கால்டுவெல் குடும்பம் ஸ்காட்லாந்திலிருந்து வட அயர்லாந்துக்குக் குடிபெயர்ந்து வந்தபின் இந்நாட்டில் உள்ள கிளாடி (Clady) என்னும் ஊரில் 1814ஆம் ஆண்டு மே திங்கள் 17ஆம் நாள் கால்டுவெல் தம்பதியருக்கு இராபர்ட் மகனாகப் பிறந்தார். இராபர்ட் கால்டுவெல் கிளாஸ்கோவில் பள்ளி, கல்லூரிப் படிப்புகளை முடித்தார். இவர் கல்லூரியில் இளங்கலை பயின்று வகுப்பில் முதல் மாணவனாக வெற்றி பெற்றார். ஐரோப்பியச் செம்மொழிகளான இலத்தீன், கிரேக்கம், ஹீப்ரூ மொழிகளையும், வேறு ஐரோப்பிய மொழிகளையும் கல்லூரியில் கற்றிருக்க வேண்டும். அவர் விருப்பப் பாடமாக ஒப்பியல் மொழியைப் பயின்றுள்ளார். கால்டுவெல் பாதிரியார் டப்ளினில் கலை, ஓவியம் போன்ற நுண்கலைகளையும் கற்றிருந்தார்.
இராபர்ட் கால்டுவெல் சமயப் பணியாளராக நியமிக்கப்பட்டுத் தமிழகம் வந்து சேர்ந்தார். இவர் கப்பல் பயணத்தின் போது சென்னை அரசு அலுவலரான சி.பி.பிரௌனுடன் நட்புக் கொண்டார். கப்பல் பயணம் தாமதமாகும் என்ற செய்தி கேட்டு அவர் பயணத்தின்போது இந்திய மொழிகளான சமஸ்கிருதம், தெலுங்கு இவ்விரண்டையும் கற்கத் தொடங்கினார். கால்டுவெல் பாதிரியார் சென்னை வந்தடைந்ததும் டாக்டர் ஜான் ஆன்டர்சன், வின்ஸ்லோ, டாக்டர் போப் ஐயர், ஹென்றி பவர் போன்ற அறிஞர்களுடன் நண்பரானார்.
1841ஆம் ஆண்டு கால்டுவெல் பாதிரியார் சென்னையிலிருந்து கால்நடையாகவே கிழக்குக் கடற்கரை வழியாகத் திருநெல்வேலி போய்ச் சேர்ந்தார். இவர் போகும் வழியில் சிதம்பரம், தஞ்சை, மேலும் இதா மாவட்டங்களிலுள்ள கோவில்களைக் கண்டு வியந்து அவற்றைப் பற்றிய ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டார். டாக்டர் கால்டுவெல்டுக்குத் துணையாக வந்த எட்வர்ட் சார்ஜன்ட் என்பவர் தமிழில் நல்ல புலமை பெற்றிருந்தார். அவர் தமிழரைப் போலவே தமிழ் மொழியை எளிதாகவும், சரளமாகவும் பேசினார். மேலும் அவர் தமிழ்க் கருத்துக்களை நன்கு அறிந்தவராகவும் இருந்தார். அவ்வறிவு கால்டுவெல்லுக்குப் பயனுள்ளதாக இருந்தது. ஏனென்றால் கால்டுவெல் அவருடன் அடிக்கடி கலந்து பேச முடிந்தது.
