தமிழகத்தில் பல்லவர், பாண்டியர், சோழர் போன்ற மன்னர்கள் தங்கள் பெயரிலேயே கோவில்களைக் கட்டியதை நாம் அறிவோம். ஆனால், இந்தக் காலத்திற்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது சங்க காலத்தில், தமிழகத்தில் கிரேக்கர்கள்தங்கள் அரசனின் பெயரில் கோவில் அமைக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். இது தமிழகத்தில் காணப்படும் பள்ளிப்படை கோவில், சோழீஸ்வரர் கோவில் கட்டுமான மரபுடன் தொடர்புப்படுத்திக் காண முடிகிறது.
கி.மு. 50 முதல் கி.பி. 250 வரை, ஐரோப்பா முழுவதும் ரோமானியப் பேரரசு மிகப் பெரிய சக்தியாக இருந்தது. அவர்கள் மத்தியதரைக் கடலை ஒட்டிய ஆசியப் பகுதிகளிலும் தங்கள் செல்வாக்கைச் செலுத்தினார்கள். இந்த காலகட்டத்தில், தென்னிந்தியாவில் இருந்த நம் தமிழ் மன்னர்களுக்கும் ரோமானியர்களுக்கும் இடையே ஒரு நல்ல, வளமான உறவு இருந்தது ஆச்சரியமான விஷயம். வியாபாரம் மற்றும் தூதர்கள் மூலம் இந்தப் பிணைப்பு உருவானது.
இவ்வுறவு கலாச்சாரப் பரிமாற்றத்தை வளர்த்ததுடன், தொல்பொருள் மற்றும் பழைய இலக்கியச் சான்றுகளையும் நம்மிடையே விட்டுச் சென்றுள்ளது. அவற்றில் முசிரிஸில் இருந்த அகஸ்டஸ் கோவில் பற்றிய குறிப்பு மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. இது இந்தியத் துணைக் கண்டத்தில் ரோமானியர்கள் தமிழகத்தில் ஆழமாகப் கால் பதித்திருந்ததையும், முதல் ரோமானியப் பேரரசரை உலகெங்கும் கடவுளாக வணங்கப்பட்டதையும் காட்டுகிறது.
ரோமானியப் பேரரசு வலிமை பெறுவதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, தமிழர்கள் மத்தியதரைக் கடல் நாடுகளுடன் கடல் வழியில் வியாபாரம் செய்து வந்தனர். ரோம் ஒரு பெரிய சக்தியாக வளர்ந்ததும், ஏற்கனவே இருந்த இந்த வியாபாரப் பாதைகள் பலமடங்கு செழித்தன. இதன் மூலம் இரண்டு தொலைதூரப் பகுதிகளுக்கும் இடையே பொருட்களும், புதிய கருத்துகளும் வேகமாகப் பரிமாறப்பட்டன.
ரோமானியர்களுக்கு ஆடம்பரப் பொருட்களின் தேவை அதிகமாக இருந்தது. குறிப்பாக, கருமிளகு, முத்துகள், யானைத் தந்தம், பட்டு, மற்றும் பெரில் போன்ற விலை உயர்ந்த கற்கள் தமிழ்நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன. கருப்பு மிளகினை பழைய சமஸ்கிருத நூல்களில் “யவனப் பிரியா” – அதாவது “ரோமானியர்களுக்குப் பிடித்தது” என்று அழைக்கப்பட்டது. பதிலுக்கு, ரோமானியத் தங்க நாணயங்கள், மது, கண்ணாடிப் பொருட்கள் மற்றும் பிற ஆடம்பரப் பொருட்கள் தமிழ்நாட்டுக்குள் வந்தன. இதனால் தமிழ் ராஜ்ஜியங்கள் பொருளாதார ரீதியாக மிகவும் செழித்தன. வளையல்களுடன் ரோமானியப் பெண்கள் அரசர் முன்பு கொண்டுவந்த மது ஜாடி பற்றி சங்க இலக்கியம் பேசுகிறது. இந்த வர்த்தகத்தால், தங்கம் அதிகம் தமிழகத்தை வந்து சேர்ந்தது. இதனால் ரோமானியர்களுக்குப் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
வெறும் வியாபாரத்தோடு நில்லாமல், இந்த உறவு ராஜதந்திர ரீதியாகவும் வளர்ந்தது. தமிழ் மன்னர்கள் ரோமுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ள ஆர்வம் காட்டினார்கள். கி.மு. 20-ல் “பாண்டியன்” என்று குறிப்பிடப்பட்ட ஒரு தமிழ் மன்னர், பேரரசர் அகஸ்டஸின் அரசவைக்குத் தூதுக்குழு ஒன்றை அனுப்பியது இதற்கு ஒரு முக்கியமான உதாரணம். இந்தச் செயல்பாடு, இரு நாடுகளும் தங்கள் உறவுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தன என்பதைக் காட்டுகிறது.
