தொல்லியல் நோக்கில் கரூர் :
கரூர் பழங்காலந்தொட்டே வாணிகத்தில் சிறப்புற்றிருந்தது. என்பதை அகழ்வாய்வு அடிப்படையில் காணமுடிகிறது.கரூர் மாவட்டத்தில் கிடைக்கப்பெற்றுள்ள பானை ஓடுகளும், கல்வெட்டுகளும், பிராமி எழுத்தில் குறிக்கப்பட்டுள்ள ஆட் பெயர்களும் கரூரின் தொன்மையை உணர்த்தும் ஆவணங்களாகும்.
அ. கல்வெட்டுகள்
கி.பி. 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ்ப் பிராமிக் கல்வெட்டுகளில் கரூர் பொன் வாணிகன் நத்தி என்பவன் குறிக்கப்பெறுகிறான். கரூர் வட்டத்தில் “புகழூர் என்னும் புகழியூர் இருக்கிறது. இவ்வூருக்கு இரண்டு கல் தொலைவிலுள்ள ஆறு நாட்டார் மலை என்னும் குன்றில் இயற்கையாயுள்ள குகையிலே கற்படுக்கைகளும் பிராமி எழுத்துக் கல்வெட்டுகளும் இருக்கின்றன. பிராமி எழுத்து கி.பி. முதல் நூற்றாண்டில் பொறிக்கப்பட்டவை. பிராமி எழுத்துச் சாசனங்களில் ஒன்று கடுங்கோ என்னும் இரும்பொறையரசன் இளங்கோவாக இருந்த காலத்தில் செங்காயபன் என்னும் முனிவர் இந்தக் குகையில் வசிப்பதற்காகக் கற்படுக்கையை அமைத்துக் கொடுத்த செய்தியைக் கூறுகிறது. கோ ஆதன் சேரலிரும்பொறை மகன் பெருங்கடுங்கோன் என்னும் அவனுடைய மகன் இளங்கடுங்கோ என்னும் இந்தக் கல்வெட்டெழுத்து கூறுகிறது” (மயிலை சீனி. வேங்கடசாமி. பண்டைத் தமிழக வரலாறு, 1. பக். 33-34). ஆறு நாட்டார் மலையில் உள்ள பன்னிரண்டு கல்வெட்டுக்களில் இரு கல்வெட்டுகள் கூறும் மேற்கண்ட “கோ ஆதன் செல்லிரும்பொறையைச் செல்வக் கடுங்கோ வாழியாதன் என்றும்; பெருங்கடுங்கோவைத் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை என்றும்; இளங்கடுங்கோவை இளஞ்சேரல் இரும்பொறை என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இவர்கள் மூவரும் பதிற்றுப்பத்தில் 7,8,9 ஆம் பத்திற்குரிய பாட்டுடைத் தலைவர்கள் ஆகையால் சேர மன்னர் வரலாறு கூறும் இக் கல்வெட்டுகள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்” (கொங்கு களஞ்சியம், தொகுதி.1, இரா.சு. பக். 113). இது தமிழ்க் கல்வெட்டாகும்.
கல்வெட்டுகளில் ‘கொங்கு ஆன அதிராஜராஜ மண்டலத்து வெங்கால நாட்டுக் கருவஸ்ரீர்த் திரு ஆனிலை ஆளுடைய மகாதேவர்’ என்ற குறிப்பு உள்ளது. இதன் மூலம் கருவூர் குறிக்கப்படுவதைக் காணலாம்.
வடகொங்கில் குளித்தலை வரையிலுள்ள பகுதியை மூன்றாம் வீரசோழன் அகப்படுத்தி அதனைத் தட்டைக்கள நாட்டின் ஒரு பகுதியாக்கித் தன் பெயரால் வீரசோழச் சதுர்வேதி மங்கலம் எனும் அந்தணர் குடியிருப்பையும் தோற்றுவித்துள்ளான். இதனைக் குளித்தலை வட்டத்திலமைந்த இரத்தினகிரியிலுள்ள இவனது கல்வெட்டு (1914:154; மேற்கோள்: வீ.மாணிக்கம், கொங்கு நாடு – கி.பி .1400 வரை, பக். 196) அறிவிக்கிறது.
கரூர் – சேலம் பகுதியில் முதல் இராசேந்திரனின் பதினைந்து கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவனது கரூர்க் கல்வெட்டுகளில் (தெ.இ.க.:3:21,22); மேற்கோள்: வீ.மாணிக்கம், கொங்குநாடு கி.பி. 1400 வரை, பக் 187)திருமந்திர ஓலை, திருமந்திர ஓலை நாயகம் முதலான ஐந்து சோழ அதிகாரிகள் ஒப்பமிட்டுள்ளனர்.
கரூர் நாட்டுப்புற வழக்காற்றியல் – பேரா.சி. சக்திவேல்
₹230
Buy Link: https://heritager.in/product/karur-naattuppura-vazhakaatriyel/