இராபர்ட் கால்டுவெல் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள இடையன்குடியைத் தேர்வு செய்து அதைத் தமது மறைப்பரப்பு பணித்தளத்தின் மையமாகக் கொண்டார். அவ்வூர் வறண்ட சூழலுடையதாகக் காணப்பட்டது. பாலைவனமாக இருந்த ஊரைச் சோலைவனமாக மாற்றி மக்கள் வாழ்வதற்கேற்ற இடமாக மாற்றினார். சமயப்பணியாளரான கால்டுவெல் தமக்காக ஒரு வீட்டையும் இறை வழிபாட்டுக்காக ஓர் ஆலயத்தையும் கட்டி எழுப்பினார். தேவாலயம் கலை நுணுக்கம் நிறைந்ததாக இருந்தது.மக்களின் அறிவுக் கண்களைத் திறக்க டாக்டர் கால்டுவெல் பள்ளிக்கூடங்கள் பல தொடங்கி நடத்தினார். பெண்களுக்கென்று தனியாக ஒரு பள்ளி தொடங்கப் பட்டது. டாக்டர் இராபர்ட் கால்டுவெல் 1844ஆம் ஆண்டு தமது 29 வது வயதில் இலண்டன் சமயக் குழுவைச் சார்ந்த ரெவரென்ட் சார்லஸ் மால்ட் என்பவரின் மகளான எலிசாவைத் திருமணம் செய்து கொண்டார். இவரது மனைவியார் இடையன்குடி பெண்கள் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றினார். மேலும் நோயாளிகளையும் கவனித்து வந்தார். இவர் பேச்சுத் தமிழைச் சரளமாகப் பேசினார். பிற்காலத்தில் அவருடைய கணவர் செய்த ஆராய்ச்சிக்குப் பேச்சுத் தமிழ் பற்றி அறியப் பெரிதும் துணைபுரிந்தார். இத்தம்பதியருக்கு இரண்டு மகன்களும் இரண்டு மகள்களுமாக நான்கு குழந்தைகள் பிறந்தனர். மகன்களின் பெயர்கள் இராபர்ட் அடிங்க்டன், இராபர்ட் சார்லஸ் ஆகும். மகள்களின் பெயர்கள் லூயிசா, வியாட் என்பதாகும். லூயிசா இளமையிலேயே காலமாகி விட்டாள்.1877இல் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. அது திருநெல்வேலியை மிகவும் பாதித்தது. அப்போது கால்டுவெல் ஏழை எளியவர்களுக்குப் பெரிதும் உதவினார்.
கால்டுவெல் தமது இறுதிக்காலம் நெருங்கிக் கொண்டிருந்தபோது கொடைக்கானலில் தம் மகளுடன் வாழ்ந்து வந்தார். அங்கேயே 1891ஆம் ஆண்டு இறையடி எய்தினார். அவருடைய பூதவுடலை இடையன்குடிக்குக் கொண்டு சென்று நல்லடக்கம் செய்தனர்.
முதல் முதலில் தமிழ் மொழியில் ஒப்பியலாய்வு முறையை அறிமுகப்படுத்தியவர் அறிஞர் இராபர்ட் கால்டுவெல் என்பதை நாம் அறிவோம். ஆராய்ச்சி செய்து ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்ற நூலைக் கால்டுவெல் பாதிரியார் எழுதினார். டாக்டர் கால்டுவெல் தமிழ் இலக்கண ஆய்வில் முதன்மையானவராகத் திகழ்ந்தார். அவர் தமது உயர் கல்விப் படிப்பில் ஒப்பியல் மொழி நூலைக் கற்றதன் பயன்தான். ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்ற நூலை எழுத உறுதுணையாய் இருந்துள்ளது.
தொல்காப்பியம், நன்னூல் போன்ற இலக்கணங்களைக் கற்கவும் அவைகளைப் பயன்படுத்தவும் தமிழர்களாகிய நமக்குப் புதிய வழி காட்டி ஒளியேற்றிய மேலைநாட்டு அறிஞர்களுள் டாக்டர் இராபர்ட் கால்டுவெல்லும் ஒருவராவார். இவ்வறிஞர் படைத்த ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்* தமிழர்களாகிய நம்மில் இலக்கணத்தை அணுகும் முறையில் ஒரு புதுத் திருப்பத்தை உண்டுபண்ணியது எனக் கூறலாம்.
அடுத்து, கால்டுவெல் அறிஞர் வரலாற்றுத் துறையில் மிகுந்த ஆர்வமுடையவராக இருந்தார். மார்க்கோபோலோ காயல் பற்றிக் குறிப்பிடுவதைக் கண்டு தமிழகம் முற்காலத்திலிருந்து மேலை நாட்டுடன் தொடர்பு கொண்டிருந்தது என்று அவர் கருதுகிறார். சான்றாக ஹீப்ரூ மொழியிலும், கிரேக்க மொழியிலும் தமிழ்ச் சொற்கள் இருப்பதை அவர் காட்டுகின்றார். எடுத்துக்காட்டாக: மயில் இறகைக் குறிக்கும் தமிழ்ச் சொல்லான தோகை என்பது ‘துகி’ என்று ஹீப்ரூ மொழியில் வழங்குகின்றது. ‘அரிசி’ என்ற சொல் கிரேக்க மொழியில் ‘அருசா’ என்று வழங்குகின்றது.