பழைய தமிழ் இலக்கியங்கள், முசிரிஸ் போன்ற பரபரப்பான நகரங்களில் வெளிநாட்டினர் நிறைந்திருந்ததை தெளிவாகக் காட்டுகின்றன. “கடுமையான, கம்பீரமான தோற்றத்துடன், தங்கள் ஆடைகளின் மடிப்புகளுக்கு அடியில் ஆயுதங்களை மறைத்து வைத்திருந்த” இவர்கள் ரோமானியர்கள் என்பதை நாம் அறியலாம். இந்த வெளிநாட்டவர்களில் பலர் தமிழ் மன்னர்களுக்குக் காவலர்களாகப் பணிபுரிந்தனர் என்றும் சங்க இலக்கியக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. இது உள்ளூர் நிர்வாகத்தில் ரோமானியர்களுடன் தமிழர்கள் இணைந்து செயல்பட்டதையும் காட்டுகிறது. ரோமானியப் பொறியியலைப் போலவே, நம் தமிழ் கோட்டைகளிலும் கவண் மற்றும் பிற போர் கருவிகள் இருந்ததற்கான சங்க இலக்கியக் குறிப்புகள் மூலம், தொழில்நுட்பப் பரிமாற்றம் இரு நாடுகளுக்கு இடையே நடந்திருக்கலாம் என்பதை அறியமுடிகிறது.
தமிழ்நாடு முழுவதும், அகஸ்டஸ், டைபீரியஸ் மற்றும் நீரோ (கி.பி. 1 முதல் 2 ஆம் நூற்றாண்டு வரை) போன்ற பேரரசர்களின் காலத்தைச் சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ரோமானிய நாணயங்கள் குறிப்பாக காவிரி நதி டெல்டாவில் அதிக அளவில் கிடைத்துள்ளன. புதுச்சேரிக்கு அருகில் உள்ள அரிக்கமேடு (மணிகள் தயாரிப்புக்கு பெயர் பெற்றது) மற்றும் முக்கியமான உள்நாட்டு வர்த்தக மையமான கரூர் போன்ற இடங்களில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் ரோமானிய ஆம்போராக்கள் (கலன்கள்), மட்பாண்டங்கள், கண்ணாடிப் பொருட்கள் மற்றும் மணிகள் போன்ற குறிப்பிடத்தக்க கலைப்பொருட்கள் கிடைத்துள்ளன. இது ரோமானியர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே ஒரு செழிப்பான மற்றும் நீடித்த வர்த்தக வலையமைப்பு இருந்ததற்கான உறுதியான ஆதாரம்.
அகஸ்டஸ் கோயில்கள் இந்தியாவிலும் உலகெங்கிலும் காணப்படுவது ரோம ஆதிக்கத்தின் நீட்சியைக் காட்டுகிறது.
பழைய துறைமுக நகரமான முசிரிஸில் (இன்றைய கேரளாவில் உள்ள பட்டணம்) அகஸ்டஸ் கோயில் இருந்தது என்று கூறப்படுகிறது. இது ரோமானியர்களுக்கும் இந்தியர்களுக்கும் இடையே இருந்த நீண்ட வரலாற்றுத் தொடர்புக்கும், ரோமானியப் பேரரசரின் வழிபாட்டு முறைக்கும் ஒரு முக்கியமான அடையாளமாக நிற்கிறது. ரோமானியர்கள் வர்த்தகத்தைப் பெருக்க ரோமன் நகரை நோக்கிச் செல்லும் உலகமெங்கும் சாலைகள் அமைத்தனர். அதானால் தான் “All Roads lead to Rome” என்ற பழமொழியே உருவாயது.
ரோமானிய சாலைகளின் வரலாற்றைக் பற்றி கூறும் வரைபடத்தின் பழமையான பதிப்பான தபுலா பியூட்டிங்கெரியானா என்ற வரைபடத்தில் இந்தக் கோயில் தெளிவாகக் குறிக்கப்பட்டுள்ளது. இது, தொலைதூரத்தில் இருந்த இந்தத் துறைமுகத்தைப் பற்றி ரோமானியர்கள் அறிந்திருந்ததையும், அதை ஒரு முக்கியமான இடமாகக் கருதியதையும் காட்டுகிறது. பேரரசருக்காக ஒரு கோவில் கட்டும் அளவுக்கு முசிரிஸில் குறிப்பிடத்தக்க அளவு ரோமானியர்கள் இங்கு இருந்திருக்கிறார்கள் என்பதையும் இது உணர்த்துகிறது.
ரோம வணிக வரலாற்றில் முசிறியின் முக்கியத்துவத்தை கூறும் விதமாக இக்கோயிலையும், ரோமானியர்களின் வணிக நலன்களையும் பாதுகாக்க, இங்கு 1,200 ரோமானிய வீரர்கள் கொண்ட ஒரு பெரிய படை நிறுத்தப்பட்டிருந்தது. இந்தக் கோயில் ரோமானிய வணிகர்களுக்கும் அதிகாரிகளுக்கும் வழிபாட்டுத் தலமாக மட்டுமல்லாமல், ரோமானியர்களின், ஆட்சி அதிகாரம், மற்றும் உள்ளூர் சேர மன்னர்களுடனான இராஜதந்திர உறவுகளைப் பேணும் தூதரகம் போல செயல்பட்டிருக்கும்.
