பரங்கிப்பேட்டை துறைமுகம் ரங்கிப்பேட்டை சோழ மண்டலத்தில் அதிக அளவு கடல் வணிகம் செய்துவந்த துறைமுகமாகும். போர்த்துகீசியர் இந்த துறைமுகத்திற்கு “போர்ட்டோ நோவா’ (Portonovo) புதிய துறைமுகம் எனப் பெயரிட்டனர். இப்பெயர் பின்னர் பரங்கிப்பேட்டை என வழங்கலாயிற்று.
(ஐரோப்பியரை பரங்கிகள் என்று அழைப்பது அக்கால வழக்கம்) இத்துறைமுகத்திற்கு ‘முஹம்மது பந்தர்’ என்ற பெயரும் உண்டு. 1649-ல் முஸ்லிம்கள் இப்பகுதியின் ஆட்சியை கைப்பற்றிய பின்னர் முஹம்மது பந்தர் எனப் பெயர் பெற்றிருக்க வேண்டுமென சில ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் இதற்கு முன்பே இப்பெயர்வழங்கி வந்திருக்க வேண்டும். பந்தர் என்றால் அரபியில் துறைமுகம் என்று பொருள். இஸ்லாம் தோன்றிய காலத்திலிருந்து முஹம்மது என்ற அடை மொழியுடன் சிறப்பு பெற்ற பந்தர் ஆக விளங்கி இருக்க வேண்டும். 1970கள் வரையிலும்கூட மஹமதுபந்தர் எனும் பெயர் பேச்சிலும் எழுத்திலும் புழக்க த்தில் இருந்தது. இன்று நிக்காஹ் தஃப்தரில் (திருமண ஒப்பந்த பதிவேடு) மட்டும் இப்பெயர் வழங்கிவருகிறது. பெருமானார் அவர்களின் தோழராகக் கருதப்படும் உக்காசா(ரலி) அடக்கவிடம் இங்கு அமைத்திருப்பது நமது கருத்தை வலுப் படுத்துகிறது. போர்த்துக்கீசியர் வருகைக்குப் பின் முகம்மது பந்தர் என்றழைக்கப்படுவது பெருவழக்கிலிருந்து மறைந்து பரங்கிப்பேட்டை என அழைக்கப்படலாயிற்று.
பரங்கிப்பேட்டை கொள்ளிடம் ஆற்றின் முகத்துவாரத்தில் வெள்ளாறு கடலில் கடக்கும் இடத்தில் ஆற்றின் இடதுபக்கம் அமைந்துள்ளது. துறைமுகத்தில் கப்பல்களை நங்கூரமிட்டு நிறுத்த நல்ல நிலவியல் அமைப்பு இங்கு இருந்தது. இத்துறைமுகத்தில் எல்லா வசதிகளும் இருந்தன. கப்பல் கட்டும் தொழிலகம், கப்பல்களை பழுதுபார்க்கும் வசதி, சுப்பல் கட்டுவதற்குத் தேவையான மூலப் பொருட்கள் விற்பனை செய்யும் பண்டக சாலைகள் இருந்தன. மிக நல்ல அமைப்பு கொண்ட, பாதுகாப்பான நகர்ப்புறம் சார்ந்த (Urban Metropol) துறைமுகம் இது என ஆங்கிலேயரின் பதிவேடுகள் தெரிவிக்கின்றன. ஆனால் இத்துறைமுகத்தில் கலங்கரை விளக்கம் இல்லை. கி.பி. 19-ம் நூற்றாண்டில் போர்ட்டோ நோவோ இரும்பு உருக்காலையின் புகைபோக்கி இத்துறைமுகத்திற்கு அடையாளமாக விளங்கியது. இதற்கு முன் இருந்த ஏற்பாடுகள் குறித்த செய்திகள் கிடைக்கவில்லை.
17-நூற்றாண்டிலிருந்து பரங்கிப்பேட்டையிலிருந்து மிக அதிகமாக வணிகம் நடைபெற்று வந்தது. வடகிழக்கு பருவக்காற்று காலத்தில் இத்துறைமுகத்திலிருந்து கப்பல்கள் புறப்படும். மலாக்கா மற்றும் ஏனைய தூரகிழக்கு நாட்டுத் துறைமுகங்களுக்கு கப்பல்கள் சென்றன . துணி வகைகளே முக்கிய ஏற்றுமதிப் பொருளாக விளங்கியது.