அகழ்வாராய்ச்சியிலும் டாக்டர் கால்டுவெல் முனைப்புடன் ஈடுபட்டிருந்தார். வரலாற்றுச் சிறப்புடைய ‘புன்னைக்காயல்’ ‘கொற்கை’ என்ற இடங்களில் அகழாய்வு செய்தார். ‘புன்னைக்காயல்’ என்னும் ஊரில் பழைய பல கட்டடங்களும், ஆலயங்களும் சிதைந்த நிலையில் காணப்படுகின்றன. பழைய காயல் என்ற இடத்தில் அவர் வரலாற்றுச் சன்றுகளை வெளிப்படுத்த நிலத்தைத் தோண்டினார்.வரலாற்று ஆராய்ச்சியில் ஆர்வமிக்கவர் இராபர்ட் கால்டுவெல், டாக்டர் கால்டுவெல் திருநெல்வேலியின் பொது வரலாறும் அரசியலும் என்னும் தலைப்பில் ஆங்கிலத்தில் ஒரு நூல் எழுதினார். (A Political and general History of Tinnelvelly 1881 Caldwell.R) இந்த நூல் வரலாற்று நூல்களின் தரத்திற்கு எடுத்துக்காட்டாக உள்ளது என்று முனைவர் பேராசிரியர் மீனாட்சி சுந்தரம் கருதுகின்றார். வரலாற்று உண்மைகளைத் திரட்டுவதற்குரிய வழிவகைகளையும் சான்றுகளின் உண்மைகளைத் தக்கவாறு அறியும் முறையும் இந்நூல் மூலம் அவர் தெளிவாக்கியுள்ளார். பெயர்கள், சொற்கள் ஆகியவற்றின் மூலத் தோற்றம், கல்வெட்டுகள், நாணயங்கள், வெளிநாட்டார் கூற்றுகள் ஆகியவை வரலாற்றின் அடிப்படை மூலங்கள் ஆகும். இடங்களின் பெயர்களைப் பகுத்தும் அவற்றின் வேர்களை ஆராய்ந்தும் கால்டுவெல் சில முடிவுகளுக்கு வருகின்றார்.
கால்டுவெல் ஏறத்தாழ நான்கு அத்தியாயங்களில் பாளையக்காரர் வரலாற்றை ஆராய்ந்துள்ளார். இந்தப் பகுதியில் இவர் கட்டப்பொம்மன் என்பது குடிப்பெயர் என்பதை எடுத்துக்காட்டி நான்கு கட்டப்பொம்மன்களைப் பற்றிச் சுட்டிக் காட்டுகின்றார்.நெல்லை மாவட்ட மக்கள் கொடும் பஞ்சத்தில் சிக்கி, பட்ட துன்பங்களையும், கடுந்துயர்களையும் கால்டுவெல் விரிவாகச் சித்திரித்துள்ளார். அக்காலத்தில் அப்பகுதியில் நிலவிய சமுதாய நிலைகளையெல்லாம் தெரிந்து கொள்ள இவரது தெளிந்த உரைநடை, தத்ரூபமான வருணனைகள் உதவுகின்றன. இலக்கிய வரலாற்றுக்கு உதவும் வகையில் திருநெல்வேலியில் வாழ்ந்த புலவர்கள், கவிஞர்கள் ஆகியோரது பெயர்ப் பட்டியலையும் கால்டுவெல் இணைத்துளளார்.
ஏறத்தாழ இதே காலக்கட்டத்தில் டாக்டர் கால்டுவெல் “மறுநெறிக் கிறித்தவர்களின் இரு பிரிவினர் திருநெல்வேலியில் ஆற்றிய பணியின் வரலாறு History of the Tinnevelly Mission of the S.P.C.K and S.P.G) என்ற வரலாற்று நூலை எழுதியுள்ளார். இந்நூல் 1881இல் அச்சடிக்கப்பட்டது.