பட்டணத்தில் நடந்த தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகளில் ரோமானியக் கலைப்பொருட்கள் உட்பட இந்தோ-ரோமானிய வர்த்தகத்திற்கான நிறைய ஆதாரங்கள் கிடைத்திருந்தாலும், அகஸ்டஸ் கோயிலின் தனித்துவமான கட்டிடத்தின் எந்தத் தடயமும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இது கட்டிடத்தின் தன்மை (ஒருவேளை சிறிய கோவிலாக இருக்கலாம்), கடல்சார் சூழல் காரணமாக ஏற்பட்ட அழிவு, அல்லது தொல்பொருள் ஆராய்ச்சி தொடர்ந்து நடப்பதால் எதிர்காலத்தில் கண்டறியப்படலாம். இருப்பினும், வரலாற்றுப் பதிவுகளும், கிடைத்த தொல்பொருட்களும் முசிரிஸில் ஒரு ரோமானிய வாழிடமும், சமய கலாச்சாரப் மையமும் இருந்ததை உறுதிப்படுத்துகின்றன.
பேரரசர் அகஸ்டஸுக்குக் கோயில்களைக் கட்டுவது என்பது ரோமானியப் பேரரசு முழுவதும் பரவலாக இருந்த ஒரு வழக்கம். இது பேரரசரின் வழிபாட்டை ஊக்குவிப்பதற்கும், அவரது அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்கும் ஒரு சக்திவாய்ந்த கருவியாகச் செயல்பட்டது. இந்தக் கோயில்கள் வெறும் மதத்தினைப் பரப்பும் கட்டிடங்கள் மட்டுமல்ல; அவை ரோமானியர்களின் கட்டிடக்கலைத் திறமையின் மற்றும் அரசியல் செல்வாக்கின் வலிமையான அங்கு நிலைநிறுத்தும் அடையாளங்களாகவும் இருந்தன.
முசிறியில் இருந்த கோவில் பற்றி இன்றுவரை எந்த தொல்லியல் சான்றும் நமக்கு கிடைக்கவில்லை. ஆனால் உலகெங்கிலும் உள்ள அகஸ்டஸ் கோயில்கள் இன்றும் உள்ளன. அவற்றைப் பற்றி பார்ப்போம்.
துருக்கி நாட்டில் அங்காரா பகுதில் ஒரு கோவில் உள்ளது. இது அகஸ்டஸின் சுயசரிதையான ரெஸ் கெஸ்டே திவி அகஸ்டியின் முழுமையான நகலைக் கொண்டிருப்பதால் இது மிகவும் பிரபலமானது. கி.மு. 25-20 க்கு இடையில் கட்டப்பட்ட இந்தக் கோயில், ஒரு முக்கியமான பிரச்சாரக் கருவியாக செயல்பட்டது எனலாம்.
குரோஷியா நாட்டில் இருக்கும்இ க்கோவில் இத்தாலிக்கு வெளியே மிகவும் பாதுகாக்கப்பட்ட ரோமானிய நினைவுச்சின்னங்களில் இதுவும் ஒன்று. கி.மு. 2 மற்றும் கி.பி. 14 க்கு இடையில் கட்டப்பட்டது. இது ரோமானிய கோயில் கட்டிடக்கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
இன்றைய பிரான்ஸ் நாட்டின் வியன்னாவில் அமைந்துள்ள அகஸ்டஸ் மற்றும் லிவியா கோயில், கி.பி. 1 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் அகஸ்டஸ் மற்றும் அவரது மனைவி லிவியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டது
ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனா பகுதியில் ஒரு அகஸ்தஸ் கோவல் அமைந்துள்ளது. இக்கோயிலின் நான்கு அற்புதமான கொரிந்தியன் தூண்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. இது பார்சினோவின் பண்டைய ரோமானிய ஏகாதிபத்தின் அடையாளமாக விளங்குகின்றது.
இத்தாலி டிவஸ் அகஸ்டஸ் கோயில், கி.பி. 14-ல் அகஸ்டஸ் நோலா என்ற பகுதியில் இறந்த இடத்தில் அமைக்கப்பட்டு, கி.பி. 26-ல் அர்ப்பணிக்கப்பட்டது. இது பேரரசனை கடவுளாக வழிபடும் நடைமுறையை எடுத்துக்காட்டுகிறது.
ரோம் நாட்டில் பலடைன் மற்றும் கேபிடோலின் மலைகளுக்கு இடையில் அமைந்துள்ள ரோமன் மன்றத்தில் உள்ள இந்த முக்கியமான கோவில் டிவஸ் அகஸ்டஸ் கோயில். இது இறந்த பேரரசரை கடவுளாக வழிபட்ட இடம் ஆகும்.
முசிரிஸில் இருந்தாகக் கூறப்படும் அகஸ்டஸ் கோயில், இதே போன்ற அமைப்பில் ஒரு அரசனை தெய்வமாக வழிபடும் கோவிலாக இருக்க வாய்ப்புள்ளது.
கட்டுரை: இராஜசேகர் பாண்டுரங்கன்
படங்கள்: உலகெங்கிலும் உள்ள அகஸ்டஸ் கோவில்கள்