்புடுத்து என்பது மாதிரியான சொல் வழக்கோ, உச்சரிப்போ பொது இடங்களில் பார்ப்பனர்களை இன்றும் எளிதில் அடையாளம் காட்டிவிடும். பரம்பரை பரம்பரையாகவே பார்ப்பனர்கள் தமிழ்நாட்டில் (ஆற்று நீர்ப்பாசனம் பெறும்) நீர் வளம் நிறைந்த பகுதிகளிலேயே குடியிருந்தனர். இன்றும் ஓரளவேனும் நீர்வளம் உடைய தஞ்சை, திருச்சி, நெல்லை மாவட்டங்களிலே பார்ப்பனர் எண்ணிக்கை மிகுதியாகும் என்பதை மனத்தில் கொள்ள வேண்டும்.
பார்ப்பனர்கள் பிறப்பினால் உயர்ந்தவர்கள் என்றும் தேவ தூதர்கள் என்றும் சித்தரித்து பார்ப்பனர்களால் புனையப்பட்ட மனுநீதி, புராண இதிகாசக் கதைகளை புனிதமானவை என்றும் இவைகளைச் சொர்க்கத்தின் படிக்கட்டுகளாகவும் காட்டி அவைகளைப் பற்றிய ஒரு மாயையைத் தோற்றுவிப்பதில் பார்ப்பனர் கண்ட வெற்றியானது ஏனைய தமிழ்ச் சாதியார் பார்ப்பனர்களையும், வடமொழி புனிதத்தையும் கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக் கொள்ளவைத்தது. மூடக்கதைகளின் வாயிலாகப் பார்ப்பன நலன்களையே முழுவதும் போற்றிய இக்கலாச்சார வெற்றியே இன்று வரை பார்ப்பனர்களின் ஆதிக்கத்தைப் பாதுகாக்கும் அரணாக உள்ளது.
தமிழக மக்கள் தொகையில் பார்ப்பனர் 3% உள்ளனர் என்ற புள்ளி விபரம் வழி வழியாகச் சொல்லப்படுகிறது. இந்த புள்ளி விபரக்கணக்கைப் பார்ப்பனர்களே மறுக்காது ஏற்றுக் கொள்கின்றனர். அறிஞர்கள் தமிழ்நாட்டு மக்களைச் சாதி வாரியாகப் பகுத்து ஆராய்ச்சி செய்யத் தொடங்கி ஒன்றரை நூற்றாண்டுக் காலமாகிறது. இருப்பினும் பெருமளவு கல்வி வசதி பெற்ற பார்ப்பனச் சாதியாரைப் பற்றிய ஆய்வு நூல்கள் ஒன்று கூடத் தமிழில் இல்லை. 75 ஆண்டுகளுக்கு முன் கிருஷ்ணசாமி அய்யங்கார் எழுதிய History of the sri vaishnava rahmins என்ற நூலும் 20 ஆண்டுகளுக்கு முன்னர் ந.சுப்பிரமணியன் (ஐயர்) எழுதிய Brahmins in the tamil country என்ற நூலும் ஓரளவு பார்ப்பனர்களைப் பற்றிய சில செய்திகளை அறிய உதவுகின்றன. இவை தங்களை மிக உயர்ந்த சாதியாகவும் வடமொழியோடு இணைந்தவர்களாகவும் ஏனைய தமிழ்ச் சாதியார் ஏற்றுக் கொள்ளுமாறு ஆக்கப்பட்டனர். இது ஒரு வரலாற்று உண்மை. இருப்பினும் தங்களைத் தனி நாகரிகமுடைய சாதியார்களாகக் காட்டிக் கொள்ளும் பார்ப்பனர்களுக்கென்று ஒரு தனிமொழி இல்லை என்பதும் வரலாற்று உண்மையே. தமிழ்,தெலுங்கு, கன்னடம் என்று வட்டார மொழிகளையே வீட்டு மொழிகளாகப் பார்ப்பனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். பார்ப்பனர்கள் தமிழ்நாட்டிற்குள் வந்தது குறித்து ஆரியச் சார்புக் கொள்கை ஒன்றும் திராவிடச் சார்புக் கொள்கை ஒன்றும் படித்தவர்கள் மத்தியிலே இருந்து வருகின்றன. மூன்றாவதாக ஒரு கோட்பாட்டையும் பார்ப்பனரான பேரா.எஸ்.இராமகிருஷ்ணன் முன் வைக்கிறார்.’சிந்து வெளியினரான திராவிடரோடு வந்த புரோகிதர்களும் பின்னாளில் ஆரியராக வந்த பார்ப்பனர்களும் கலந்ததால் உருவானது தமிழக அந்தணர் கூட்டம்’என்பது அவர் கருத்து. இதையும் மனத்தில் இருத்திக் கொள்ளலாம்.