17-ம் நூற்றாண்டில் செஞ்சி நாயக்கர்களின் ஆட்சியிலிருந்த இப்பகுதியை 1678-ல் பீஜப்பூர் சுல்தான்கள் கைப்பற்றினர். 1798-ல் ஒளரங்கஜேப் -பின் தளபதி ஜூல்பிகரிகான் இப்பகு தியைச் கைப்பற்றி ஆற்காடு சுபேதாரியுடன் இணைத்துக் கொண்டார். பரங்கிப்பேட்டை பன்னாட்டு வணிகர்களும் வணிகம் செய்து வந்த துறைமுகமாகும். நமது நாட்டு வணிகர்கள் தவிர போர்த்துக்கீசியர், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் என அனைத்து ஐரோப்பிய வணிகக் குழுமங்களும் தங்களது பண்டகசாலைகளை அமைத்து பெருமளவில் முதலீடு செய்து வாணிபத்தில் ஈடுபட்டு வந்தனர். இவர்களுடன் சேர்ந்து முஸ்லிம் வணிகர்களும் வாணிபத்தில் ஈடுபட்டு வந்தனர். இங்கு கப்பல் உரிமையாளராகவும்,கடல் வணிகத்தார்களாகவும் மரக்காயர், லெப்பை, ராவுத்தர் பலர் இருந்ததற்கான சான்றுகள் கிடைக்கின்றன. 19-ம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து ஆங்கிலேயரின் ஆட்சிப் பொறுப்பிற்கு இத்துறைமுகம் உட்பட்டது.
பரங்கிப்பேட்டை கப்பல் வணிகர்கள் தங்களது சொந்த கப்பல்களில் மலாக்கா, அச்சை, பர்மா, இலங்கை ஆகிய துறைமுகங்களுக்கும், கல்கத்தா மேற்கு கடற்கரைத் துறைமுகங்களுக்கும், அரேபிய நாட்டு துறைமுகங்களுக்கும் வாணிப நிமித்தம் சென்று வந்தனர். துணிவகைகளே முக்கிய ஏற்றுமதிப் பொருளாக இருந்தது. இப்பகுதியில் தயாரிக்கப்பட்ட துணி வகைகளுக்கு கடல் கடந்த நாடு களில் நல்ல விலை கிடைத்தது. இலங்கை, தூரகிழக்கு நாடுகளிலிருந்து மிளகு, வாசனைத் திரவியங்கள், யானைகள், குதிரைகள் ஆகியன இறக்குமதி செய்யப்பட்டன. மலாக்கா மற்றும் மலாய் நாட்டு சுல்தான்களின் ஆட்சியில் தமிழ்நாட்டு முஸ்லிம் வணிகர்களுக்கு மிகுந்த ஆதரவு கிட்டியது.
தமிழக முஸ்லிம்களின் கடல் வாணிப வரலாறு – முனைவர் ஜெ. ராஜா முஹம்மது
₹85
Buy Link: https://heritager.in/product/tamizhaga-muslimgalin-kadal-vaaniba-varalaaru/
இந்நூலினை எப்படி வாங்குவது?
1. எங்களது WhatsApp ல் 097860 68908 தொடர்பு கொள்ளலாம், அல்லது
2. எங்கள் இணைய தளத்தில் Heritager .in வாங்கலாம்.
இணையதள பக்கம் பின்னூட்டத்தில் உள்ளது.
எங்கள் முயற்சியில் எவ்வாறு நீங்களும் பங்கெடுக்கலாம்?
1. எங்கள் நூல் அறிமுக பதிவுகளைப் பகிர்ந்து பலரை சென்றடைய உதவுங்கள்.
2. உங்களுக்கு தேவையா நூல்களை எங்கள் மூலம் பெறுங்கள்.
3. வரலாற்றில் ஆர்வமுள்ள நண்பர்களுக்கு எங்களின் Heritager .in The Cultural Store பற்றி தெரிவியுங்கள்.
உங்களின் தொடர் ஆதரவுக்கும், அன்புக்கும் நன்றிகள்