கால்டுவெல் சமய நூல்கள் சில எழுதியுள்ளார். அவர் நற்கருணைத் தியான மாலை 1853, பரத கண்ட புராதனம், தாமரைத் தடாகம், ஞானக் கோயில் ஆகிய உரைநடை நூல்களைப் படைத்துள்ளார். அன்னார் பாடிய கிறித்தவப் பாடல்கள் இன்றும் மறுநெறிக் கிறித்தவக் கோவில்களில் பாடப்பட்டு வருகின்றன. மேலும் அவர் விவிலியத்தைத் தமிழில் மொழியாக்கம் செய்யும் குழுவில் உறுப்பினராக இருந்தார்.
அறிஞர் கால்டுவெல் எழுதியுள்ள ‘இலக்கணமும் மொழியியலும் பற்றி டாக்டர் மீனாட்சி சுந்தரம் கீழ்க்கண்டவாறு பகுப்பாய்வு செய்துள்ளார். இலக்கணமும் மொழியியலும்: இலக்கணத்தைக் கற்பதிலும், இலக்கணத்தைப் பயன்படுத்துவதிலும் நமக்குப் புதிய ஒளி காட்டிய அறிஞர் பெருமக்களுள் டாக்டர் கால்டுவெல்லும் அடங்குவார். அவரின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் நாம் இலக்கணத்தை அணுகும் முறையில் புரட்சிகரமான ஒரு புதுத் திருப்பத்தையே உண்டாக்கிவிட்டது எனலாம். கால்டுவெல் அவர்களின் நூலைக் கற்ற பிறகு நம் தமிழ் நாட்டு அறிஞர்களும் நம் இலக்கண நூல்கள் அறிவியல் அடிப்படையில் அமைந்துள்ள பாங்கினைத் தெள்ளிதின் உணர்ந்து கொள்ளத் தலைப்பட்டுள்ளனர்.
வரிவடிவ இயல் (Orthography): திராவிட மொழிகளின்
எழுத்துக்கள் வட இந்திய மொழிகளினின்று பெறப்பட்டவையா என்ற சிக்கல் தீர்க்கப்பட வேண்டிய ஒன்று என்று கால்டுவெல் கருதினார். இதுபற்றி அவர் தமது கருத்தைக் குறிப்பிடும் போது கால்டுவெல் திராவிட மொழிகளின் பழமைச் சிறப்பைப் புகழ்ந்துரைக்கிறார்.
“இக்கால வட இந்திய மொழிகளைக் காட்டிலும் தென்னிந்திய மொழிகள் இலக்கியப் பழமையுடையனவாய், சிறப்புடையவனவாய் இருப்பதால்தான் அவ்வம் மொழிகளின் எழுத்துக்களின் பழமை பற்றிய தெளிவு சிறப்பு மிக்க ஒன்றாகக் கருதப்படுகிறது.”
ஒலியியல் (Phonology): கால்டுவெல் தம்முடைய திராவிட ஒப்பிலக்கண நூலில் தமிழ் எழுத்துக்களின் தனித்தன்மைகளைப் பற்றி ஆய்வு செய்து தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
1. தமிழ் நெடுங்கணக்கில் எகர ஒகாரங்களுக்கும், ஏகார ஓகாரங்களுக்கும் தனித்தனி வரிவடிவங்கள் உள்ளன.
2. வடமொழி நெடுங்கணக்கில் காணப்படும் அரை உயிரெழுத்துக்களான ‘ri’ ‘iri’ ஆகியவை தமிழ் நெடுங்கணக்கில் காணப்பெறவில்லை. .மூக்கொலிகள் தமிழில் நன்கு பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் அவை தெளிவான திருத்தமான மூக்கொலிகளாக (மெல்லினமாக) உள்ளன.
3. தெலுங்கு மொழி நெடுங்கணக்கில் காணப்பெறும் ‘அரை அனுஸ்வத்ரா’ தமிழில் இல்லை. வல்லின ஒலிகள் மெல்லின ஒலிகளோடு சேர்ந்து வரும்போது தம் வன்மை குறைந்து காணப்படுவது தமிழில் எல்லா இடங்களிலும் இயல்பாக உள்ளது.
4. தமிழில் வெடிப்பொலிகள் (aspirates) இல்லை. வடமொழியிலிருந்து எந்த வெடிப்பொலி மெய்களையும் தமிழ் கடன் பெறவில்லை….
5. 5. வடமொழியிலுள்ள க்ஷ. ஸ. ஷ ஆகிய ஒலிகள் தமிழ் நெடுங்கணக்கில் இல்லை.
இலக்கிய வரலாறு
கால்டுவெல் தொடக்கத்தில் இத்துறையில் தம் பணியைத் தொடர்ந்தார். அவர் தமக்குக் கிடைத்த செய்திகளைக் கொண்டுஓர் இலக்கிய வரலாற்றை எழுதினார். அதில் பல்வேறு இலக்கிய நூல்களுக்கு அவை வெளியான காலங்களைக் குறிக்க முயன்றார். இவர் குறித்த இந்தக் காலங்கள் பின்னர்த் தவறானவை எனக்கண்டு அறியப் பட்டன. அவருடைய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எனும் நூலின் மூன்றாவது பதிப்பிலும் அதற்குப் பின்பு வந்த பதிப்புகளிலும் இப்பகுதிகள் கொண்ட அதிகாரம் நீக்கப்பட்டு விட்டது. ஏனென்றால் காலவரையறை தவறு என்று நிரூபிக்கப்பட்டதால்தான்.
சொல்லமைப்பு
எவ்வாறு திராவிட மொழிச் சொற்களின் வேர்ச் சொற்கள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. அவை எந்த நிலையில் தொடக்கத்தில் ஓரசைச் சொற்களாய் இருந்துள்ளன, எவ்வாறு சொல்லாக்கச் சாரியை, சந்தி, இடைநிலைகள், விகுதிகள் உருவாக்கத்தில் இடம் பெற்றன என்பன போன்ற நெறியில் சிறந்த தலைமை நிலையில் நின்று ஆய்ந்துள்ளார். தவிரவும் பதின்மூன்று சிறப்படை விகுதிகளை எடுத்துக் காட்டியுள்ளார்.
பால் பாகுபாடு
தமிழில் பெயர்ச் சொற்கள் முதலில் உயர்திணை, அஃறிணை எனப் பகுக்கப்படுகின்றன. பிறகு அவை பல்வேறு பால்களாகப் பகுக்கப்படுகின்றன. “பெயர்ச்சொற்களின் இத்தகைய பாகுபாடு இந்தோ-ஐரோப்பிய, செமெட்டிக் மொழிகளில் உள்ளது போல அவ்வளவு கற்பனையாக இல்லை. எனினும் இப்பாகுபாடு தத்வார்த்தமாக உள்ளது.” பால்பாகுபாடு பற்றிய தனித்தன்மையுடைய விதியானது “வளர்ந்து வரும் அறிவின் பயனாகவும், பண்பட்ட இலக்கண வளர்ச்சியின் தன்மையாகவும்” இருப்பதைத் தன்னாட்டு மக்களுக்கும் ஏனைய அறிஞர்களுக்கும் முதன்முதலாக வெளிப்படுத்தியவர் கால்டுவெல் ஆவார்.
வேற்றுமை
தமிழில் எண்ணற்ற ‘வேற்றுமைகள்’ உள்ளன. எட்டு வேற்றுமைகளைக் கொண்ட சமஸ்கிருதத்தைப் போன்று கூறுவது சரி இல்லை என்கிறார் கால்டுவெல். இவ்வெட்டு வேற்றுமைகளைத் தவிர
கால்டுவெல் கருத்துப்படி “எழுவாய், விளி வேற்றுமைகள் சாராத ஒரு வேற்றுமை” இருக்கிறது. மூன்றாம் வேற்றுமையை இரண்டாகப் பிரிக்கலாம் என்று அவர் கருதுகிறார். ஐந்தாவது வேற்றுமை இன்றியமையாதது அன்று என்று கருதுகிறார். மூன்றாவது, ஏழாவது வேற்றுமைகள் இந்த ஐந்தாம் வேற்றுமையின் வேலையைச் செய்கின்றன. வேற்றுமைகள் பற்றிக் கால்டுவெல் ஆழ்ந்த ஆய்வு செய்துள்ளார் என்பதை இது மெய்ப்பிக்கிறது. வேற்றுமை அமையும் முறையில் புதிய விதிகளும், வகைப்பாடுகளும் செய்தல் இன்றியமையாதது.