ஒரு குறிப்பிட்ட மக்கள் கூட்டம் வெளியிலிருந்து பார்க்கும் போது ஒரே சாதி போலத் தோன்றினாலும் அதன் உள்ளாகப் பல அடுக்குகள் இருக்கின்றன. ஒரு சாதி என்பது ஒரு திருமண உள்வட்டமாகும் (Endogamous group). அதாவது ஒருவன் திருமணம் செய்யக்கூடிய எல்லையே அவனுடைய சாதியின் எல்லையாகும். எடுத்துக்காட்டாக வேளாளரில் தொண்டைமண்டல வேளாளர், கார்காத்த வேளாளர், வயலக வேளாளர் முதலிய பிரிவினரில் ஒருவர் மற்றவரோடு திருமண உறவு கொள்வதில்லை. யாதவர்களில் இவ்வகையான 27 பிரிவுகள் இருப்பதாகக் கூறுவர். இவர்களைப் போலவே பார்ப்பனர்களுக்கு உள்ளாகவும் கோத்திரம், சூத்திரம் வேதம், சாகை என்பனவற்றின் அடிப்படையில் அமைந்த பிரிவுகளும் உண்டு. பார்ப்பனர் அல்லாதார் புரிந்து கொள்வதற்கு வசதியாகப்பார்ப்பனர்களை மொத்தத்தில் மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். 1. ஸ்ரீ வைஷ்ணவர்கள், 2. அர்ச்சகர்கள், 3.ஸ்மார்த்தர்கள் என்பன.
ஸ்ரீ வைஷ்ணவர்கள் :
ஐயங்கார், அல்லது ஆச்சாரியார் என்ற பட்டப் பெயருடைய அனைவரும் ஸ்ரீ வைஷ்ணவர்களே. விஷ்ணுவைக் கடவுளாகக் கொண்டதால் இவர்கள் வைஷ்ணவர்கள் ஆவர். இவர்கள் திருநீறு பூசுவதில்லை. நெற்றியில் U அல்லது Y வடிவத் திருமண் மட்டுமே அணிந்திருப்பர். நெற்றியில் அணிந்த திருமண்ணுக்குப் பாதம் இருந்தால் அவர் தென்கலை மரபினர். பாதம் இல்லாதவர் வடகலையார் ஆவர். வைகானச மரபினர். பாஞ்சராத்திர மரபினர் என்ற பிரிவுகளும் உண்டு. இப்பிரிவு ஆகம நெறியைப் பின்பற்றியதாகும்.
இவர்களில் தென்கலையினர் இராமாநுசரைப் பின்பற்றி சாதி வேறுபாட்டினை அதிகம் பாராட்டுவதில்லை. பார்ப்பனர் அல்லாத வைணவரோடு இப்பிரிவினர் மிகுந்த நெருக்கம் காட்டுவர். தமிழ் மொழிக்கும் ஆழ்வார்களின் பாடல்களுக்கும் மிகுந்த மதிப்பளிப்பவர். தமிழ்ப் பாடல்கள் இல்லாமல் இவர்கள் வீட்டுத் திருமணம் நிறைவுறாது. நம்மாழ்வார் பாடல்களைத் ‘திராவிட வேதம்’ என்னும் பெயரால் முதலில் அழைத்தவர்களும் இவர்களே. சேலம் விசயராகவாச்சாரியார் தொடங்கி இராசகோபாலாச்சாரியார் வரை தமிழகத்தில் காங்கிரசை வளர்த்தெடுத்ததில் வைணவப் பார்ப்பனர்களுக்கு பெரும்பங்கு உண்டு. பெரியாரின் நண்பர்களாகவும், இந்தி எதிர்ப்பு வீரராகவும், ராஜாஜியின் அரசியல் எதிரியாகவும் விளங்கிய பரவஸ்து இராஜகோபாலாச்சாரியும், அக்ரகாரத்து அதிசயமணியாய் விளங்கிய வ.ரா.வும் (வ.ராமசாமி ஐயங்கார்) வைணவப் பார்ப்பனர்களே.
அர்ச்சகர் :
சைவ, வைணவக் கோவில்களில் கருவறையில் கடவுளர்களின் உருவங்களைத் தொட்டுப் பூசனை செய்பவர்களை அர்ச்சகர் எனலாம். இவர்கள் வேதத்திலும் வேள்வியிலும் (தீ வளர்ப்பதிலும்) அதிக நாட்டம் செலுத்துவதில்லை. எனவே உருவ வழிபாட்டில் அதிக நாட்டம் உடையவர்கள். கோவில் கருவறைக்குள் முதல் மொழியாக வடமொழியை நிறுத்துவதில் மிகுந்த அக்கறை காட்டுவார்கள்.கோவிலில் கருவறைகளில் இவர்களின் தனி ஆட்சி நடைபெறுவதால் அதைப் பயன்படுத்தி பணமும் அதிகாரமும் கொண்ட மேல்தட்டு மக்களை மகிழ்விப்பதில் இவர்களுக்கு இயல்பாகவே ஆர்வம் அதிகம். இந்த இரண்டு பிரிவினரில் வைணவக் கோயில் அர்ச்சகரான ஐயங்கார்கள் தமிழில் உள்ள வைணவத் தத்துவ நூல்களில் தனி ஆர்வம் செலுத்துவர். சைவக் (சிவன்) கோயில் அர்ச்சகரான பட்டர் அல்லது சிவாச்சாரியார் தமிழில் உள்ள சைவத் தத்துவ நூல்களைப் படிப்பதில் ஒருபோதும் ஆர்வம் காட்டுவதில்லை. மாறாகத் தமிழரது சைவ சித்தாந்தக் கொள்கையே வடமொழியிலுள்ள ரௌரவ ஆகமத்திலிருந்து வந்தது என்று வாதாடுவர். அதனால் தான் சைவக் கோயில்களில் திருமுறைப் பாடல்களை ஓதுவதற்கென்றே பார்ப்பனரல்லாத ஒருவர் (ஒதுவார்) தனியாக நியமிக்கப் பட்டிருப்பதைச் சாதாரணமாகக் காணலாம்.
ஸ்மார்த்தர் :
பார்ப்பனர் என்ற தன்னுணர்வை நிரம்பப் பெற்றவர்கள் ஸ்மார்த்தப் பார்ப்பனர்களே. இவர்கள் நெற்றியில் திருநீறு அல்லது சந்தனக் கீற்று அணிவர். கோயிலில் வேதம் ஓதுவது தவிரப் பிற வேலைகளை இவர்கள் ஏற்பதில்லை. ஸ்மார்த்தர் என்ற பெயர் ஸ்ருதி (சொல்லப்படுவது) என்பதிலிருந்து வந்ததாகும். வடமொழி வேதங்களும், வேதசாரமான மகாவாக்கியங்களும் எழுதப்படாமல் நீண்டகாலமாக சொல்லப்பட்டே வந்திருக்கின்றன. இவைகளே இவர்களுக்குத் தெய்வம் போலப் பிரமாணமாகும். எல்லா நிலைகளிலும் தீண்டாமைக் கொள்கையை அனுசரிப்பதும் இவர்களே. காலையில் குளிப்பது தொடங்கி அந்த நாளுக்குரிய காலைப் பூசையை முடிப்பது வரை வடமொழி தவிரப் பிற மொழியை (தமிழை) உச்சரிப்பதில்லை என்ற உறுதியான வழக்கம் இவர்களுக்கு உண்டு (கேட்டால் இல்லை என்று மறுப்பார்கள்).
