இந்திய நாட்டுச் சமயப்பிரிவுகள்

இந்திய நாட்டுச் சமயப்பிரிவுகள்

இந்தியா என்ற நாடு புதிதாகவே ஆங்கிலேயர் ஆட்சிக்குப்பின் ஒரே நாடாக 1858-ல் இணைக்கப்பட்டது. பல மொழிகள், பல இனத்தவர் வாழும் மாநிலங்கள் ஒன்று சேர்ந்த நாடாக இந்தியா உருவானது. மாநிலங்கள் பலவற்றிலும் பல்வேறு சமயங்களும் இருந்தன. ஆயினும், இந்திய மரபு என்ற சொல்லத்தக்க உரிமை பெற்ற மதங்களாக சைவம், வைணவம், ஜைனம், பௌத்தம் ஆகியன உருவாகியிருந்தன. இவற்றில் ஜைனத்திற்கும் பௌத்தத்திற்கும் கடவுள் என்ற ஒரு சக்தியிடம் நம்பிக்கையில்லாவிட்டாலும், அந்தந்த மரபின் தலைமையாளர் களையே கடவுளாகக் கொண்டு வழிபட்டனர். எனவே, இவையும் காலப்போக்கில் இந்தியச்சமயங்களின் வரிசையில் சேர்ந்தன. இவைதவிர, இஸ்லாம், கிறித்தவம், சீக்கியம்- ஆகிய மதங்களும் இந்தியரிடையே இருந்து வருகின்றன. தொல்காலத்து ரிக்வேதத்தின் மூலம் குறிப்பிட்ட ஓர் கடவுளைக் கொண்ட சமயம் உருவாகா விட்டாலும் வேதவியல் (Vedism) என்பது ஓர் அடிப்படை மதம் போலவே கருதப்படுகிறது. இவைதவிர, சமய உட்பிரிவுகளும் உள்ளன. இவற்றில், தலையாய சமயங்கள் குறித்தே இப்பகுதி அமைகிறது.

1. வேதிவியல் (Vedism):

ரிக் வேதத்தை அடிப்படையாகக் கொண்ட நம்பிக்கைமரபே வேதவியம் எனப்படுவது, இதுவே நாளடைவில் வருணாசிரம தர்மத்தை, சமூகக் கருத்தியலாக இணைத்துக்கொண்ட வைதிக சமயமாக மாறுகிறது. ஆயினும், வேதவியல் என்பது இந்தப் பிற்காலத்து வைதிகம் என்று சொல்ல முடியாது.

கி.மு. 1000 -கால வரையிலான ஆரியர்களின் இனக்குழு நம்பிக்கை களையும் செயல்பாடுகளையும் அடிப்படையாகக் கொண்டதே வேதவியல் (Vedism) என்பது. இந்தியாவில் அவர்கள் நிலையாகத்
தங்கியபிறகு உருவமைக்கப்பட்டது. வேதம் என்றால் அறிவு என்று பொருள். வேதங்கள் எனப்படும் ரிக், யஜூர், சாம, அதர்வணம் என்ற நான்கிற்கும் ஒட்டுமொத்தப் பெயரே வேதம் என்பது. இவை புனித அறிவுநூல்களாகக் கருதப்படுவன. குறிப்பாக ரிக் வேதமே யாவற்றிற்கும் முக்கியமானது வேள்விச்சடங்கின் வெளிப்பாடு இதிலேயே உள்ளது. நான்கில் ரிக் வேதமே பழமையானது. மற்றவை, பிற்காலத்தைச் சேர்ந்தவை.

ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழைந்து இங்கு வாழ்ந்து வந்த பூர்விகக் குடிகளை வெற்றி கொண்டனர். அவர்களை விட வெற்றி கொள்ளப்பட்டவர்கள் முதிர்ச்சி அடைந்த சிந்தனை, சமயம், நாகரிகம் பெற்றவர்களாக இருந்தபடியால், ஆரியர்கள் தங்கள் மரபுகளை பூர்விகக்குடியினர் மரபுகளுடன் இணைவு செய்து கொண்டு புதிய சமயப் பண்பாட்டை உருவாக்கினர். தொல் வேதப்பாடல்கள் யாவும் இயற்கை நிகழ்வுகள் குறித்த பாடல்களே. இயற்கை குறித்த வியப்பும், மகிழ்ச்சியும், வேண்டுதல்களும் நிறைந்த பாடல்கள். இந்திரன், வருணன், அக்கினி என்று இயற்கைச் சக்திகள் ஆளியப்படுத்தப் பட்டிருந்தன (personification). தொல்கால வேதசமயம் என்பது எளிமையான இயற்கை வழிபாட்டுச் சமயமாகத் திகழ்ந்தது. அக்காலத்தில் விக்கிரகங்களோ கோயில்களோ கிடையாது. வேள்விக் கூடங்களே மிகுதி. இதன்மூலம் இயற்கைச் சக்திகளின் அருள் வேண்டப்பட்டன. பல கடவுளர் இதனால் வழிபாட்டுக்குரிய வராயினர். பல கடவுளரைப் புகழ்தல் இப்பாடல்களில் மிகுதியாகக் காணப்படும். வேத சமயக்கடவுளர் வழிபாட்டை பல்கடவுளர் வழிபாடு (Polytheism) என்பர். தாய் வழிக்கடவுளான அதிதி முக்கியமான கடவுளாகும். அதிதியின் மக்களே அக்கினி, ஆதித்யா, அஸ்வின் போன்றவர்கள். ருத்ரா என்ற கடவுள் புயலின் ஆளியப்படுத்தலாகும். ‘வருணா’ நீரின் கடவுளாகும். ‘யமா’ மரணத்தின் கடவுள். இவற்றி லிருந்தே பூர்விகக் குடிகளுடனான இணைவு நடந்தேறியது. ஆன்மாக்களின் மறு பிறப்புகள் பற்றி வேதங்கள் எதுவும் கூறவில்லை. ஆனால் அறிநெறிப்படி வாழ்தலை வலியுறுத்துகிறது. அறநெறி பிறழ்ந்தோர் இருள் உலகில் சேர்வர் என்று கூறுகிறது. கேள்வி மூலம் கடவுளரின் அருளைப் பெறமுடியும் என்ற நம்பிக்கை இருந்தது.

நோன்பு – பற்றறுத்தல் ஆகியன மேலான சக்திகளைத் தரும் எனக் கூறப்பட்டிருந்தாலும், இவற்றை வேதங்கள் வாழ்க்கைக்கு முக்கிய மானவை எனச் சிபாரிசு செய்யவில்லை. விதவை மறுமணத்தை வேதவியல் மறுக்கவில்லை குழந்தைத் திருமணத்தை ஆதரிக்கவில்லை. ஆக,வேதவியல் என்பது பிற்கால வைதிக சமயமாக அமையவில்லை.வாழ்க்கை ஏற்புடன், இயற்கை வழிபாட்டுடன், சமூக ஒழுங்கு கருதிய சமயமாகத் திகழ்ந்தது எனலாம். இதுவே, ஆதி வேதவியம், பிற்காலத் தத்துவங்களுக்கு வேதத் தொடர்ச்சியைக் காட்டுவது. வைதிக அரசியலின் ஒருபகுதி எனலாம். அதுவே உண்மையல்ல. உண்மையைத் திரித்துக் காட்டும் சாதிய அரசியல்.

2. சைவம்:

சைவ சமயம் என்பது சிவனை வழிபடுகடவுளாகக் கொண்டது. அவதாரங்களை இம்மதம் கடவுளர்க்கு அளிப்பதில்லை; அதை வலியுறுத்துவதில்லை. தென்னிந்தியாவில் இந்தச் சமயம் மிக வலுவாக வேரூன்றி உள்ளது. ஆதிகாலத்திலிருந்தே பல்வேறு கடவுளைக் கொண்ட சமயங்கள் உலகெங்கும் தோன்றி வந்துள்ளன. எல்லாக் கடவுளரின் பெயர்களும் ஒளியுடைமையையும் ஞாயிற்றையும் குறிப்பதாக உள்ளன என்று ந.சி. கந்தையா அவர்கள் சைவ சமய வரலாறு என்ற நூலில் (பக். 9) கூறுகிறார். சிவன் எனும் பெயர் மிகவும் பழமையுடையது. சிவன் என்பதற்கு சிவந்தவன் என்ற பொருண்மை உண்டு. பாபிலோனியரின் மாதங்களில் ஒன்று சிவன் என்று வழங்கப்படுகிறது. எகிப்திலுள்ள பாலைவனப்பசுந்தரை ஒன்று சிவன் எனப் பெயர் பெற்றிருந்ததாகவும் சிவன் கோயிலிருந்தமையால் அப்பெயர் பெற்றிருக்கலாம் என்றும் ந.சி. கந்தையா கூறியுள்ளார். சிவவழிபாடு மொகஞ்சதரோ காலத்தில், கி.மு. 3500-ல் மிகப்பிரபலம் பெற்றிருந்தது. ஆசியா மைனர் மக்களும் சிவவழிபாட்டுக்குரியவரா யிருந்தனர். இடபத்தின் மீது நின்று கையில் இடியேற்றைப் பிடித்துக் கொண்டிருப்பதாகிய உருவச்சிலை ஒன்று ஆசியா மைனரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உலகின் பல பகுதிகளில் ஆதிநாளிலிருந்தே சிவவழிபாடு இருந்துள்ளது. அடிப்படையில் இது ஒளி வழிபாடாகவே உள்ளது.