பெயரடைகள்
கால்டுவெல் பெயரடைகளை நன்கு ஆராய்ந்தார். தொடர்புடைய மொழிகளுடன் பெயரடைகளை அமைப்பது பற்றிய முறையைப் பகுத்தாய்ந்தார். தமிழில் பெயரடை அமைப்பது பற்றி ஒரு உறுதியான முடிவுக்கு வந்தார். தொடக்ககாலத் தமிழ் இலக்கண ஆசிரியர்கள் பெயரடைகளைச் சொல் வகையாகக் குறிக்கவில்லை. வெளிநாட்டு அறிஞர்கள் அவர்களுடைய மொழிகளில் பெயரடைகள் இருப்பதைக் கண்டு அந்த அடிப்படைகளில் தமிழில் பெயரடையாக வழங்கும் சொற்களையெல்லாம் பெயரடைகள் என்று தனியே ஒரு சொல் வகையை உருவாக்கினார். சொல்லை உருவாக்கும் உருப்புகள் தெளிவாகத் தரப்பட்டன. பெயரடைகளை எவ்வாறு உருவாக்குவது என்ற வழிமுறைகள் வெளிநாட்டு மாணவனுக்கு உதவியாகத் தரப்பட்டன. இத்தகைய வழிமுறை தமிழ் இலக்கண ஆசிரியர்களால் தெளிவாகத் தரப்படவில்லை. எனவே வெளிநாட்டு அறிஞரின் நூல் தமிழ் நாட்டு இலக்கண ஆசிரியர்களுக்குக் கூட உதவியாக அமைந்தது. இது தமிழுக்கு ஒரு கொடையாகக் கருதத் தக்கது. சிறப்பாக இலக்கணத்திற்குப் பெருங்கொடையாகும்.
எண்ணுப் பெயர்கள்
தமிழிலுள்ள எண்ணுப் பெயர்களைக் கால்டுவெல் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு அவற்றின் வேர்ச் சொற்களை அறிய முயன்றார். இவ்வாய்வு செய்கிற வகையில் தமிழ் எண்ணுப் பெயர்களைத் தமிழோடு தொடர்புடைய பிற மொழிகளிலுள்ள எண்ணுப் பெயர்களுடன் ஒப்பிட்டும், வேறுபாடு கண்டும் இம்மொழிகளில் எவ்வாறு பல பழைய வடிவங்கள் காப்பாற்றப்பட்டு வருகின்றன என்றும் காட்டுகிறார். மேலும் “அத்தகைய கூட்டுச் சொற்களில் எண்ணுப் பெயரடைகள் எவ்வாறு எண்ணுப் பெயர்களை மிகச் சுருக்கமாகவும், தூய பழைய வடிவத்திலும் வெளிப்படுத்துகின்றன” என்பதைக் காண்கின்றோம். குறுகிய, எளிய பெயரடைகளுடன் ஒன்றன்பால் விகுதி உருப்புக்களையும் இன்னோசைக் கூறுகளை அல்லது வேர்ச் சொல்லில் உள்ள உயிரெழுத்தை நீட்டுவதாலும் பல்வேறு பெயர்ச் உருவாக்கப்படுகின்றன என்று அவர் காட்டியுள்ளார். சொற்கள் எவ்வாறு
மறுபெயர்கள் அல்லது மூவிடப் பெயர்கள்: மறுபெயர்கை ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பொழுது கால்டுவெல் பல்வேது வகைப்பட்ட இடப்பெயர்களை ஆய்ந்தார். ஒவ்வொரு வகையையும் தனித்தனியே ஆராய்ந்துள்ளார். அவற்றின் மூல வடிவத்தைக் கண்டறிய அவற்றைத் தொடர்புடைய மொழிகளில் உள்ள இடப்பெயர்களுடன் ஒப்பாய்வு செய்தார். ஒவ்வொரு மூலக்கூறை (வேர்ச்சொல்லை) உலகத்திலுள்ள முக்கியமான மொழிகளுடன் எல்லாம் ஒப்பாய்வு செய்கிறார். மூவிடப் பெயர்களின் வரலாற்றை முதன் முதலாகத் கண்டறிந்ததன் மூலம் தமிழுக்குச் சிறப்பாகவும் மொழிக்கும் பொதுவாகவும் அவர் நற்பணி செய்துள்ளார். தன்மை இடப்பெயர். முன்னிலை இடப்பெயர், சுட்டு வினாப் பெயர்கள், இணைக்கும் மாற்றும் பெயர்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