இக்காலத்தில் இவர்கள் அனைவரும் சங்கர வேதாந்தம் (மாயாவாதம்) என்னும் கொள்கையை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
சிருங்கேரி, காஞ்சி ஆகிய சங்கர மடங்களுக்குச் சீடர்களாக இருப்பவர்கள் அனைவரும் ஸ்மார்த்தப் பார்ப்பனர்களே ஆவர்.ஈஸ்வரன் (கடவுள்) என்று ஒருவர் தனியாக இருப்பதாக இவர்களின் மாயாவாதம் ஒத்துக் கொள்வதில்லை. இருந்தாலும் ஒரு கடவுள்
இருப்பதுபோல இக்காலத்தில் காஞ்சி மடாதிபதிகள் ‘இந்து’ என்ற போர்வையில் சைவ, வைணவ ஒற்றுமை பற்றிப் பேசுவதும்திருப்பாவை. திருவெம்பாவை மாநாடுகள் நடத்துவதும் ஆன்மீக உலகத்தில் வேடிக்கைக்கும் சிரிப்புக்கும் உரிய விஷயங்களாகும். அர்ச்சகர் அல்லாத ஐயர் என்று பட்டம் இட்டுக் கொள்பவரும். கனபாடிகள், ச்ரௌதிகள் என்று பட்டமிட்டுக் கொள்பவர்களும், ஸ்மார்த்தப் பார்ப்பனர்களே வேதத்தைக் கனம் என்ற தகுதி வரை படித்தவர்கள் கனபாடிகள். அதற்குக் குறைவாகச் சொல்லத் தெரிந்தவர்கள் ச்ரௌதிகள். க்ரமம் என்ற மிகக் குறைந்த கல்வி பெற்றவர்கள் க்ரம வித்தர்கள். இவர்களுக்கு அரசர்கள் வாரி வழங்கிய ஊருக்குத்தான் ‘கிராமம்’என்று பெயர். இது மட்டுமல்ல. பார்ப்பனர்களுக்கு அரசர்கள் அவ்வப்போது ஹிரண்ய கர்ப்ப, கோகர்ப்ப தானங்களையும் வழங்கியுள்ளனர். அதாவது பொன்னாலாகிய கர்ப்பப்பை, பொன்னாலாகிய பசுவின் கர்ப்பப்பை ஆகியவற்றைச் செய்த அரசர்கள் அதில் நுழைந்து வெளிவந்த பின் அவற்றைப் பார்ப்பனர்களுக்குத் தானமாக வழங்கிவிட வேண்டும். இவையெல்லாம் கல்வெட்டுகளிலிருந்து கண்டறியப் பெற்ற உண்மைகள். பொய்க்கதை இல்லை. மொத்தத்தில் தமிழ் மொழியிடமிருந்தும் தமிழ் மக்களிடமிருந்தும் பெருமளவு அந்நியமாகியிருப்பவர்கள் ஸ்மார்த்தப்
பார்ப்பனர்களே. (நூலிலிருந்து.)
பார்ப்பனியமும் இந்திய தேசிய உருவாக்கமும் – தொ.பரமசிவன்
விலை:80/-
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Buy this book online: https://www.heritager.in/product/paarppaniyamum-indhiya-desiya-uruvaakkamum/
To order on WhatsApp: wa.me/919786068908
Call: 097860 68908
Buy online: www.heritager.in
Social Media Handles:
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு
#books #tamilbookstore #Heritager wwww.heritager.in
Buy History and Heritage Related book online:
Buy Tamil Inscription Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/inscriptions/
Buy Tamil Literature Books: https://www.heritager.in/product-category/books/tamil/literature/
Buy Tamil Archaeological Books: https://www.heritager.in/product-category/books/tamil/archaeology/
Buy Tamil Temple Architecture and Art Books: https://www.heritager.in/product-category/books/tamil/art/
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/