பாண்டுரங்கனும் பால் நிற வண்ணனும் – தமிழகத்தில் பலராமர் வழிபாடு

என் தந்தை, என் தாத்தா பாட்டிக்கு ஐந்தாவது குழந்தை. அவருக்கு முன்பு பிறந்த நான்கு குழந்தைகளும் பிறந்தவுடனேயே இறந்துவிட்டதால், ஐந்தாவதாகப் பிறக்கும் குழந்தை நலமாக வாழ வேண்டும் என்று வேண்டி, “பாண்டுரங்கன்” என்று பெயரிட யாரோ சொல்லியிருக்கிறார்கள். அதன்படியே பாண்டுரங்கன் என்று பெயரிடப்பட்டது.

“பாண்டு” பெயரின் தொன்மம்

“பாண்டு” என்று ஐந்தாவதாகப் பிறக்கும் குழந்தைக்குப் பெயரிடும் வழக்கம், “பஞ்ச பாண்டவர்” அல்லது “பஞ்ச பாண்டியர்” என்ற ‘ஐந்து’ என்ற எண்ணிக்கையுடன் தொடர்புடைய ஒரு தொன்மப் பெயராகும்.

“பாண்டுரங்கன்” என்பதற்கு “வெள்ளை நிறமுடையவன்” என்று பொருள். மகாபாரதத்தில் பாண்டு என்ற பெயர் சூட்டப்பட்டதற்குக் காரணம், அவர் வெளிர் நிறத்தில் பிறந்தார் என்ற புராணக்கதை கூறப்படுகிறது. பாண்டுரங்கா என்பது மகாராஷ்டிராவில் விஷ்ணுவின் ஒரு வடிவமாக வழிபடப்படும் விதோபா என்ற தொல்குடி தெய்வத்துடன் தொடர்புடையது.

கண்ணன் கருப்புதானே பிறகெப்படி வெள்ளை நிறமுடையவன் என்ற பெயர்.

கண்ணனின் முன்னவனாக கூறப்படும் பலராமனை வெள்ளை நிறமுடையவன் என்று தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன.

கடல்வளர் புரிவளை புரையும் மேனி
அடல்வெந் நாஞ்சில் பனைக்கொடி யோனும்,” புறநானூறு – 56.

கடலில் வளரும் முறுக்கிய சங்கு போன்ற வெண்ணிற மேனியும், கொல்லுதலை விரும்பும் கலப்பையும், பனைக்கொடியும் உடையவன் பலராமன் என்கிறது புறநானூற்று பாடல்.

சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகளால் “பால்நிற வண்ணன்” என்றும், சீவகசிந்தாமணியில் “பால் நிறவண்ணன் பலராமன்” என்றும் குறிப்பிடப்படுவதையும், தமிழ் இலக்கியங்கள் பலராமருக்குக் கூறும் “வெள்ளையன்” என்ற அடைமொழியையும் பார்க்கும்போது, இது பலராமர் வழிபாட்டின் ஒரு தொன்மமாக இருக்குமோ என்ற ஐயம் எழுகிறது.

பிற்கால இலக்கியங்கள் பலராமரையும் கண்ணனையும் இணைத்தே கூறுவதால், சங்க காலத்தில் தனித்து விளங்கிய மேழியுடைய பலராமர் (ஏர் கலப்பை அடையாளம்) தொன்மம், பின்னர் கண்ணனோடும் விஷ்ணு வழிபாட்டோடும் இணைந்துவிட்டதைக் காணலாம். அதுவே பாண்டுரங்கனாக மராட்டியத்திலும் காணப்படுகிறது எனலாம்.