வினைச் சொற்கள்
வினைச் சொற்கள் உருவாகும் கட்டமைப்பை அலசும்போது தமிழ் வினைகளின் தனி இயல்புகளை டாக்டர் கால்டுவெல் எடுத்து மொழிகின்றார். தமிழ் வினைகளின் கட்டமைப்பு, வளர்ச்சி எழுதும் நிலை கண்டுபிடிக்கப்பட்ட தொடக்கக் காலத்திலேயே கவனத்தை ஈர்த்துள்ளது. அவ்வினைகள் மிக எளிமையாகவும், தெளிவாகவும் அமைந்துள்ளபாங்கு அவரைத் தமிழ் இலக்கிய மொழிப் பண்பாட்டை மிக்க தொன்மை வாய்ந்தது என எடுத்துக் கூறச் செய்துள்ளது.
1. தன்வினை, பிறவினை
2. ஏவல் வகைகள்
3. செயப்பாட்டு வினை
4. எதிர்மறை வினை
5. குறிப்பு வினை
6. காலங்கள்
7. நிகழ்காலம்
8. இறந்த காலம்
9. எதிர்காலம்
10. தழுவியற் சொல் (பெயரெச்சம்)
11.கட்டுப்பாட்டு நிலைப்பாங்கு
12. வினைச் சொல்லின் பாங்குகள்
13. ஏவல் வினைப்பாங்கு
14. செய என் எச்சப்பாங்கு
15. வேரில் அல்லது வினையடியில் முளைத்தப் பெயர்கள்
16. வினையடிப் பெயர்கள்
17. செயற்படு வினைப் பெயர்கள்.
அருஞ்சொல் விளக்கம் காட்டும் மொழி இன உறவுகள் :
திராவிட மொழிகளைத் தனிக் குழுவாக்கி ஆய்வு செய்த முதன்மையானவருள் ஒருவரான கால்டுவெல் அந்தக் குழுவில் தமிழ் மொழிதான் தமக்கை என வெளிப்பட எடுத்து மொழிகிறார். இந்தத் திராவிட இனமொழிகளைப் பண்பட்டவை என்றும் பண்படாதவை என்றும் இரண்டாகப் பிரித்துப் பேசுகிறார். அவற்றுள் தமிழ் மொழி மிகத் தொன்மையானது மட்டுமின்றி மிகவும் பண்படுத்தப்பட்ட மொழியாகவும் விளங்கி வந்துள்ளது என்பது அவரது கணிப்பாம். அடிக்கடி பலமுறை மலையாள மொழி, தமிழ் மொழியின் மகளாகக் கருதத்தக்கது எனப் பேசுகிறார். தமிழ் மொழி வடமொழியிலிருந்து வேறுபட்டது என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாக ஆய்ந்து அலசிய முதன்மையானவர்களுள் ஒருவராய் நின்றார் கால்டுவெல்.
டாக்டர் கால்டுவெல் பாதிரியார் ஆழ்ந்த, விசாலமான அறிவுடையவர். இவர் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற பெரிய நூல் இன்றளவும் விலைமதிப்புள்ளதாக உள்ளது. இவர் ஒரு பன்மொழி அறிஞர். அவருக்கு விருப்பமான சமயப்பணியை ஆற்றியதோடல்லாமல் இலக்கிய ஆர்வமிக்க இவர் பல நூல்களை எழுதியுள்ளார். தமிழ் மொழி வரலாற்றில் அன்னாரது பெயர் என்றென்றும் நிலைத்து நிற்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
மேலைநாட்டறிஞர்களின் தமிழ்த் தொண்டு
– முனைவர் எம்.ஏ. சவேரியார்