சைவ சமயத்தில் இலிங்க வழிபாடு முக்கியமானது. இது, பொதுவாக, ஒரு கல்லில் அமைந்த படிமத்தை வழிபடுவதாக அமையும். சைவ சமயத்தின் பிரிக்கமுடியாத ஒரு கூறாகவே லிங்கம் குறித்த பார்வைகள் உள்ளன. இது போல சைவர்களே உருத்திராட்சமாலை அணிவர். சைவத்தின் புரோகிதர்கள் பிராமணர்களாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்ததில்லை. சைவர்கள் ஒரு கடவுளை சிவனை- நம்புகிறவர்கள் வழிபடுகிறவர்கள். விக்ரக வழிபாட்டினர். இவர்களுடைய இலக்கியங்கள் சமஸ்கிருதத்திலும் தமிழிலுமே மிகுதியாக உள்ளன. இச்சமயம் ஆணியத்தன்மை கொண்டது என்றும் கூறலாம்.

சைவ சமயம், இந்தியாவிற்கு வெளியிலிருந்து வந்ததாகச் சிலர் கூறுவர். ஆயினும், மொகஞ்சதோரா முத்திரைகளில் காணப்படும் ஊர்த்துவ லிங்க உருவே மிகப்பழமையான சிவ வழிபாட்டைக் குறிப்பதாகக் கொள்ளப்படுகிறது. அன்று இந்தியாவிற்குள் படையுடன் நுழைந்த ஆரியர்கள், இங்கிருந்த தொல் வழிபாட்டுக்குரியவரை சிஷ்ண தேவா அதாவது லிங்க (குறி) வழிபாட்டினர் என்று குறிப்பிட்டுள்ளனர். மொகஞ்சதோராவில் காணப்படும், இந்த உரு, மாடுகளால் சூழப்பட்டிருப்பதாகவும் முத்திரை உள்ளது. இதுவே பசுபதி என்பதைக் குறிப்பதாகவும் உள்ளது. எனவே சைவம் இந்தியாவின் ஆதிகாலமதம் என்பதில் சிறிதும் ஐயமில்லை. இச்சமயத்தின் உட்பிரிவுகளாக, பாசுபசும், காளமுகம் ஆகியவற்றைக் கூறலாம். வீரசைவம் என்பதும் பின்னாளில் தோன்றிய ஓர் உட்பிரிவே, ஊர்த்துவ சைவம், அநாதி சைவம், ஆதிசைவம், மகாசைவம், பேதசைவம், அபேதசைவம், அந்தாசைவம், குணசைவம், நிர்க்குண சைவம், அத்துவாசைவம், யோகசைவம், ஞானசைவம், அணுசைவம், கிரியாசைவம், நாலுபாத சைவம், வீரம் சைவம், சுத்த சைவம் என்று 17 உட்பிரிவுகளை ம.ந. திருஞானசம்பந்தன் ‘சமயமும் தமிழும்’ என்ற நூலில் எடுத்துக்காட்டியுள்ளார்.(நூலிலிருந்து)

இந்தியச் சமயங்களும் தத்துவங்களும்: அறிமுகம் – துரை.சீனிச்சாமி


வெளியீடு: NCBH
Buy this book online: https://heritager.in/product/india-samayangalum-thaththuvangalum-arimugam/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908

Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4

தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://heritager.in/product-category/books/tamil/history/

#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers